Home>>அரசியல்>>பன்னிக்குட்டிகளுக்காக சொத்து குவித்த தலைவர்களுக்கு நடுவில் இப்படியும் பெரிய மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
அரசியல்கட்டுரைகள்தமிழ்நாடு

பன்னிக்குட்டிகளுக்காக சொத்து குவித்த தலைவர்களுக்கு நடுவில் இப்படியும் பெரிய மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

இப்படியும் இருந்தார்கள்.


தோழர் ஜீவா. பொதுவுடமை கட்சியின் இலக்கணமாய் வாழ்ந்தவர். சென்னைக்கு அருகே, புறம்போக்கு இடத்தில் மக்களோடு மக்களாக குடிசைபோட்டு இருந்தவர்.

அவரது அண்ணன் மகன் ‘மோகன் காந்திராமன்’. பிரபல இயக்குனர் நீலகண்டனிடம் உதவி, துணை இயக்குனராக இருந்தார். பின்னாளில் தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தின்(பெப்சி) தலைவராகவும் இருந்தார்.

அந்த மோகன் காந்திராமனுக்கு தோழர் ஜீவா ஒரு கடிதம் எழுதினார். ‘கூரைவீடு ஒழுகிக்கொண்டிருக்கிறது. ஓலை கீற்று மாற்ற ஐம்பது ரூபாய் அனுப்பி வைக்க வேண்டும்’ என்று. சித்தப்பா ஜீவா கேட்டபடி பணத்தை அனுப்பிவைத்துவிட்டு அந்த ரசீதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்.

அடுத்தநாள் படப்பிடிப்பு குறித்து வழக்கம்போல் எம்.ஜி.ஆர். அவர்களுடன் ஒரு சந்திப்பு. இருவரும் பல விஷயங்களை பேசிக்கொண்டார்கள். அப்போது மோகன் காந்திராமனிடம் இருந்த ரசீது கண்ணில் பட்டுவிட என்ன ஏது என்கிறார். தோழர் ஜீவா எழுதிய கடிதம் பற்றியும், பணம் அனுப்பியதையும் கூறினார். எம்.ஜி.ஆருக்கு வியப்பு. அதிர்ச்சி. அப்படியே பார்த்தபடி இருக்கிறார்.

என்ன ஐயா.. ஏன் அப்படி பார்க்கிறீங்க. என்னாச்சு என்கிறார் மோகன்.

கண்கள் கலங்கியபடி ‘நேத்து குற்றாலம் போயிருந்தேன். அங்க உங்க சித்தப்பா… தோழர் ஜீவா ஒரு கூட்டத்திற்காக வந்திருந்தாரு. தேடிப்போய் பார்த்தேன். நாலுமணி நேரத்துக்கும் மேல பேசிட்டு இருந்தோம்.
ரஷ்யா கம்யூனிசம், சீன கம்யூனிசம், கியூப புரட்சி, சேகுவேராவின் போராட்டம் எல்லாம் பேசி விளக்கினாரு. இந்திய பொருளாதாரம், அரசியல் பற்றியெல்லாம் பேசினாரு. ஆனா ஒரு வார்த்தை தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தை பற்றியும் பேசலையே. குடிசைவீடு இப்படி இருக்கிங்கிறத பத்தி பேசலையே.எவ்வளவு பெரிய மகான்..’ என்று உடைந்து போனார் எம்.ஜி.ஆர்.

மாமன்னர்களின் வீழ்ச்சி, மக்களின் புரட்சி பற்றியெல்லாம் பேசிய ஜீவா தன் ஓலைக்குடிசை நிலையை பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லையேப்பா. அவ்வளவு பெரிய மனதரிடம் ‘உங்களுக்கு ஏதாவது வேண்டுமா’ என்று கேட்க எனக்கும் தயக்கம். அப்படி கேட்டு அவரை சிறுமைபடுத்திவிடக் கூடாதில்லையா.. என்றெல்லாம் புலம்பியவர் மோகன் காந்திராமனிடம்…

“இதோ பார். நாளைக்கு காலையில தோழர் வீட்டுக்கு போறம். என்ன ஏதுன்னு விவரம் சொல்லக்கூடாது. வீட்டை பாரக்குறோம். எவ்வளவு செலவாகும்னு கணக்கு பாரு. அப்படியே திரும்பிடுறோம்.

உங்க சித்தப்பாவை ஒரு 6-மாதத்திற்கு வேற வீட்டில் வாடகைக்கு இருக்கச் சொல்லு. அதற்குள்ள வீட்டை கட்டி கொடுத்துடனும். மொத்த செலவும் நான் பார்த்துகிறேன். ஆனா நம்ப ரெண்டு பேரை தவிர வேற யாருக்கும் தெரியகூடாது. தெரிஞ்சா அவ்வளவுதான் உரிச்சுடுவேன். என்ன” என்று கண்டிப்பு காட்டினார்.

அடுத்த நாள் காலை வழக்கமான எம்.ஜி.ஆருக்கான காரில் போகாமல் ஒரு வாடகை காரில் இருவரும் சென்றார்கள். ஜீவாவின் குடிசை முன்பு கார் நிற்கிறது. முதலில் உள் நுழைந்த மோகன் காந்திராமனை பார்த்த தோழர் ஜீவா ‘வாடா வா..என்ன இந்த நேரத்துக்கு வந்திருக்கே’ என்று பேசிக்கொண்டிருக்கும் போதே எம்.ஜி.ஆர். அவர்களும் உள்ளே நுழைந்தார்.

‘சும்மாதான். இந்த பக்கம் வந்தேன். அப்படியே உங்களை பார்த்துவிட்டு போகலாம்னு…” என்றபடி உட்கார்ந்தார்.

பேசியபடியே வீட்டை நோட்டமிடுகிறார். நிறைய ஓட்டைகள். அதைவிட கூடுதலான புத்தகங்கள். ஒரு மழைக்கு தாங்காது. பேசி முடித்த பிறகு கிளம்பிவிட்டார்கள்.

அடுத்த நாள் ’சித்தப்பா, வீட்ட புதுசா கட்டித்தர்றன். அதுவரை நீங்க வேற வாடக வீட்ல இருங்க. வாடகையை நான் கொடுத்துடறன். ஒரு ஆறுமாசம்தான். அதுக்குள்ள முடிச்சி கொடுத்துடுவேன்’ என்கிறார் மோகன் காந்தி ராமன்.

“ஏம்பா..நெசமாவே கட்டிக்கொடுப்பியா.. இல்ல….” என்று சிரித்து பேசியபடி சம்மதிக்கிறார். பிறகு சில லட்சங்களில்.

எம்.ஜி.ஆரின் திட்டப்படி, எம்.ஜி.ஆரின் பணத்திலேயே எல்லா வேலைகளும் கிடுகிடுவென முடிகிறது.
நாளைக்கு புதுமனை புகுவிழா. இன்று மாலையில் எம்.ஜி.ஆரிடம் சென்ற மோகன் காந்திராமன் தயங்கி நிற்கிறார். என்ன என்கிறார். ஒன்றுமில்லை… நாளைக்கு சித்தப்பா வீடு குடிபோறது. நீங்க வந்தீங்கன்னா…என்று இழுத்தார்.

முறைத்துப்பார்த்த எம்.ஜி.ஆர். “இதோ பாருடா மோகன். அந்த வீட்டுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்ல. நான் பணம் கொடுத்ததையோ, கட்டினதையோ மறந்துபோயிட்டேன். அது உங்க சித்தப்பாவுக்கு நீ கட்டிக்கொடுத்த வீடு. உன் சம்பந்தப்பட்டது. அங்க நான் வந்து தேவையில்லாம நினைக்கும்படி ஆக வேண்டாம். இந்த நிமிஷத்தோட எல்லாத்தையும் மறந்துடு. நீ போய்ட்டு வா. நல்லபடியா நடக்கட்டும்“ என்றதோடு இனி இதைபற்றி எப்போதும் யாரிடமும் பேசவே கூடாது என்று எச்சரித்தும் அனுப்பினார்.

சொன்னபடியே இந்த தகவல் யாருக்கும் தெரியாமலே இருந்தது. எம்.ஜி. ஆர் மறையும் வரை.

(ஜீவாவின் அண்ணன் மகன் மோகன் காந்தி ராமன் அவர்களுடன் ஒரு முறை பேசிக் கொண்டிருந்த போது என்னிடம் சொன்னவை. பிறகு சில நிகழ்ச்சிகளில் அதை மேலோட்டமாக சொன்னார்)

இன்றைய தலைவர்கள்………..????????


கட்டுரை:
திரு. பா.ஏகலைவன்
ஐப்பசி 5 / 22.10.21

Leave a Reply