பிரபல செய்தி ஊடகங்களே, நடிகர் விஜய் ரசிகர் மன்றம் 100-க்கும் மேற்பட்ட வார்டு கவுன்சிலர் பதவிகளில் வென்றிருக்கின்றது, ஒன்றிய கவுன்சிலர் பதவியையும் பிடித்துள்ளார்கள் – என வாசித்துவிட்டு, நாம் தமிழரைவிட அவர்கள் அதிகம் என அலசியிருந்தார்கள்.
மாலை சுமார் 6.30 மணிக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். (13.10.21) “நடிகர் விஜயின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வெற்றி என்பதான செய்தியை தேர்தல் ஆணையம் ஏதும் கூறவில்லை. அது உண்மையும் அல்ல. எங்கள் தரப்பில் இருந்து அப்படி ஒரு செய்தி கொடுக்கவுமில்லை” என்றதோடு தேர்தல் ஆணையத்தின் இணையதள தொடர்பையும் அனுப்பி இருந்தார். அதில் திமுக, (கூட்டணி), அதிமுக வெற்றி தகவல்கள் மட்டுமே உள்ளன.
என்றால், இல்லாத ‘விஜய் ரசிகர் மன்றம் – வெற்றி’ என்ற செய்தியை முதன்மையான செய்தி ஊடகங்கள் வலிந்து வெளியிட வேண்டிய அவசியம் என்ன? அதன் மூலம் நாம் தமிழர் கட்சி ‘குறைந்தது’ என பரப்ப வேண்டிய அவசியம் என்ன? யாருக்காக அவர்களின் செய்தி ஊடகம் வேலை செய்கின்றது? ஒரு ரசிகர் மன்ற நிர்வாகி சொல்கிறார் என்பதற்காக உறுதிப்படுத்தப்படாத தகவலை செய்தியாக்குவார்களா?
யூ டியூபர்களை விடுங்கள். உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை எப்படி வெளியிடுவது என்ற நெறிமுறைகள் தெரியாதவர்கள்-அறியாதவர்கள். ஆனால், பிரதான செய்தி ஊடகங்கள்?
இந்த பதிவை போடும் நேரம்வரை நாம் தமிழர் கட்சி (உறுப்பினர் அடையாள அட்டை உள்ளவர்கள்) 26 வார்டு கவுன்சிலர்களும், ஒரு ஊராட்சி ஒன்றி கவுன்சிலரும் என வெற்றி பெற்றுள்ளார்கள். பாட்டாளி மக்கள் கட்சியும், அ.ம.முக. – டிடிவி தினகரன் கட்சியும் அப்படி பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பணபலம் இல்லை. கிராமம் வரையிலான கட்டமைப்பு இல்லை.
76 ஆண்டுகால வளர்ச்சி + பல்லாயிரம் கோடி பணத்தோடும் உள்ள திமுக-வோடும், 49 ஆண்டுகால வளர்ச்சி + பல்லாயிரம் கோடி அதிமுக-வோடும் நாம் தமிழர் கட்சி சமம் ஆகிவிடாது என்ற புரிதலோடு செய்தியை அலசுங்கள். செய்தியாக்குங்கள்.
இவற்றை தவிர்த்துவிட்டு குறிப்பிட்ட ஒரு கட்சி, அதுவும் நாம் தமிழர் கட்சி – சீமான் படுதோல்வி என்ற கட்டமைப்பு ஏன், யாருக்காக? யூ டியூபர்களுக்கும் பெரிய செய்தி நிறுவனங்களுக்கும் என்ன வித்தியாசம்?
—
ஊடகவியலாளர் திரு.பா.ஏகலைவன்,
புரட்டாசி 27
13.10.21
—
செய்தி சேகரிப்பு:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.