மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் நரிக்குறவர் இன மக்களோடு உணவு உண்டார் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. வரவேற்கதக்கது பாராட்டுக்குரியது.
அதே நேரத்தில் இதன் பின்னனியையும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த பழங்குடியின (குறவர்) பெண் தோழர் தனக்கு கோவிலில் அன்னதானம் வழங்க மறுக்கப்பட்டதை ஒருவரிடம் பேட்டியாக கொடுத்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வைரல் ஆகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது, இந்த சமூக அநீதியை கண்டித்தனர்.
இதனை அடுத்து இன்று (29/10/2021) மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் மேற்குறிப்பிட்ட பழங்குடி பெண் உள்ளிட்ட பழங்குடியின (நரிக்குறவர்) மக்களோடு உணவு உண்டார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. இது மிகப்பெரிய ஆறுதலான செய்தியாகவும் உள்ளது. பழங்குடியினர்களோடு அமைச்சர் சாப்பிடும் ஒளிப்படங்கள் சமூக ஊடகங்களில் அதிகம் இடம்பெற்று பலராலும் பாரட்டப்பட்டு வருகிறது. மேலும் தொடக்கம் முதலே அமைச்சர் பிகே.சேகர்பாபு அவர்களின் செயல்பாடுகள் அனைவரின் கவனத்தை பெற்று வருகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
அதே நேரத்தில் பழங்குடியின பெண் பேட்டி வெளியாகி சமூக வலைதளங்களில் மிக பெரியப் பேசு பொருளாகி அமைச்சரின் கவனத்திற்கு சென்று அந்த பெண்ணுடன் சாப்பிட்டார். அமைச்சருக்கு பாராட்டு என்பதையும் தாண்டி, இந்த விவகாரம் தொடர்புடைய பழங்குடியின பெண்ணை வெளியே தள்ளிய நபர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? எந்தெந்த பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தார்கள்? குற்றவாளியை பணிநீக்கம் செய்தார்களா? என்று நடுநிலைமக்கள் முற்போக்காளர்கள் சிந்திக்க வேண்டும், வெறுமனே சேர்ந்து சாப்பிட்டதோடு அந்த விவகாரத்தை முடித்துவிடும் நிலைதான் இங்கு உள்ளது.
இந்த விவகாரம் ஓர் உதாரணம் மட்டும் தான், இது போல தான் பல விவகாரங்களில் பொதுமக்களை திசை திருப்பி விடுகிறார்கள். பொது மக்களும் பிரச்சினை முழுமையாக புரிந்து கொள்ளாமல் கடந்து விடுகிறார்கள். அல்லது ஒரு விவகாரம் பேசுகிறார்கள் அடுத்த விவகாரம் வந்தவுடன் பழசை மறந்து விடுகிறார்கள். இதன் காரணமாக அரசியல்வாதிகள் தங்களால் எந்த பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு நோக்கி செல்லாமல் மேலோட்டமாக அணுகி மக்களை அடுத்தடுத்த விவகாரங்களுக்குள் திசை திருப்பி விடுகிறார். இது போல திசை திருப்பும் வேலைகளை பெரிய பெரிய ஊடகங்கள் கனகச்சிதமாக செய்து வருகிறது.
வாட்சப் மற்றும் முகநூல் ஊடகங்களின் அழுத்ததால் சில விவகாரங்கள் தீவிரம் அடைகிறது. இல்லையேல் பல விவகாரங்கள் மழுங்கடிக்கபட்டு இருக்கும்.
ஏழைகளுக்கு கை கொடுப்பது, வயதான தாய்மர்களை கட்டிபிடித்து புகைபடம், குடிசை வீட்டிற்கு நுழைவது போன்ற எம்ஜிஆர் காலத்து யுக்திகளை எல்லாம் இனி அவ்வளவாக எடுபடாது. மக்கள் விழிப்படைந்து வருகிறார்கள்.
அரசியல்வாதிகள் இதை உணரவில்லை என்றால் மக்கள் வரும் காலங்களில் உணர்த்துவார்கள்.
—
கட்டுரை:
தோழர். கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.