Home>>இலக்கியம்>>சங்ககாலப் பெண்பாற் புலவர் பெருமகள் இளவெயினிக்கு மதுரை மண்ணில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
செந்தமிழன் சீமான்
இலக்கியம்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

சங்ககாலப் பெண்பாற் புலவர் பெருமகள் இளவெயினிக்கு மதுரை மண்ணில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

சங்ககாலப் பெண்பாற் புலவர் தலைகுறிஞ்சி தந்த பெருமகள் இளவெயினிக்கு மதுரை மண்ணில் மணிமண்டபம் அமைத்துச் சிறப்பிக்க, தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!

குறிஞ்சி நிலத் தமிழ்த்தொல்குடி மரபினைச் சேர்ந்த சங்ககாலப் பெண்பாற்புலவர் குறவர்மகள் இளவெயினியின் தமிழ்த் தொண்டினை நினைவுகூரும் வகையில் யாதொரு நினைவுச் சின்னமும் தமிழ்நாட்டில் இதுவரை அமைக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. தமிழ்த்தொண்டு புரிந்த அயல்நாட்டவருக்கும் சிலை, மணிமண்டபம் உள்ளிட்டவை அமைத்து போற்றும் தமிழ்நாட்டில், தமிழ் வளர்த்த ஆதிப்பழங்குடி மண்ணின் மைந்தர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதும், அவர்களது சிறப்புமிக்கப் பணிகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டும், மறக்கடிக்கப்பட்டும் வருவது திராவிட ஆட்சியாளர்களால் நிகழ்த்தபட்ட வரலாற்றுப் பேரவலமாகும்.

ஐந்திணை நிலங்களில் முதல் திணையான குறிஞ்சி நில மக்கள் குறவர் என்றும், எயினர் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்களில் பெண்கள் குறத்தி என்றும், எயினி என்றும் அழைக்கப்பட்டனர். எயினர் குடியில் பிறந்து இளமைக்காலத்திலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்ததினால் இளவெயினி (இள+எயினி) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார் புறநானூற்று பெண்பாற்புலவர் இளவெயினி. தமது புலமைத் திறம் கொண்டு, மாற்று நாட்டு அரசனின் அவைக்களத்திற்குச் சென்று தன்னாட்டு அரசனின் பெருமையைக் கூறும் வகையில் புலவர் இளவெயினி பாடிய பாடல்கள் புறநானூறு, நற்றிணை, பரிபாடல், குறுந்தொகை, அகநானூறு முதலியவற்றில் இடம்பெற்றுள்ளது.

பழந்தமிழ் குடியான குறவர்குடி மக்கள் இன்றைக்குக் கல்வி, நிலம், வேலைவாய்ப்பு, உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, பொருளாதார அளவில் மிகவும் நலிவடைந்த நிலையில் இருந்தபோதிலும், சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் அவர்கள் எத்தகைய உயர்நிலையில் இருந்தனர் என்பதற்கும், நாகரீகத்தில் சிறந்து விளங்கினர் என்பதற்கும் இலக்கியச் சான்றாகத் திகழ்பவர் தமிழ்ப்பெரும்பாட்டி இளவெயினி. அதுமட்டுமின்றி அவர் எழுதிய புறநானூற்றுப் பாடல் மூலம் அனைத்துச் சமூகப் பெண்களும் கல்வியில் மேம்பட்டிருந்தனர் என்பதும், ஆன்றோரும், சான்றோரும் அடங்கிய எதிரி நாட்டு மன்னவன் அவை நடுவே சென்று மாற்றுக்கருத்தினைப் பதிவிடும் துணிவினைப் பெற்றிருந்தனர் என்பதும் பெண்ணடிமைத்தனமற்ற, சாதி மதப் பேதமற்ற பெருவாழ்வினைப் பண்டைய தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதற்குப் பேராவணமாகத் திகழ்கிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு இனியும், தமிழ்ப்பழங்குடி மக்களைப் புறக்கணிக்காமல் அவர்களது அருஞ்செயல்களை அங்கீகரிக்க முன்வரவேண்டும். தொல்தமிழரின் ஒட்டுமொத்த வாழ்வியலையும், தனது பாடல்கள் மூலம் உலகிற்கு உரத்துக்கூறிய சங்ககாலப் பெண்பாற்புலவர், தலைகுறிஞ்சி நிலம் தந்த பெருமகள் இளவெயினிக்கு, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் முழு உருவ வெண்கலச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்துச் சிறப்பிக்க வேண்டுமாய்த் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.


திரு. செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.

Leave a Reply