Home>>அரசியல்>>தமிழ் கிந்து என்றால் ஏனிந்த பதட்டம்?
ஐயா. ராமசாமி சிலை
அரசியல்இந்தியாகட்டுரைகள்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

தமிழ் கிந்து என்றால் ஏனிந்த பதட்டம்?

விசயநகர ஆட்சி காலத்தில் கோயில்களில் நுழைந்த ஆரிய பிராமணர்கள் வெள்ளையர் ஆட்சிக்குப் பிறகு இன்று வரை “நாங்களே இந்து” என்று சொல்லிக் கொண்டு பல நூறு ஆண்டுகளாக கோயில்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

பெரியாரைப் பின்பற்றும் திராவிட கூட்டமானது பிராமண ஆதிக்கம் குறித்து என்றைக்கும், எந்தக் காலத்திலும் பதட்டப் பட்டதே கிடையாது. ஏனெனில், இந்து என்பது பிராமணனை குறிக்கும், இந்து என்று சொல்லாதே.. இழிவைத் தேடிக் கொள்ளாதே… என்றுதான் இன்று வரை வெற்றுக் கூச்சல் போட்டு வருகின்றனர்.
போதாக் குறைக்கு சில முரட்டு பெரியார் பக்தர்களுக்கு தீனி போடும் வகையில் சில இந்து கோயில்களின் எதிரே கடவுள் இல்லை, கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று கல்வெட்டுகளில் எழுதி வைத்துள்ளனர். இதனால் என்ன பயன்?

கோயில்களில் ஆதிக்கம் செலுத்தும் பிராமணனைப் பார்த்து, “தமிழர்கள் யாரையும் நான் உள்ளே அனுமதிக்க மாட்டேன், என் கல்வெட்டில் கடவுள் இல்லை என்று எழுதி விட்டபடியால் தாரளமாக நீயே ஆதிக்கம் செலுத்து” என்று பிராமணருக்கு சொல்வதைப் போலத்தான் பெரியார் சிலைகள் இன்றும் தோற்றமளிக்கின்றன.
சிவ, வைணவ, குல தெய்வம் உள்ளிட்ட ஏனைய வழிபாட்டு முறைகளையும், தனதாக்கி இந்து மதத்தில் ஆதிக்கம் செலுத்தும் பிராமணர்களை வெளியேற்றுவதற்கு பெரியாரோ, அவரைப் பின்பற்றும் திராவிடவாதிகளோ இதுநாள் வரை மக்களை அணி திரட்டி, எந்த ஒரு போராட்டமும் நடத்தவில்லை.

ஆரிய இந்து பிராமணனை கோயில்களில் இருந்து வெளியேற்றுவதற்கு எந்த உத்திகளும் வகுக்காமல், நான் இந்து இல்லை, பொந்து இல்லை என்று நீண்ட காலமாகவே வாய்ச்சவடால் அடித்து வந்துள்ளனர் என்பதே உண்மை.

இந்த சூழலில் தான், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் சைவ, வைணவ உள்ளிட்ட ஏனைய ஆன்மிகச் சான்றோர்களை அழைத்து தஞ்சாவூர் பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு வேண்டும் என்ற போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

அவர் நடத்திய தமிழ் குடமுழுக்கு மாநாடு தமிழ்நாட்டில் பல அதிர்வலைகளை உண்டாக்கியது.
பெ.மணியரசன் அவர்கள் முன்னெடுத்த இந்த முயற்சிக்கு ஆன்மிகத் தமிழர்களின் ஆதரவு பெருகியது.
உயர் நீதி மன்றத்திலும் தமிழ்த்தேசியப் பேரியக்கம், நாம் தமிழர் கட்சி சார்பில் தஞ்சை பெரிய கோயிலில் தமிழ்மொழியில் குடமுழுக்கு வேண்டி வழக்கு தொடரப்பட்டது. வைதீக குடுமி பிராமணர்களும், பாரதீய சனதா கூட்டத்தினரும் ஆச்சாரம் போச்சே, அனுஷ்டானம் போச்சே என்று புலம்பினார்கள். அப்போது திராவிட கூட்டத்தினர் வாய் திறக்காமல் கள்ள மவுனம் காத்து வந்தனர்.

உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிட்டது. ஐயா பெ.மணியரசன் எடுத்த முயற்சியின் பலனாக பல கோயில்களில் சமசுகிருதத்திற்கு இணையாக தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
அடுத்த கட்டமாக, கார்பரேட் சாமியார் ஈசா யோக மையம் நடத்தும் ஜக்கி வாசுதேவ் தேவ் அவர்கள் கோயில்களில் அரசு தலையிடக் கூடாது என்று கூறியும் பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோயில்களுக்குள்ளே பரப்புரை ஆர்ப்பாட்டம் செய்து வந்தார். இதற்கு கடுமையாக முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் ஐயா மணியரசன் மட்டுமே.

உடனடியாக காலத்தின் கட்டாயம் கருதி ஆன்மீக தமிழ்ச் சான்றோர்களை கூட்டி தெய்வத் தமிழ் பேரவையை ஏற்படுத்தினார்.

கோயில்களை பிராமணர்களிடம் ஒப்படைக்கும் ஜக்கி வாசுதேவ் முயற்சிக்கு எதிராகவும் கோயில்களில் தமிழ் அர்ச்சனை வேண்டியும் அர்ச்சகர் பயிற்சி முடித்த அனைவருக்கும் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தெய்வத் தமிழ் பேரவை போராட்டம் நடத்தும் என்று பெ.மணியரசன் அறிவித்தார்.
அதுமட்டுமின்றி, ஜக்கி வாசுதேவ் ஈசா மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்தக் கோரி போராட்டம் நடத்தப் போவதாக அறிக்கை விடுத்தார். ஈசா யோக மையம் நடுங்கிப் போய் விளக்கம் அளித்தது.

பாரதீய சனதாவின் எச்.இராஜா கூட்டம் ஜக்கி வாசுதேவுக்கு ஆதரவாக களமிறங்கியது. பெ.மணியரசன் அவர்களை டேவிட் மணியரசன் என்று கிறித்துவ முத்திரை குத்தியது.

இவ்வளவு நிகழ்ச்சிகளுக்குப் பிறகும் திராவிடக் கூட்டத்தார் பெரிதாக வாய் திறக்கவில்லை. நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராசன் ஜக்கி வாசுதேவுக்கு எதிராக பேசினார் என்பது உண்மை.

ஆனால் திராவிடத் தலைமை அவரையும் வாயடைக்கச் செய்து விட்டது.

தெய்வத் தமிழ்ப் பேரவையின் போராட்ட அறிவிப்பிற்குப் பிறகு ஜக்கிவாசுதேவும் வாயே திறக்க வில்லை.
தமிழகக் கோயில்களில் தமிழ் அர்ச்சனை பரப்புரையை தீவிரமாக தற்போது தெய்வத் தமிழ்ப் பேரவை முடுக்கி விட்டுள்ளது. கோயில்களில் கட்டாயம் தமிழ் அர்ச்சனை மட்டுமே இருக்க வேண்டும் என்றும் தனிச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தியும் கூட தமிழக அரசு செவி சாய்க்க மறுத்து வருகிறது.

இந்நிலையில் தான் பெ.மணியரசன் அவர்கள் தமிழ் அர்ச்சனையை நிறைவேற்றும் பொருட்டு ஆன்மிகச் சான்றோர்களை அழைத்துக் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோயில் சென்றார். அன்றைக்குத் தான் திருச்செந்தூர் கோயிலிலும் தமிழ் அர்ச்சனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய நாளில் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பெ.மணியரசன் முன்னிலையில் தமிழ் அர்ச்சனை முழக்கம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் எதிரொலித்தது. இதைப் பாராட்டுவதற்கு ஒரு திராவிடவாதிகளுக்கும் மனமில்லை.

அவர் ஏதோ குடும்ப வேண்டுதலை நிறைவேற்ற திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றதைப் போல இழிவு செய்து எழுதி வருகின்றனர். பெரியாரின் வறட்டு நாத்திகக் கொள்கைதான் இதற்கு அடிப்படைக் காரணம்.

சமசுகிருத்திற்கும் தமிழுக்குமான போராட்டத்தில் பெ.மணியரசன் தமிழின் பக்கம் நின்று போராடி வருகிறார்.
திராவிடவாதிகளோ வறட்டு நாத்திகம் பேசி சமசுகிருதத்தின் பக்கம் நிற்கின்றனர்.

பிராமணர்களின் ஆதிக்கம் கோயில்களில் நீடிக்க வேண்டும் என்பது ஆரியத்தின் விருப்பம் மட்டுமல்ல: திராவிடத்தின் விருப்பமும் அதுதான் என்பது இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

பிராமண ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட பெ.மணியரசன் எடுத்த அடுத்தக்கட்ட அதிரடிதான் தமிழ் இந்து அடையாளம்.

இந்து மதத்தை பிராமணர்களிடம் ஒப்படைத்தது போதும், ஆரிய இந்து மதத்திலிருந்து தமிழர்களின் வழிபாட்டு மரபுகளை மீட்டெடுக்க தமிழ் இந்து என்று அடையாளப் படுத்துவோம் என்கிறார்.

தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டம் என்பது தமிழ் இந்துவை மட்டுமே உள்ளடக்கியது என்று எங்கும் கூற வில்லை. தமிழ் கிறித்துவ, தமிழ் இசுலாமிய மக்களையும் இணைத்த போராட்டம் என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

ஆனால் திராவிடவாதிகளோ வழக்கம் போல பதறிப் போய் “தமிழ் இந்து” என்று சொன்னவுடன் ஆங்காங்கு இணைய வழி மற்றும் கருத்தரங்கக் கூட்டங்களை நடத்த முற்பட்டுள்ளனர்.

மிக்க மகிழ்ச்சி. தமிழ் இந்து என்பது பெரியாரின் வறட்டு நாத்திகக் கொள்கைக்கும், இந்து மதம் குறித்து தவறாகப் பரப்பி பிராமணர்களுக்கு சேவை செய்து வந்த கொள்கைக்கும் விழுந்த பலத்த அடியாகும்.
அடிபட்டவர்கள் அலறத்தானே செய்வார்கள்? அலறட்டும்! அலறட்டும்! நன்றாக அலறட்டும்!


கட்டுரை:
கதிர் நிலவன்


கட்டுரை சேகரிப்பு:
திரு. கலைச்செல்வம் சண்முகம்,
திருவாரூர்.

Leave a Reply