Home>>இந்தியா>>வேல்கம்பையும், வீச்சரிவாளையும் உயர்த்தி துணிந்து நின்ற நம் இன வீரமுன்னோர்கள் “மருதிருவர்”.
மருதிருவர்
இந்தியாதமிழ்நாடுவரலாறு

வேல்கம்பையும், வீச்சரிவாளையும் உயர்த்தி துணிந்து நின்ற நம் இன வீரமுன்னோர்கள் “மருதிருவர்”.

கப்பமும் கட்டமுடியாது, ஒரு அங்குல நிலத்தைகூட விட்டுத் தரமுடியாது, வேண்டுமென்றால் “போருக்கு வா, மோதி பார்த்துவிடலாம்” என்று ஆங்கிலேயரின் அதிநவீன ஆயுதத்துக்கு முன் வேல்கம்பையும், வீச்சரிவாளையும் உயர்த்தி துணிந்து நின்ற நம் இன வீரமுன்னோர்கள் “மருதிருவர்”.

வெறும் கைகளால் புலியை நேருக்கு நேர் நின்று கொல்லும் வலிமையுடையவர் பெரிய மருது என்றால், வளரி வீச்சிலும் வர்மக்கலையிலும் வல்லமையுடையவர் சின்னமருது.

1785 முதல் 1801 வரை அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றினைத்து வெள்ளையர்களுக்கெதிராக களமாடினர். நாட்டின் பல இனமக்களை ஒன்று திரட்டி நாட்டுபற்றுமிக்க பணிகளை முழுவதும் மேற்கொள்வதும், வெள்ளையர்களுக்கெதிராக ஒன்றுபட்டு போராட வேண்டுமென்றும் என்ற அறிக்கைகளுடைய “சம்புத்தீவு” பிரகடனத்தை திருச்சி திருவரங்கத்தில் வெளியிட்டனர் மருதிருவர்.

தூக்கிலிடும் கடைசி நிமிடம் வரை இரும்பு சங்கிலிகளால் கட்டப்பட்டு கைவிளங்கை அவிழ்க்காத பயத்தை ஆங்கிலேயர்களுக்கு உண்டாக்கிய மருதிருவரின் வீரம் இந்த மண்ணில் விதைக்கப்பட்டிருக்கிறது.

உடையத்தேவன் என்ற தன் இன துரோகியால் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட மருது சகோதரர்கள் உங்கள் கடைசி ஆசையை கேட்டபோது இன்றுவரை நாங்கள் எம்மக்களுக்கு வழங்கிய மானியங்கள் தொடரவெண்டும், தூக்கிலிட்ட பின் எங்கள் உடலை காளையார் கோவில் கோபுரத்தின் முன் புதைக்கவேண்டுமென்றனர்.

மருதிருவரின் ஒரு சொட்டு குருதி கூட வெள்ளையர்களை எதிர்க்கும் என்று பயந்து மருதிருவரின் உறவினர்கள் அனைவரையும் தூக்கிலிட்டனர். மேலும் இவர்கள் வம்சத்தை அழிக்க எண்ணி சின்ன மருதுவின் மகன் துரைசாமியையும், அவர்களின் போர்ப்படை தளபதி அமில்தார் சேக் உசேனையும் பெரும் சங்கிலிகளால் கட்டி இரும்பு குண்டுகளால் பிணைத்து இன்றைய மலேசியாவின் பினாங்கு தீவிற்கு வெள்ளையர்கள் நாடு கடத்தினர்.

அவர்களுக்கு இது எந்த இடம், இங்குள்ளவர்கள் என்ன மொழி பேசுபவர்கள் என்றே தெரியாது. உடல் முழுதும் இரும்பு சங்கில்களால் பிணைக்கப்பட்டிருப்பதால், இவர்கள் நடக்கும் போது ‘கிளிங்!’ ‘கிளிங்!’ என்று சத்தம் எழுந்தது. இவர்கள் தப்பிப் போகாமல் இருக்கவே இப்படியோரு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்குள்ளவர்கள், ‘கிளிங் கிளிங்” என்ற சத்தம் வந்ததால் இவர்களை ‘கிளிங்கர்கள்’ என்றே அழைத்தனர். இதுவே நாளடைவில் பிற மொழியைச் சேர்ந்தவர்கள் பினாங்கு சென்ற தமிழர்கள் அனைவரையும் ‘கிளிங்கர்கள்’ என்றே அழைக்கப்பட்டனர்.

களைப்புற்ற நிலையில் வந்த மருதிருவருக்கு பழைய சோற்றை தானமாக தந்த ஒரு மூதாட்டிக்கு ஒரு கிராமத்தையே தானமாக தந்தவர்கள் மருதுசகோதரர்கள்.

வானாளவ உயர்ந்த கோபுரத்தை உடைய காளையார்கோவிலை எழுப்பியதே மருதிருவரின் பெருங்கனவு.

எதிரிகளை நடுநடுங்க வைக்கும் வீரமும், கொடைத்தன்மையும் கொண்ட மருதிருவரின் புகழ் இம்மண்ணில் என்றும் நிலைக்கும்.


நா.செல்வமுருகன்,
மேலவாசல், மன்னார்குடி.


பட உதவி:
இணையம்.

Leave a Reply