Home>>இந்தியா>>விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திரு. தி.வேல்முருகன்
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சம்பா சாகுபடியில் தீவிரம் காட்டி வரும் விவசாயிகளுக்கு, குறைந்த விலையில் உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, சம்பா நெற்பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். விவசாயிகளில் பெரும்பாலோனோர், தங்களது நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பா சாகுபடிக்கு, யூரியா, டிஏபி, பொட்டாஷ் உள்ளிட்ட அனைத்து வகை உரங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1,43,500 மெட்ரிக் டன் உரத்தில், இதுவரை 77,863 மெட்ரிக் டன் உரம் மட்டுமே உர உற்பத்தி நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் உரம் வழங்கல் முறை வீழ்ச்சி அடைந்து வருவதால், தமிழ்நாட்டில் உரத்தட்டுப்பாடும், விலையேற்றமும் அதிகரித்துள்ளது.

மேலும், உரத்திற்கான மூலப்பொருட்களின் விலை அதிகரித்து விட்ட நிலையில், அதற்கேற்றவாறு ஒன்றிய அரசு மானியத்தை உயர்த்தாமல் இருப்பதும், உரத்தட்டுப்பாட்டிற்கும், விலையேற்றத்திற்கும் முக்கிய காரணமாகும்.

குறிப்பாக, கடந்த 2020-21 ஆம் ஆண்டில் உரத்திற்கான மானியம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 947 கோடி ரூபாயை பட்ஜெட்டில் ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், 2021 – 2022 ஆம் ஆண்டில், 79 ஆயிரத்து 530 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த அளவீட்டின் படி, உரமானியத்தில் ரூ.54 ஆயிரத்து 417 கோடி ரூபாயை ஒன்றிய அரசு குறைத்துள்ளது.

இந்த உரத்திற்கான மானியம் குறைக்கப்பட்டுள்ளதை காரணம் காட்டியும், மூலப்பொருட்களின் விலை உயர்வை காட்டியும், உரத்தின் விலையை கண்மூடித்தனமாக அதிகரித்துள்ளது உர நிறுவனங்கள். ஒன்றிய அரசின் உர மானியக் குறைப்பும், உர நிறுவனங்களின் விலையேற்றமும், விவசாய வளர்ச்சியும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

உரத்தட்டுப்பாடும், விலையேற்றமும் விவசாயிகளை மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பாதிக்கும் என்பதை கூட கருத்தில் கொள்ளாமல், உரத்திற்கான மானியத்தை ஒன்றிய அரசு குறைத்துள்ளது.

எனவே, விவசாயிகளின் நலன் கருதி, அவர்களுக்கு குறைந்த விலையில் உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிச்சந்தைகளில் உர பதுக்கல் மற்றும் விற்பனையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு தேவையான உரங்களை பெறவும், உரத்திற்கான மானிய அளவை உயர்த்தவும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.


திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.

Leave a Reply