Home>>அரசியல்>>வெளி மாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்த, உள் அனுமதி சீட்டு நடைமுறையை கொண்டு வர வேண்டும்.
திரு. தி.வேல்முருகன்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

வெளி மாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்த, உள் அனுமதி சீட்டு நடைமுறையை கொண்டு வர வேண்டும்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெளிமாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் வகையில், உள் அனுமதி சீட்டு நடைமுறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

இந்திய விடுதலைக்கு பின்னர், மொழி – இன மாநிலங்களாக இந்தியாவை பிரித்து கூட்டாட்சி நடத்தும் திட்டத்தை முன்வைக்கப்பட்டது. அதே போல் விடுதலைக்குபின் மொழி – இன மாநிலங்களை அமைத்தார்கள். அதற்குச் சட்டம் இயற்றப்பட்டது.

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் திட்டமிட்டுத் தமிழர்களைப் புறக்கணித்து, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே, 90 விழுக்காட்டிற்கு மேல் பணியில் சேர்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் மிகப்பெரும் எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர் அலை அலையாகக் வந்திறங்குகின்றனர். உடல் உழைப்புப் பணிகளிலும் இவர்கள் பெரும் எண்ணிக்கையில் அமர்ந்து விடுகின்றனர். இதன் காரணமாக, மண்ணின் மக்களின் வேலை வாய்ப்பு பறிபோகின்றது.

தொழில் – வணிகம் ஆகியவற்றிலும் வெளி மாநிலத்தவரே ஆதிக்கம் செலுத்தும் ஆபத்தான நிலை உள்ளது. இப்போக்கு, தமிழர்களின் வேலை, தொழில், வணிகம், பண்பாடு உள்ளிட்ட வாழ்வுரிமையைப் பறிக்கிறது. மொழியினத் தாயகமாக தமிழ்நாடு உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சீர்குலைக்கிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இச்சூழலில் தான், அசாம் மாநிலத்தின் பாரக் பள்ளத்தாக்கு பகுதியில் மிகை எண்ணிக்கையில் குடியேறிய வங்காளிகள், அப்பகுதியை தங்களுக்கே உரிய தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்கின்றனர். அப்பகுதியின் அலுவல் மொழியாக தங்கள் தாய்மொழியான வங்காளியை ஆக்கிவிட்டார்கள். அப்பகுதியில் அறிவிப்பு பலகைகளில் இருந்த அசாம் மொழி சொற்களை தார் பூசி அழித்துள்ளனர் வங்காளிகள்.

அசாமிடம் இருந்து தமிழ்நாடு பாடம் கற்கவில்லை என்றால், தமிழர்கள் சொந்த மாநிலத்திலேயே சிறுபான்மையாய் ஆகிவிடுவார்கள்.

அதோடு, தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கக் கூடிய இடத்திற்கு வடமாநிலத்தவர்கள் வந்து விடுவார்கள். அவர்கள் தமிழ்நாட்டு கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். பாஜக போன்ற தேசிய கட்சிகளுக்கு தான் வடமாநிலத்தவர்கள் வாக்களிப்பார்கள். அப்படி நேர்ந்து விட்டால், தமிழ்நாட்டில் உள்ள மாநில கட்சிகள் இரண்டாதர கட்சிகளாகி விடும். கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோவையில் குடியேறிய வடமாநிலத்தவர்கள், மோடிக்கு வாக்கு அளிக்கக் கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டது நமக்கு நினைவிருக்கும்.

மேலும், தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்களின் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் தமிழர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது.

எனவே, தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெளிமாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் வகையில், உள் அனுமதி சீட்டு நடைமுறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.


திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.

Leave a Reply