Home>>சுற்றுசூழல்>>தேனீயின்றி அமையாது உலகு
சுற்றுசூழல்

தேனீயின்றி அமையாது உலகு

சமூக ஊடகத்தில் மிக பிரபலமாக பகிரப்பட்டு வரும் கட்டுரையை தங்கள் பார்வைக்கு பகிர்கிறோம்.


தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். கவனம்… இனிக்கும் செய்தியல்ல!

தேனீ… உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா?

முதலில்… ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.
தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள். இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன. ஆனால், அதிர்ச்சி தரும் விசயம்… அந்தத் தேனீக்கள் இப்போது ‘அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.

ஆம்… ‘உலகை உலுக்கும் செய்தி’ என்றால், நிச்சயம் இதுதான். ஒட்டுமொத்த மக்கள் தொகையாலும் பூமிக்கு விளையாத நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும். அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது. தேனீக்களின் ‘லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்துகொண்டால்தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.

தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

“உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு. மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ. இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத்தான் மனிதர்கள் வளர்ப்பாங்க. மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும். ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும். இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள். ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை. ஆண் தேனீக்கு, ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை. மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு. உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.

தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. தேன் கூட்டை அறுங்கோண வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக் கூட வீணாக்காம முழுசாப் பயன்படுத்த முடியும். ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்தில் கூடு கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும். கூட்டின் கட்டுமானம் திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும்.

பூக்களின் மகரந்தம், மதுரம்… இரண்டும்தான் தேனீக்களின் உணவு. அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டுவிடும். அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது? குளிர் காலங்கள், பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது. தேனீக்கள் தேன் சேகரித்துப் பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம். தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில் இருக்கும் ‘தேன் பை’யில் சேகரித்துக்கொள்ளும். அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும். அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும். ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும். கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும். பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப்போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும். பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும். இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும். தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள். அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்!

இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும். இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும். அதை எந்த ஆண் தேனீ துரத்திப் பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி. புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்துவிடும். அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை அட்டகாசமானது. உணவுத் தேவை ஏற்படும்போது ‘ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக் கூட்டுக்குத் திரும்பும். கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள், தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும்.
இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம். வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும். வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம். வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்… இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும். இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.

தேன் சேகரிக்கும்போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான கூட்டணியுடன் பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம். தேனீக்களை அதிகம் காடுகளுக்குள்தான் பார்க்க முடியும். காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!”

“அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன ஆபத்து?”

“அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை. ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம்.

தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder – சுருக்கமாக… CCD. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக்கொத்தாகக் காணாமல்போய்விடும். ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும். இல்லையெனில், வேறு கூடு தேடிப் போய்விடும். பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்துபோவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது. செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும். மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை ‘டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் ‘விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத்தான் உருவாக்கும். அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும்.

இப்படி விவசாயத்தில் ‘வணிக லாபத்துக்காக’ மனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்துவருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது. அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர். வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள். பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது. இதை நாம் எப்போது உணர்வோம்?” என்று வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

‘தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். மிக கவனமாக இருப்போம்.


கட்டுரை சேகரிப்பு:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.

பட உதவி:
Boris Smokrovic on Unsplash

குறிப்பு: இந்த கட்டுரையை உருவாக்கியவரின் பெயர் யாருக்கேனும் தெரியுமெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அவரின் பெயரை இந்த கட்டுரையில் இணைக்க உதவியாக இருக்கும். நன்றி!

Leave a Reply