Home>>அரசியல்>>இட ஒதுக்கீடு நெறிகளை மீறும் பாரத ஸ்டேட் வங்கி
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

இட ஒதுக்கீடு நெறிகளை மீறும் பாரத ஸ்டேட் வங்கி

தி. வேல்முருகன்இட ஒதுக்கீடு நெறிகளை மீறும் பாரத ஸ்டேட் வங்கிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தன்னுடைய கண்டதை தெரிவித்துள்ளது.


பாரத ஸ்டேட் வங்கி தொடர்பான தேர்வுகளில் தொடர்ந்து இட ஒதுக்கீடு விதிமுறைகள் மீறப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்டேட் வங்கியின் சமூக நீதிக்கு எதிரான இத்தகைய போக்கை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த தேர்வின் கட்-ஆப் மதிப்பெண் விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதில், இந்த கட்-ஆப் மதிப்பெண்களில் உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக உயர் சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்-ஆப் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டும் அதே போன்று உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு நெறிகளை மீறும் பாரத ஸ்டேட் வங்கிஅதாவது, பொதுப் பிரிவு 61.75 விழுக்காடும், தாழ்த்தப்பட்டோர் 61.75 விழுக்காடும், பிற்படுத்தப்பட்ட ஏழைகள் 61.75 விழுக்காடும், பழங்குடியினருக்கு 57.25 விழுக்காடும், உயர்சாதி ஏழைகள் 47.75 விழுக்காடும் அளிக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள இத்தகைய புள்ளி விபரங்கள் படி, அவ்வங்கி இட ஒதுக்கீடு நடைமுறைகளை மீறியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.

குறிப்பாக, பொதுப்பிரிவு, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட ஏழைகள் ஆகிய பிரிவினருக்கு, ஒரே விழுக்காட்டில் கட்-ஆப் மதிப்பெண் நிர்ணயம் செய்திருப்பது எந்த வகையில் நியாயம்?. அதை விட உயர்சாதி ஏழைகள் பிரிவினருக்கு கட் ஆஃப் மதிப்பெண் குறைவாக உள்ளது. அதாவது, 47.75 விழுக்காடு மட்டுமே.

இந்தக் கட் ஆஃப் விவரங்கள் சமுக யதார்த்தங்களோடு பொருந்துமா என எண்ணிப் பார்த்தால், பாரத ஸ்டேட் வங்கி இட ஒதுக்கீடு நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் இயல்பாகவே எழும்.

மேலும், பொதுப் பட்டியல் என்பது இடஒதுக்கீட்டுப் பிரிவினரையும் உள்ளடக்கியதுதான். அவர்கள் பொதுப் பட்டியல் கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேலாகப் பெறும்போது பொதுப் பட்டியலில் இடம் பெறுவார்களா?. அந்த நெறி கடைப்பிடிக்கப்படுமா?

பழங்குடியினரை விட, உயர்சாதி ஏழைகளுக்கு கட்-ஆப் மதிப்பெண்கள் விழுக்காட்டில் குறைக்கப்பட்டுள்ளது. இது தான் பாரத ஸ்டேட் வங்கியின் மனச்சான்றா?

கிராமம் மற்றும் நகரப்புறங்களில் வாழுகின்ற உயர்சாதி ஏழைகளை விட, மலைக்கிராமங்களில் வாழும் பழங்குடியினரின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது என பாரத ஸ்டேட் வங்கி கருதுகிறதா?

எனவே, தற்போது ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள விபரங்கள், பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்புகிறது. ஏனென்றால், ஸ்டேட் வங்கி தொடர்ந்து இட ஒதுக்கீடு நெறி முறைகளை கடைப்பிடிப்பதில்லை. இட ஒதுக்கீடு முறையில் பாரத ஸ்டேட் வங்கி குழப்பத்தை ஏற்படுத்துகிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டுகிறது.

அதனால், இவ்விவகாரம் தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி பதிலளிக்க வேண்டும். அதோடு, ஸ்டேட் வங்கியின் இட ஒதுக்கீடு மீறல் குறித்து சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் உரிய விசாரணை நடத்தி சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.


திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.

Leave a Reply