Home>>கலை>>ஜெய் பீம் – திரைப்பட விமர்சனம்
கலைசெய்திகள்திரைத்துறை

ஜெய் பீம் – திரைப்பட விமர்சனம்

நீதிமன்றத்தில் நீதி கிடைக்கவில்லை என்றால் வீதியில் இறங்கி நின்று போராடுவேன்.

ஏனெனில் என்னை பொறுத்தவரை சட்டம் நீதிக்கான ஆயுதம் மட்டும் தான், அது மட்டுமே தீர்வல்ல என்று சமூகத்தில் உள்ள விளிம்பு நிலை மனிதர்களுக்காக அவர்களின் உரிமையை காக்க தன் வாழ்நாள் முழுவதும் வழக்காடி கொண்டு இருக்கும் நீதி நாயகம் வழக்கறிஞர் திரு. சந்துரு அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 1995ல் கடலூரில் ராஜாக்கண்ணு என்ற இருளர் சமூகத்தவரை சேர்ந்தவருக்கு எதிராக நடந்த ஒரு அரச பயங்கரவாதத்தையும், அதற்கு எதிராக உண்மையான நீதி கிடைக்க சந்துரு அவர்கள் நடத்திய சட்டப்போராட்டத்தையும் நம் கண் முன்னே மிக அற்புதமான ஒரு படைப்பாக கொண்டு வந்துள்ளது இந்த ஜெய் பீம்.

படத்தின் விமர்சனத்திற்கு போகும்முன் நீதி நாயகம் வழக்கறிஞர் திரு.சந்துரு அவர்களை என் இரு கரம் கூப்பி வணங்குகிறேன். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் என்ற ஒரு புதினத்தில் இந்த மண்ணில் யாருக்குமே தெரியாமல் வாழ்ந்த மிக அற்புதமான மனிதர்களை பற்றி ஒவ்வொரு கதைகளிலும் பதிவு செய்திருப்பார். அதை படிக்கும் போது இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இங்கே வாழ்ந்து உள்ளார்களா என அவர்களைப் பற்றிய பதிவுகள் நம்மை ஆச்சர்யப்படுத்தும்.

அதேபோல நீதி நாயகம் சந்துரு அவர்களைப்பற்றி இந்த படம் மூலமாக அறிந்து கொண்டபோது இவரைப்போல உயரிய மனிதர்கள் இந்த மண்ணில் வாழ்ந்துள்ளனரா என்ற கேள்வி எழாமல் இல்லை. இவரைப்போன்ற வெகுஜன மக்களுக்கு தெரியாமல் பல உயரிய மனிதர்கள் இந்த மண்ணிலேயே வாழ்ந்து இருக்கிறார்கள் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. மிகக்குறுகிய காலத்திலேயே 96000 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளார். ஒடுக்கப்பட்டவர்களின் மனித உரிமைக்காக போராடிய எந்த ஒரு வழக்கிற்கும் ஒரு ரூபாய் கூட பணம் இவர் பெற்றதில்லை என்ற தகவலை கேள்விப்படும் போது ஒரு வழக்கறிஞரின் கடமை என்ன, வழக்கறிஞரால் சமூகத்தில் என்னென்ன மாற்றங்களை கொண்டுவர முடியும் என்பது நிரூபணமாகிறது.

சமூகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட எது நடந்தாலும் கேட்க நாதியற்ற இருளர் சமூகத்திற்கு ஒரு குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய இவரின் சட்டப்போராட்டமே பெரிதும் உதவியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் நீதிக்கான ஒரு பெரும் புரட்சி ஏற்படுத்திய வழக்கை தான் படமாக எடுத்துள்ளனர். ஏறக்குறைய 13 வருடங்களாக நடந்த அந்த வழக்கை சினிமாவிற்கு ஏற்ற வகையில் குறுகிய காலத்தில் வழக்கு முடிந்தது போல எடுத்துள்ளனர்.

ஒரு நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இருளர் சமூகத்தைச் சேர்ந்த மூவர் காவல் நிலையத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க மிகக் கொடூரமாக சித்திரவதை செய்யப்படுகிறார்கள். அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வதாக இல்லை. ஒருகட்டத்தில் அந்த மூவரும் காவல் நிலையத்தில் இருந்து தப்பி விட்டார்கள் என்று காவல் நிலையம் சார்பாக புகார் சொல்லப் படுகிறது. இதன் உண்மைத்தன்மை என்ன? உண்மையிலேயே அவர்கள் காவல் நிலையத்தில் இருந்து தப்பினார்களா?? உண்மையிலேயே அவர்கள்தான் நகையைத் திருடினார்களா?? என்பதை காண்பர் மனதை கலங்க வைக்கும் ஒரு அற்புதமான காவியமாக ஞானவேல் அவர்கள் இயக்கத்தில் இந்த படம் வந்துள்ளது.

இருளர் சமூக வாழ்வியல் பற்றி சில படங்கள் வந்திருந்தாலும் மிக தத்ரூபமாக இந்தப் படத்தில்தான் பதிவு செய்துள்ளனர் எனலாம். அந்த அளவுக்கு கதாபாத்திர தேர்வு மிகச் சிறப்பாக உள்ளது. குறிப்பாக ராசாக்கண்ணு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் மணி கண்டன். இவர் ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அதேபோலத்தான் அவர் மனைவி செங்கேணியாக வருபவரும். இதுபோல அந்த சமூகத்தை சார்ந்தவர்களாக நடித்திருக்கும் அனைவருமே மிகப் பொருத்தமாக நடித்துள்ளனர்.

இருளர் சமூக வாழ்வியலில் பாம்புக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு ,எலிக்கறி உண்ணும் பழக்கம், பாம்புக்கடிக்கு வைத்தியம் என வெகு அழகாக அவர்களின் வாழ்வியல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களைப் போன்றவர்கள் இந்த சமூகத்தில் வாழ்கிறார்கள் என்பதற்கு எந்த அத்தாட்சியும் அவர்களிடம் கிடையாது. ஓட்டுரிமை, குடும்ப அட்டை என அடிப்படை ஆவணங்கள் எதுவும் இருப்பதில்லை. அதை எல்லாம் அவர்களுக்கு வழங்கவும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் விரும்புவதில்லை.

ஓட்டுக்காக கண்டசாதிக்காரன் காலில் வந்து விழுகிறோம், உங்ககிட்டயும் வந்து விழனுமா?என்ற உள்ளூர் அரசியல்வாதியின் அந்த கேள்வியே அதற்கான காரணத்தையும் நமக்கு சொல்கிறது.

ஒரு காலத்தில் வில் வீரர்களான இருளர்களை எப்படி இந்த சமூகம் அவர்களை கொத்தடிமைகளாக வைத்துள்ளது என்ற நல்ல வரலாற்று தகவலையும், வீரப்பனை பிடிக்க போய் அங்குள்ள மலை வாழ் மக்களிடம் அதிரடிப்படை செய்த அக்கிரமங்களையும் துணிந்து வசனங்கள் மூலம் பதிவு செய்துள்ளது சிறப்பு.

அதே போல, சேட்டு ஒருவரை பார்த்து தமிழில் பேசுடா என்று கொடுக்கின்ற அரைச்சல் சப்பானிக்கு கொடுத்ததை விட மிகமிக வலிமையானது. காவல்நிலையத்தில் பெண்கள் உள்ளிட்ட பலரை சித்திரவதை செய்யும் காட்சிகள் நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியாத அளவிற்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் என்பதை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது.

இட ஒதுக்கீடு தேவையா இல்லையா என்ற சர்ச்சையான கருத்துக்கள் போய்க் கொண்டிருக்கும் இந்த வேளையில் இவர்களைப் போன்ற சமூகம் இன்னும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதாக இல்லையா என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது. பழங்குடி மக்களின் கல்வியை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும் என்பதை இந்த படம் வலியுறுத்துகிறது. இறுதிக்காட்சியில் சூர்யாவிற்கு முன்பாக அந்த இருளர் சமூக குழந்தை சூர்யா போலவே கால் மேல் கால் போட்டுக்கொண்டு செய்தித்தாள் படிக்கும் காட்சி. பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு தேவை என்ற வாதம் இவர்களை போன்ற சமூகத்தினருக்கு பொருந்துமா என்ற கேள்வியும் எழுகிறது.

நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன போதும் இதுபோன்ற முன்னேற்றம் அடையாத சமூகங்கள் பலவும், அவற்றுக்கு எதிரான இந்த அரசு பயங்கரவாதங்களும் தொடர்ந்த வண்ணம் இருப்பது கவலைக்குரிய விடயம். குற்றச்செயல்களை பெருமைப்படுத்தும் வன்கொடுமைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த சமூகம் என்றால் அவர்கள் குற்றவாளிகள் தான் என்ற பொதுமைப்படுத்தல் ஆகப்பெரிய பயங்கரவாதமாக உள்ளது என்பதை படத்தின் ஆரம்ப காட்சிகளிலேயே இயக்குனர் உணர்த்துகிறார். நிலுவையில் உள்ள வழக்குகளை முடிப்பதற்கு இருளர், குறவர், ஒட்டர் என்று சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ளவர்களை பலிகடாவாக ஆக்கும் அந்த காட்சி ஒன்றே படம் சொல்லும் கருத்தின் வலியை நமக்குக்கடத்துகிறது. அந்தக் காட்சியிலேயே இங்கே எது இங்கே ஒடுக்கப்பட்ட சாதியாக உள்ளது என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.

பொதுவாக இந்த மாதிரிப் படங்கள் ஒரு ஆவணப்படம் பார்ப்பதைப் போன்ற உணர்வு தான் நமக்கு கிடைக்கும். நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்காது என்ற எண்ணம்தான் பலரின் மனதில் ஓடும். ஆனால் அப்படி இல்லாமல் படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை மிக விறுவிறுப்பாகவே செல்கிறது. படத்தில் பல காட்சிகள் எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு சிறப்பாக உள்ளன. உண்மையான மாஸ் படம் என்று சொல்லும் அளவிற்கு பல காட்சிகள் உள்ளன.

பொதுவாக இப்படி வரும் படங்கள் படம் முழுக்கவே எதிர்மறையான காட்சிகளாகவே இருக்கும்.ஒருகட்டத்தில் நமக்கே தாங்க முடியாத பெரும் வேதனையாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் அப்படி இல்லாமல் சூர்யா வரும் காட்சிகள் எல்லாமே நேர்மறை எண்ணத்தை நமக்கு கொடுக்கின்றன. அடுத்து என்ன அடுத்து என்ன என்ற திரைக்கதையின் பரபரப்பை நமக்கு வழங்குகின்றது. இந்தப் படம் இப்படித்தான் முடியும் என்று நமக்கு தெரிந்திருந்தாலும் இறுதிவரை நம்மை இருக்கை நுனியில் கட்டிப்போடுகிறது படத்தின் அற்புதமான திரைக்கதை.

பல படங்களில் இந்த வழக்காடு மன்ற காட்சிகள் வந்திருந்தாலும் அதேபோல் இந்த படத்திலும் பெருமளவு அதே காட்சிகள் இருந்தாலும் மிக விறுவிறுப்பாகவும் எதார்த்தமாகவும் உள்ளது. படம் தீபாவளிக்கு திரையரங்கில் வராதது பெரும் வருத்தமே. இந்த தீபாவளிக்கு ஒவ்வொருவரும் திரையரங்கில் பார்த்து ரசித்து கொண்டாடப்பட வேண்டிய ஒரு மன நிறைவான படைப்பு இந்த ஜெய் பீம்.

திரு.சந்துரு அவர்களுக்கு அடுத்த படியா நாம் நினைவுகூற வேண்டிய ஒருவர் சூர்யா.

மதிக்கப்பட வேண்டிய கலைஞன். தமிழ் சினிமாவின் உண்மையான நாயகன். 100 கோடி, 80 கோடி ன்னு படம் ஓடுதோ இல்லையோ சம்பளத்தை மட்டும் வாங்கிகிட்டு பெரும் கோடீஸ்வரர்களாக கொழித்துக் கொண்டு, தயாரிப்பாளர்களை காலி செய்வதோடு மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் ஒரு கேடுகெட்ட குப்பையை கொடுக்கும் வழக்கமான முன்னணி தமிழ் திரைப்பட நடிகர்கள் மத்தியில், தனக்கு இருக்கும் சந்தை மதிப்பிற்கு 30 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றுக்கொண்டு வர படங்களை தேர்வு செய்து நடிக்க முடிமிதக்கும், தனக்கான சந்தை மதிப்பை உணர்ந்தும் இது போன்ற படங்களைத் தயாரித்தத்தோடு மட்டுமல்லாமல் அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று பெரிய லாபத்தை எதிர்பார்க்காமல் ஒரு அற்புதமான கலைப்படைப்பை வழங்கியது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

வெறுமனே இருளர் சமூக பிரச்சினையை பற்றி படம் எடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் நல்வாழ்விற்காக இருளர் சமூக அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நிதியும் கொடுத்துள்ளார். ஒவ்வொரு முன்னணி நடிகரும் பார்த்து திருந்த வேண்டிய ஒரு முன்னுதாரணமாக சூர்யா விளங்குகிறார்.

சமூகத்திற்கு பயன்படும் மனிதனும், சமூகத்திற்கு பயன்படும் படைப்பை வழங்கும் கலைஞனும் தான் உண்மையான உச்ச நட்சத்திரங்கள்.

கொஞ்சம் நாட்களுக்கு முன் சூர்யா Super Star என்று போட்டுக் கொண்டதாக ஒரு சர்ச்சை ஓடியது. அதை சூர்யா மறுத்திருந்தார். ஆனால் அவர் இப்போது பெருமிதத்துடன் உச்ச நட்சத்திரம் பட்டத்தை சூடிக்கொள்ளலாம். தகுதியற்ற வேற்று மொழி நடிகர் எல்லாம் அந்தப் பட்டத்திற்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள் (என்னமோ இவனுங்க ஆக்சுபோர்டு பல்கலைகழகத்தில் படிச்சு வாங்குனது மாதிரி).

படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கனகச்சிதமாக நடித்திருக்கிறார் சூர்யா. எங்குமே அவருடைய கதாநாயக பிம்பத்திற்கு ஏற்றவாறு காட்சி அமைப்புகள் மாற்றப்படவில்லை. நீதிமன்றத்தில் வாதாடக்கூடாதுன்னு வில்லன் பத்து ரவுடிகளை வைத்து அடிக்க போய், அவங்களை சூர்யா போட்டு பொளக்கும் அபத்தமான காட்சிகளும், காதல் பாடல் பாட அவசியம் ஒரு கதாநாயகி வேண்டும் என்ற கதைக்கு தேவையில்லாத எந்த காட்சிகளும் இல்லாமல் தமிழில் ஒரு முன்னணி கதாநாயகன் நடிப்பது நல்ல விடயம்.

மொத்தத்தில் ஜெய் பீம் அனைவரும் அவசியம் காண வேண்டிய ஒரு அற்புதமான திரைக்காவியம்.

ஜெய் பீம்-ஜெய் சந்துரு.


மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply