Home>>கலை>>வினோதய சித்தம் தமிழ் திரைப்பட விமர்சனம்
கலைதிரைத்துறை

வினோதய சித்தம் தமிழ் திரைப்பட விமர்சனம்

சம்பவங்களுக்கு நாம் சாட்சியாகிறோம். ஆனால் சம்பவங்கள் நம்மால் நடத்தப்படுவதில்லை. ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த ஆண்டில் தமிழில் ஒரு தரமான படம்.

மேடை நாடகங்களை முழுநீள திரைப்படங்களாக எடுக்கும் வழக்கம் தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக இருக்கின்றது. ரத்தக்கண்ணீர், தங்கப்பதக்கம், ஞான ஒளி, நீர்க்குமிழி போன்ற சிறந்த படங்கள் அதற்கு உதாரணம். ஆனால் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் உள்ளங்கையில் கிடைக்கும் உலக திரைப்படங்கள் வசதியால் சமீப காலமாக பல இயக்குனர்கள் வேறு நாட்டு படங்களின் தாக்கத்திலேயே தொடர்ந்து படங்கள் செய்யும் ஒரு அவலநிலை ஏற்பட்டுள்ளது. கனியிருப்பது காய்கவர்ந்தற்று என்பது போல நம் மொழியிலேயே எண்ணற்ற அற்புதமான நாவல்கள், நாடகங்கள் இருக்கும்பொழுது நமக்கு ஏன் கதைப்பஞ்சம் ஏற்பட்டு வேற்று மொழி படங்களை காப்பி அடித்து படம் எடுக்கவேண்டும் என்ற கேள்வி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எழாமலில்லை.

அந்த ஆதங்கத்தை தீர்க்கும் பொருட்டு, சிரிவட்சன் எழுத்தில் கிரிதரன் அவர்கள் இயக்கத்தில் டம்மிஸ் டிராமா குழுவால் சென்னையில் நீண்ட காலமாக போடப்பட்டு வந்த “வினோதய சித்தம்” என்ற நாடகத்தை, அபிராமி ராமநாதன் அவர்கள் தயாரிப்பில் சமுத்திரகனி இயக்கத்தில் படமாக எடுத்துள்ளனர்.

சமூக்த்தில் ஒரு உயர்ந்த நிலையில் இருக்கும் தம்பி ராமையா. தான் என்ற அகங்காரம் கொண்டவர், தன் குடும்பம் மற்றும் தான் வேலை பார்க்கும் நிறுவனம் இரண்டும் தன்னால் உருவாக்கப்பட்டு தன் கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்குகிறது, தான் இல்லை என்றால் எதுவும் நடக்காது, தான் எடுக்கும் முடிவே சரியானது என்ற எண்ணம் கொண்டவர்.

அவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவருடைய மகன் தீபக் வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். தம்பி ராமையா தான் வேலை பார்க்கும் இடத்தில் பதவி உயர்வு பெறுவதில் முனைப்புடன் இருக்கிறார். தனக்கு பதவி கிடைத்துவிடும் என்ற மகிழ்ச்சியில் காரில் பயணம் செய்கிறார். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் இறந்துவிடுகிறார்.

தம்பி ராமையாவின் ஆன்மா கால தேவன் சமுத்திரக்கனியை சந்திக்கிறது. தனது இரண்டு மகளுக்கும் திருமணம் செய்து வைக்கவேண்டும். குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். நான் இல்லை என்றால் எதுவுமே நடக்காது, எனவே தன்னை விட்டுவிடுமாறு தம்பி ராமையா சமுத்திரக்கனியிடம் மன்றாடி கேட்கிறார். அதற்கு மசிந்த சமுத்திரக்கனி 90 நாட்கள் மட்டும் கால அவகாசம் தருகிறார்.

அந்த 90 நாட்களில் தம்பி ராமையா சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?
அதற்குள் அவர் கடமைகள், ஆசைப்பட்ட விடயங்களை செய்து முடித்தாரா?
90 நாட்களுக்கு பிறகு அவரது உயிர் பிரிந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

வெறும் 1.30 மணி நேர படத்தில் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்வின் அர்த்தங்கள் ஆகியவற்றை மனித மனத்தின் அடி ஆழத்தில் சென்று அலசி ஆராய்ந்துள்ளனர்.

படத்தின் உயிர் நாடியே தம்பி ராமையா தான்.படம் முழுக்க முழுக்க அவரை சுற்றியே அமைகிறது. மொத்தப்படத்தையும் தன் தோளில் தாங்கியுள்ளார். ரொம்ப சிறப்பாகவே செய்துள்ளார். வழக்கம் போல சில இடங்களில் சற்று மிகைப்படுத்தப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தினாலும் ஒட்டுமொத்தமாக மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். காலதேவனாக வரும் சமுத்திரக்கனிக்கு இந்த கதாபாத்திரம் அல்வா சாப்பிடுற மாதிரி. வேற என்ன புத்தி சொல்ற கதாபாத்திரம் தான். ஆனால் அவரின் மற்ற படங்கள் அளவுக்கு இல்லாமல் அளவோடு மிகச் சரியாக உள்ளது. அதற்கு வசனங்கள் பெரிய அளவில் உதவியுள்ளன.படத்திற்கு மிகப்பெரிய பலமே வசனங்கள்தான்.

“சம்பவங்களை நாம் பார்க்கிறோம். சம்பவங்களை நாம் கேட்கிறோம். சில சம்பவங்களுக்கு நாம் சாட்சியாக இருக்கிறோம். ஆனால் சம்பவங்கள் நம்மால் நடத்தப்படுவது இல்லை. இந்த ஒரு வசனமே படத்தின் மொத்தக் கதையும் சொல்லிவிடுகிறது”.

“திருமண முடிவை உங்க பெண் உங்களால் எடுக்கவில்லை. உங்களுக்காக எடுத்து இருக்கிறார்”.

“குடும்பத்தைப் பற்றி எல்லாம் தெரிந்தும் எதுவுமே தெரியாமல் போல இருந்திருக்கிறார் உங்கள் மனைவி. ஆனால் உங்கள் குடும்பத்தை பற்றி எதுவுமே தெரியாமல் எல்லாம் தெரிந்தது போல் நீங்கள் இருக்கிறீர்கள்”.

இது போன்ற பல சிறப்பான வசனங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த உலகம் நம்மால் இயங்கவில்லை, இந்த உலகத்தில் நாம் இயங்கி கொண்டிருக்கின்றோம். நம்மால் எதுவுமே இங்கு ஆகப்போவதில்லை நாம் நமக்காக தான் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், எப்போது வேண்டுமானாலும் இந்த உலகத்தில் நம் ஓட்டம் நின்று விடும். எனவே வாழும் வரை நாம் மகிழ்ச்சியாகவும் அடுத்தவர்களை மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொண்டு, அவரவர் ஆசைகளுக்கும் விருப்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, மற்றவர்களுடன் நாம் நல்ல மனதோடும் கருணையுடனும் வாழ்வோம், என்ற ஒரு அற்புதமான கருத்தைத் தம்பி ராமையா வழியாக பார்வையாளர்களுக்கு நகைச்சுவையாகவும் உணர்வுபூர்வமாகவும் கடத்துகிறது இந்த படம்.

வழக்கமான காதல், அதிரடி சண்டைக்காட்சிகள், குத்து பாட்டு என்று இல்லாமல் நல்ல கதையை தேர்ந்தெடுத்து இப்படத்தை கொடுத்துள்ளனர். படத்தில் அனைவருமே தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

இந்த படத்தை பார்க்கும் பொழுது நம்மை அறியாமலே சில காட்சிகளில் கண்ணீர் வந்து விடுகிறது. உளவியல் ரீதியாக நம் மனதில் சிறு மாற்றம் நிச்சயம் ஏற்படும்.

சமீபத்தில் மலையாளத்தில் குடும்ப உறவுகளின் முக்கியம், சக மனிதர்களை மதிப்பதின் அவசியம் என்பதை பற்றி home என்ற ஒரு அற்புதமான படம் வந்தது. அதுபோன்ற படங்கள் தமிழில் வர வில்லையே என்ற ஏக்கமும், ஆதங்கமும் நம்மிடையே இருந்தது. அந்த சித்தத்தை நிறைவேற்ற வந்துள்து இந்த “வினோதய சித்தம்”.

ஒரு சமூகம் பண்பட கலையின் பங்களிப்பு அளப்பரியது. அந்த பொறுப்பை ஒவ்வொரு படைப்பாளியும் உணரவேண்டும். அதை உணர்ந்த சமுத்திரகனி அவர்களுக்கு பாராட்டுக்கள்.


மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply