Home>>அரசியல்>>27ம் தேதி விவசாயிகள் போராட்டம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு!
திரு. தி.வேல்முருகன்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

27ம் தேதி விவசாயிகள் போராட்டம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு!

3 வேளாண் சட்டத்திற்கு எதிராக வரும் 27ம் தேதி விவசாயிகள் போராட்டம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு!

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் நாடு முழுவதும் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்தே, விடிந்தால் ஒரு சட்டம், இரவானால் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு வரப்படுகிறது. இச்சட்டங்கள் நாட்டு மக்களுக்கு நன்மை தருவதாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பதாகவே இருக்கிறது.

அதாவது, நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களை, அம்பானிக்கும், அதானிக்கும் தாரை வார்ப்பதில் தான் மோடி அரசு மும்முரமாக செயலாற்றி வருகிறது.

குறிப்பாக, நாடாளுமன்ற நடைமுறைகளை புறக்கணித்து விட்டு, எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்காமல், வல்லுனர்களை வைத்து ஆலோசிக்காமல், புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது மோடி அரசு.

விவசாயிகளுக்கு எதிரான இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 9 மாதங்களாக போராடி வருகின்றனர். விவசாயிகளுடன், ஒன்றிய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. தற்போது வரை போராட்ட களத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

ஆனாலும், இன்று வரை போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றும், அவர்களின் உணர்வுகளை மதித்தும், அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கு ஒன்றிய அரசு முன்வரவில்லை என்பது வேதனையானது.

இந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் நாடு முழுவதும் வரும் 27 ஆம் தேதி பாரத் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவை அளிப்பதோடு, போராட்டத்தில் பங்கேற்கும் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.


திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.

Leave a Reply