Home>>ஆன்மீகம்>>கருவி வழிபாடு – பயன்படு கருவிகளுக்கு படையல்
ஆன்மீகம்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

கருவி வழிபாடு – பயன்படு கருவிகளுக்கு படையல்

மன்னார்குடியில் உள்ள மருத்துவர் ஐயா. பாரதிசெல்வன் அவர்களின் மருத்துவமனையில் இன்று (14/10/2021) கருவி வழிபாடு சிறப்பாக நடைப்பெற்றது. மேலும் கருவி வழிபாடு பற்றிய வரலாறை அறிய கீழே உள்ளவற்றை படிக்கவும்…


ஆரிய சமசுகிருதமயமாக்கப்பட்ட தமிழர் மெய்யியலை மீட்போம்!

வந்த வழி


“வாளுடை விழவு” – “வாண் மங்கல விழவு” என்பன இன்றைய விஜயதசமி எனப்படும் ஆயுதபூசையின் பண்டைய வழமுறையாகும்.

பயன்படு கருவிகளுக்குப் படையல்’ என்பது தொன்மைச் சமூகங்கள் கடைப்பிடிக்கும் ஒரு நடைமுறை. அதனுடைய தொடர்ச்சியே தற்போது ஆயுத பூசையாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட கற்கோடரிகள் போன்ற கற்கருவிகள், போருக்கு பயன்படுத்தப்பட்ட வாள், வேல், வில் போன்ற கருவிகளை வழிபடும் முறை ஆதி காலம் தொட்டே இருந்துவருகிறது.

‘கருவிகள்’ வெறும் வேட்டையாடலுக்கானது மட்டும் அல்ல. தொன்மை வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் சான்றுகளாகவும் இருக்கின்றன. கற்காலம் முதல் இக்காலம் வரை மனிதனை வாழ வைத்துக் கொண்டிருப்பது கருவிகளே. அதன் பரிணாம வளர்ச்சியே இன்று இயந்திரங்களாக மாறி இருக்கின்றன.

வில், அம்பு, வேல், அரிவாள், ஆண்டலையடுப்பு, ஈர்வாள், உடைவாள், கதிரருவாள், கதை, கவை, கல்லிடு கூடை, கணையம், கழுகுப்பொறி, கவசம், குத்துவாள், கைவாள், கொடுவாள், கோல், சிறுவாள், தகர்ப்பொறி, தொடக்கு, பிண்டிபாலம், ஞாயில், மழுவாள், விளைவிற்பொறி, அரிதூற்பொறி, இருப்பு முள், எரிசிரல், கழு, கருவிலூகம், கல்லமிழ் கவண், கற்றுப்பொறி, கழுமுள், குந்தம், கூன்வாள், கைபெயர், கோடாரி, சதக்கணி, தண்டம், தூண்டில், தோமரம், புதை, நாராசம், வஜ்ஜிரம் ஆகியவை சங்க காலத்தில் தொழிலுக்கும் போருக்கும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்.

தமிழர்களின் திணை வாழ்வில் கொற்றவை வழிபாடே முதன்மையானது. மறவர்களின் தாய் தெய்வம் கொற்றவை. புரட்டாசி மாதம், அஸ்த நட்சத்திரத்தில் இருந்து திருவோண நாள் வரை பெண் தெய்வ வழிபாடு செய்யப்படுவது வழக்கம். அதில் ஒன்பதாம் நாளன்று போரில் வெற்றிபெற உதவும் ஆயுதங்களை வைத்து வழிபடும் நடைமுறையும் உண்டு. இதற்கு ‘வாண்மங்கல விழவு’, ‘வாளுடை விழவு’ என்று பெயர். இதுபற்றி சிலப்பதிகாரத்தில்,

‘கலையமர் செல்வி கடனுணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்’

என்ற பாடலில், `கொற்றவைக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்யாவிட்டால், அவள் வில்லுக்கு வெற்றி தர மாட்டாள்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனில் ஆயுத வழிபாடு என்பது பண்டைய தமிழரின் வழிபாட்டு முறை என்பது உறுதியாகிறது.

ஆயுதங்களில் தேவதை குடியிருப்பதாகக் கருதுவது தமிழர் மரபு. இதே சிலப்பதிகாரத்தில்…
‘வில்லுக்கு முன் கொற்றவை செல்வாள்’ என்ற குறிப்பு உள்ளது.

‘கொள்ளுங் கொடியெடுத்துக் கொற்றவையுங் கொடுமரமுன் செல்லும்போலும்’.
ஆயுதங்களை மட்டுமல்லாமல் போருக்குப் பயன்படுத்தப்பட்ட யானைகள், குதிரைகள், தேர் ஆகியவற்றைச் சுத்தப்படுத்தி மங்கல விழாவில் வழிபடுவது பற்றி பெரியபுராணத்தில்

`பட்டவர்த் தனமாம் பண்பு
பெற்றவெங் களிறு கோலம்
பெருகுமா நவமி முன்னாள்
மங்கல விழவு கொண்டு
வருநதித் துறைநீ ராடி…’

என்ற பாடலில் குறிப்பு இருக்கிறது. இதன் தொடர்ச்சிதான் இன்று வாகனங்களுக்கு பூஜை செய்யும் நடைமுறையாக தொடர்ந்துவருகிறது. தொல்காப்பியத்திலும் `மானார்ச் சுட்டிய வாண்மங்கலமும்’ என்று ஆயுத வழிபாடு பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

போர் வீரர்கள் கேடயத்தையும் வாளையும் வாகைப் பூ மாலை சூடி வணங்கிய செய்தியை,
‘றொன்மிசைந் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற்
றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்
போர்படு மள்ளர் போந்தோடு தொடுத்த
கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்ப’
என்ற பதிற்றுப்பத்து பாடல் மூலம் அறிய முடிகிறது.

தமிழ் மூதாட்டி ஔவையாரும் ஆயுத வழிபாடு பற்றி அழகாகப் பாடியுள்ளார்.

பண்டையத் தமிழ் குறுநில மன்னர்களான அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் ஒருமுறை போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இதைக் கண்ட ஔவைக்கு நெஞ்சம் பதறியது. போரைத் தடுக்கும் பொருட்டு தொண்டைமானிடம் தூதுக்குச் செல்கிறார் ஔவை. அப்போது ஆயுத சாலையில் அத்தனை ஆயுதங்களுக்கும் மாலை சூடி வணங்கப்பட்டிருப்பதைக் கண்ட ஔவை,

“இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,
பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும்
உண் டாயின் பதம் கொடுத்து,
இல் லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே.”

இவ்வாறு பாடி அதியமானின் படைபலத்தைப் பற்றி மறைமுகமாக உணர்த்தியதாகவும், அதன்பின்னர் தொண்டைமான் சமாதானம் ஆனதாகவும் சொல்லப்படுகிறது.

குலதெய்வங்களாகட்டும், காவல் தெய்வங்களாகட்டும் ஆயுதங்கள் இல்லாமல் யாரும் இல்லை. தெய்வங்களுக்கு படையலிடும்போது ஆயுதங்களுக்கும் சேர்த்தே படையலிடுகிறோம். முருகப்பெருமான் கூட கையில் வேலுடன்தான் காட்சிதருகிறார். வாகனங்களும், ஆயுதங்களும் இல்லாமல் காட்சி தரும் தெய்வங்கள் அரிது. ஆண்கள் மட்டும் இன்றி பண்டைய கால பெண்களின் வீரத்தைச் சொல்லும் வகையில் பெண்கள் கத்திச் சண்டையிடும் எண்ணற்ற சிற்பங்கள் கோயில்களில் இன்றும் உள்ளன.

பண்டைய காலங்களில் ஆயுதங்களை ஏன் வழிபட்டோம் என்பது பற்றி நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் கூறுகிறார்… “கருவிகளை வழிபடுவது என்பது உலகளாவிய மரபு. படைக்கருவிகளுக்கு மட்டும் அல்ல… தொழில்கருவிகளும் இதில் அடக்கம். அதாவது ஒவ்வொரு கருவிக்குள்ளும் ஒரு அணங்கு இருக்கும் என்று நம்பப்படுகிறது. மானுடவியலில் இது அனிமிசம் (ஆன்ம வாதம்) என்று சொல்லப்படும். அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஆயுதங்களுக்குப் படையல் வைத்து வணங்கி வந்தார்கள். அதனுடைய தொடர்ச்சிதான் இன்று கருவிகளை வைத்து ஆயுதபூஜையாக வழிபடுவதும்.

இன்று துப்பாக்கிகளுக்குக்கூட பொட்டு வைத்து வணங்குகிறார்கள். என்னதான் விஞ்ஞானம் நவீன வளர்ச்சியை நோக்கிச் சென்றாலும் படையல் என்ற பண்டைய, பண்பாட்டு மரபு இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று.”

நம்மை நாம் மேம்படுத்திக்கொள்ள தொழில் கருவிகளாகவும், நம்மை தற்காத்துக்கொள்ள போர்க் கருவிகளாகவும் ஆயுதங்கள் விளங்குகின்றன.

12ஆம் நூற்றாண்டு விக்கிரம சோழன் உலாவில் ஒட்டக்கூத்தர், ஆயுதங்களில் வெற்றித் திருமகள் குடியிருப்பதாகச் சொல்கிறார்.

‘வருங் கொற்ற மார்க்கு மணங்கினுடனே மருங்கிற் றிருவுடைவாள் வாய்ப்ப’.
இப்படி ஆயுதங்களை தெய்வமாக கருதும் மரபு இருக்கும் காரணத்தினால், அவற்றிற்கு விழா எடுப்பதும், அந்த விழாவிலே அவற்றைக் கையாளும் வீரர்களைப் புகழ்ந்து பாடுவதும் மரபு.

“மாணார்ச் சுட்டிய வாள் மங்கலம் – பகைவரைக் குறித்த வாள் வென்றியாற் பசிப்பிணி தீர்த்த பேய்ச்சுற்றமும் பிறரும் வாளினை வாழ்த்தும் வாண்மங்கலமும்” நச்சினார்க்கினியர் உரை {தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியம், பகுதி 1, தமிழ் மண் பதிப்பகம் – பக்கம் – 420}

இந்த பாடலின் மையக் கருத்து, பகைவரை வாளால் வென்று, கொற்றவையின் பேய்ச் சுற்றமும் பிறரும் வாளை வாழ்த்தும் வாள்மங்கலம், அதாவது ஆயுதத்தை வாழ்த்திச் செய்யப்படும் சிறப்புச் சடங்கு. மங்கலம் என்ற சொல்லுக்கு வழிபாடு குறித்த சுபச் சடங்கு என்ற பொருளும் உண்டு. இதற்கொத்த பொருளில் சிறப்பு என்ற சொல்லை வள்ளுவரும் கையாள்கிறார்.
“சிறப்பொடு பூசனை …” {குறள் 18}.

தொல்காப்பியத்தில் பகை அரசனின் கோட்டை மதிலைக் கைப்பற்றி, அந்த இடத்தில் வாளை நீராட்டுதல் உழிஞைத் திணையில் ‘வென்ற வாளின் மண்’ (பொருளதிகாரம் 68) என்று குறிப்பிடப்படுகிறது.

‘இரு பெரு வேந்தரும் ஒருவர் ஒருவரை வென்றுழி அங்ஙனம் வென்ற வாளினைக் கொற்றவை மேல் நிறுத்தி நீராட்டல்’

இந்தப் பாடலில், வாளினைக் கொற்றவையாகப் பாவித்துப், போர்க்களத்திலேயே நீராட்டும் சடங்கு குறிப்பிடப்படுகிறது.

பகைவனின் கோட்டையைக் கைப்பற்றியவுடன், அந்த இடத்திலேயே வாளில் கொற்றவை இருப்பதாகப் பாவித்து நீராட்டுவது ‘வென்ற வாளின் மண்’.

போரில் வெற்றி பெற்ற தருணத்தில் அல்லாமல், ஒரு குறிப்பிட்ட நாளிலே போர்க் கலைப் பயிற்சி மாணவர்களால் நடத்தப்படும் ‘வாள் மங்கலம்’ மாணார்ச் சுட்டிய வாள் மங்கலம் என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும். வாள் மங்கலம் முடிந்தவுடன் நிகழ்கிற, புதிய மாணவர்களின் போர்ப் பயிற்சித் தொடக்கம், பயிற்சி பெற்ற மாணவர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வீர விளையாட்டுகள், ஆசான்மார்களின் சாகசங்கள் போன்றவற்றைப் பாடுதலும் பாடாண் திணையுடன் தொடர்புடையனவையே.

சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் மதுரையைக் கைப்பற்றி, மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் இடித்து, ஒரு மண்டபத்தைச் சோழ பாண்டியன் மண்டபம் என்று பெயர் மாற்றி, அதில் வீராபிஷேகமும், விஜயாபிஷேகமும் செய்ததாக 12 ஆம் நூற்றாண்டு மெய்க்கீர்த்தி தெரிவிக்கிறது. இது தான் தொல்காப்பியம் உழிஞைத் திணையில் குறிப்பிடுகின்ற ‘இகல் மதிற் குடுமி கொண்ட மண்ணு மங்கலம் வென்ற வாளின் மண்‘ என்பதுடன் துல்லியமாகப் பொருந்துகிறது.

விழவு என்ற சொல்லுக்கு விழா என்று பொருள். சில இடங்களில் அவா, மிதுனராசி, விளையாட்டு என்று பொருள் படும். (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி தொகுதி VI பக்கம் 3719-3720).
உ.வே.சா அவர்கள் பதிற்றுப்பத்துப் பாடல்களுக்கான அருஞ்சொல் அகராதியில் வாளுக்குப் பூமாலை, வாளுடை விழவு என்று குறிப்பிட்டுள்ளார். (பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும் , டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், பக்கம் 286).

வாளுடை விழவு குறிப்பிடப்படும் பாடலிலும் கூடக் கடவுள் வாகை என்ற வரிக்கு, வெற்றி மடந்தையாகிய கடவுள் வாழும் வாகை என்று குறிப்பிடும் பழைய உரையை மேற்கோள் காட்டுகிறார் உ.வே.சா.(பதிற்றுப்பத்து மூலமும் பழைய உறையும், முனைவர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், பக்கம் 173). வெற்றி மடந்தை என்பது பெண் போர் தெய்வத்தை குறிக்கும் சொல். அதற்குரிய நாளிலே எடுக்கப்படும் விழவு, வெற்றித் திருவிழா, வடமொழியில் விஜய தசமி.

’மா நவமியில் நகரெங்கணும், திருக்கோயில்களெங்கணும், மனைகளெங்கணும், பல வகையானும் அலங்கரித்துத் தேவி கொலுவிருக்கைச் சிறப்புக் கொண்டாடப் பெறுவது மரபு. ஆதலின் கோலம்பெருகு மாநவமி என்கிறது பெரிய புராணம்.

எனவே பெரியபுராணம் மகாநவமியை, அம்பிகைக்கு எடுக்கப்படும் திருவிழா என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் கோவில் கல்வெட்டில் இடம் பெறுகிற “பிரட்டாதி ஓணம்” என்பதும் கூட புரட்டாசியில் வரும் ஓணமாகிய விஜயதசமியாகவே இருக்க வேண்டும்.


நன்றி!
அன்பன். கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

Leave a Reply