Home>>சுற்றுசூழல்>>5 வருட தொடர் பணிக்கும் பங்களிப்பிற்கும், இந்த வருடம் ஏரி முழுவதுமாக நீர் நிரம்பி மகிழ்வை தந்துள்ளது!
நம்மாழ்வார் ஏரி - மன்னார்குடி
சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

5 வருட தொடர் பணிக்கும் பங்களிப்பிற்கும், இந்த வருடம் ஏரி முழுவதுமாக நீர் நிரம்பி மகிழ்வை தந்துள்ளது!

2015 ஆம் ஆண்டு மத்தியில் மன்னை தொடர்வண்டி நிலையத்தில் மண்டியிருந்த கருவையை அழிக்க ஆரம்பித்தது தான் ஓர் தொடக்கப்புள்ளி. அந்த பணியினால் மன்னையிலும் சரி, பிற ஊர்களிலும் சரி பலரது கவனத்தையும் ஊக்கத்தையும் பெற்றோம். அந்த கருவை ஒழிப்பினூடாக கருவையினால் ஏற்படும் பாதிப்புகள், அதனை முழுவதுமாக ஒழிக்க தொடர்ந்து செய்யவேண்டிய அழித்தொழிப்பு பணிகள் என அனுபவங்களையும் படிப்பினைகளையும் பெற்றோம். அதை மக்களுக்கு கொண்டு செல்ல, கருவையினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் அதன் விவரம் அடங்கிய துண்டு சீட்டு விநியோகம் செய்தோம்.

தொடர்ந்து இந்த கருவை ஒழிப்பு பணியின் வழி ஏற்றப்பட்ட உந்துதலால் “பூமியை காப்போம்” என்ற சூழலியல் கருத்தரங்கை நடத்தினோம். இந்த கருத்தரங்கின் வழி மேலும் பலிரடம் நன்மதிப்பையும், பல சூழலியல் படிப்பினைகளையும் பெற்று கொண்டோம்.

அக்காலக்கட்டத்தில் 2016 சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருந்தது, அதன் பொருட்டு “நமது வாக்கு! நமது உரிமை” என்ற தேர்தல் விழிப்புணர்வு மற்றும் வாக்களிப்பதன் உள்ளார்ந்த அர்த்தம் மற்றும் தேவைகளை விளக்கும் விதமான கருத்தரங்கை மன்னையில் நடத்தினோம். இந்த நிகழ்வின் காரணமாக மன்னையில் உள்ள பல இளைஞர்கள் எங்களுடன் இணைந்து செயல்பட முன்வந்தனர். அது எங்களுக்கு மேலும் ஊக்கத்தையும் வலுவையும் ஏற்படுத்தியது.

அடுத்ததாக நல்லதொரு களப்பணியை செய்யவேண்டும் என குழுவில் முடிவாகி, அதற்காக மன்னையில் செய்ய வேண்டிய பல வகையான பணிகளை பட்டியலிட்டு இறுதியாக, ஜி. ஆர். தோப்பு பகுதியில் பெண்கள் பள்ளி மற்றும் விடுதியை ஒட்டி காடு போல மண்டியிருந்த கருவையை அழிக்கலாம் என ஏகமனதாக முடிவாகி, அதற்கான திட்டமிடல், நிதி தேவை போன்றவற்றை தீர்மானித்தோம். தோராயமாக 1.5 லட்சம் என தீர்மானித்து, அதிகபட்சமாக 2 லட்சம் ஆகலாம் என வரையறுத்து அந்த பணியில் இறங்கினோம். இந்த நிதி எங்களது உறுப்பினர்களின் மாதாந்திர சந்தா மற்றும் உறுப்பினர்களின் சிறப்பு நிதி கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

2016 மத்தியில் பணியை ஆரம்பித்தோம். ஆரம்பித்த சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது, இது புகைவண்டி நிலையித்தில் செய்தது போன்ற பணியல்ல, அதைவிட கடினமான பணி என்று.

ஒருபக்கம் மண்ணிண் கடுமையினால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளான மண்வெட்டும் இயந்திரங்கள், மண்ணின் கடுமையினால் ஏற்படும் காலதாமதம், காடாக பல வருடம் மண்டியிரிந்ததால் அதலிருந்து அவ்வபொழுது வெளிவரும் பாம்பு போன்ற விலங்குகளின் அச்சுறுத்தல், இன்னொரு பக்கம் திட்டமிட்டதை விட கூடுதலான வேலைநாட்கள் மற்றும் செலவுகள் என அனைத்து வகையிலும் சவாலாக இருந்தது. ஆனால் அனைவரும் ஒருமித்த முடிவுடன் இருந்து பணியை முடித்தே ஆவது என தீர்மானித்து செயல்பட்டோம்.

அவ்வாறு ஓரளவு கருவையை அழித்ததும் தான் அதனுள் ஓர் ஏரி இருப்பதும் அது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் வரை மன்னையின் குடிநீர் வழங்கும் இடமாக இருந்ததும் தெரியவந்தது. இந்த விசயம் எங்களுக்கு மேலும் ஆர்வத்தை ஏற்படுத்த, அந்த ஏரியை சீர்செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் மேலோங்கி விட்டது. அந்த பணியை நம்மால் செய்ய இயலுமா, அந்தளவு தொடர் களிப்பணி செய்ய இயலுமா, அதற்கு தேவையான நிதி சேகரிக்க இயலுமா, இதனால் ஏதேனும் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதா என அடுக்கடுக்கான கேள்விகள் ஒருபக்கம், எதுவாகினும் அந்த ஏரியை சீர்செய்திடுவோம் என்ற அனைவரின் உந்துதல் இன்னொரு புறமாக இருந்தது.

இதனூடாகவே கருவை ஒழிப்பு பணி தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது, அதே நேரத்தில் அப்பகுதி மக்கள் மற்றும் ஊரில் உள்ள வயதானவர்கள் என பலதரப்பட்டோரிடமும் அந்த ஏரியை பற்றிய விவரங்களை தொடர்ந்து கேட்டு சேகரித்து வந்தோம். அதன் வழியே பல விசயங்கள் அந்த ஏரியை பற்றி அறிந்து கொள்ளவும், அந்த ஏரியினால் பல நன்மைகள் அப்பகுதிக்கு உண்டு என்பதையும் அறிய முடிந்தது. இவை அந்த ஏரியை சீர் செய்திடலாம் என்ற ஒருமித்த முடிவை எங்களுக்குள் ஏற்படுத்தயது.

அந்த ஏரி பணியை செய்ய வேண்டுமானால் அதற்கு எங்கள் முன்னால் 2 மிகப்பெரிய விசயங்கள் இருந்தன. அதற்கு நாங்கள் தயாராக இருந்தால் தான் பணியை செய்ய இயலும் எனும் சூழல். ஒன்று நிதி அந்த பணிக்கு தோராயமாக 5 லட்சம் ஆகும், கூடினால் 1 லட்சம் கூட என அதிகபட்சமாக 6 லட்சம் கணக்கிட்டோம். எப்பொழுதுமே குழு உறுப்பினர்கள் தரும் நிதியை வைத்து தான் அனைத்து பணிகளையும் செய்துள்ளோம், வெளியிலிருந்து வாங்குவதில்லை என்ற விதியை ஆரம்பத்திலிருந்து கடைபிடித்து வருகிறோம். ஆனால் அவ்வளவு நிதியை அந்த சூழலில் உறுப்பினர்களால் மட்டும் ஏற்பாடு செய்ய இயலாது எனும் நிலை இருந்தது.

ஆதலால் உறுப்பினர்களுக்கு நேரடியாக தெரிந்தவர்களிடம் மட்டும் பணிக்கான விவரங்களை சொல்லி சிறப்பு நிதி கேட்கலாம் அதுவும் தேவைப்பட்டால் மட்டுமே தான் எனவும் பொதுவாக யாரிடமும் கேட்க வேண்டாம் எனவும் ஏகமனதாக முடிவு செய்து முதற்கட்டமாக குழுவில் உள்ளவர்களிடம் இயன்ற நிதியை பெற்று பணியை ஆரம்பித்து செய்வது, வேறு வழியில்லை எனில் அந்த சூழலில் உறுப்பினர்கள் அவர்களுக்கு நன்கு அறிந்தவர்களிடம் நிதி கேட்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறே குழுவினர் இரண்டுகட்ட சிறப்பு நிதியும் அது போதவில்லையாதலால் அவரவர் அவரவர்கள் அறிந்தவர்களிடம் சிறப்பு நிதியையும் பெற்று தந்தனர்.

அடுத்ததாக, களப்பணி செய்யும் பொழுது அமைப்பினர் தொடர்ந்து பணி நடக்கும் இடத்தில் இருக்க வேண்டியது.

இது மிக சிரமமான காரியம். ஏனெனில் உறுப்பினர்கள் அனைவரும் வேலைபார்த்தோ, தனியாக தொழில்பார்த்தோ, படித்து கொண்டோ இருந்தனர். அவர்களால் பல மாதங்கள் தினமும் காலையிலருந்து மாலை வரை வந்து பணி நடக்கும் இடத்தில் இருக்க இயலாது. இதற்கு முன் நாங்கள் செய்த பணி அனைத்தும் வார இறுதி நாட்களில் மட்டுமே. ஆனால் இந்த பணி என்பது அவ்வாறு அல்ல. தொடர்ந்து மாதக்கணக்கில் அங்கு இருக்க வேண்டிய பணி. இந்த சூழலை அனைவரும் புரிந்து கொண்டு, ஊரில் உள்ள, விடுமுறைக்கா ஊருக்கு சென்றவர்கள் என அனைவரும் தங்களால் இயன்றளவு தங்களது தனிப்பட்ட வேலையை பார்த்துக்கொண்டே இங்கும் வந்து நின்று பணியை பார்வையிட்டு கொண்டனர்.

விடுமுறை எடுத்து பணியை பார்த்து கொண்டனர். உணவு இடைவேலையில் வந்து பணியை பார்த்து கொண்டனர். கிடைக்கும் சில மணி துளிகளானாலும் அனைவரும் ஏரிபகுதிக்கு வந்து பார்த்துக்கொண்டனர். இதில் முக்கியமான விசயம் என்னவெனில் இந்த நாள் இந்த தேதி இந்த தேரத்திற்கு இவர் இருக்க வேண்டும் என எந்தவொரு அட்டவணையும் இல்லாமல் அனைவரும் அவரவரால் இயன்ற நேரத்தை இந்த பணிக்கு வழங்கி களத்தில் இருந்தது தான். பெருவாரியானவர்கள் இரவிற்கு மட்டும் தான் வீட்டிற்கு சென்றனர். அனைவரும் இணங்கி இதனை செய்தனர்.

இவ்விரண்டு விசயத்தையும் தாண்டி எந்த பணியானாலும் இயல்பாக இருக்கும் புரவய அழுத்தங்களும், பிரச்சனைகளும் இருந்து கொண்டே தான் இருந்தது. அவையனைத்தையும் இணக்கமாகவும், சரியான முறையிலும் அணுகி பணிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பார்த்துகொண்டோம்.

சுமார் 10 ஏக்கர் பரப்பளவுள்ள அந்த முழு பகுதியில் அந்த ஏரி மட்டும் சுமார் 4.5 ஏக்கர். மீதமுள்ள பெருவாரியான இடங்களில் தான் கருவை மண்டிகிடந்து அதனை அழித்தும் விட்டோம். இறுதியாக ஏரிபணி செய்ய வேண்டும். ஏரி பகுதியிலுள்ள கருவையை அழிக்க வேண்டும், ஏரியை ஆழப்படுத்த வேண்டும், மூன்று பக்க கரையை பலப்படுத்த வேண்டும், நான்காம் பக்கத்தில் முழுவதுமாக கரையை ஏற்படுத்த வேண்டும் எனும் சூழல். அந்த பணியையும் ஆரம்பித்து பல மாதங்கள், பலரின் களப்பணிகள், பல லட்சம் நிதி என அனைத்தின் துணையோடும் ஏரியை ஆழப்படுத்தி, நான்கு பக்க கரையையும் சீராக்கி, ஏற்கனவே கருவை அஇழந்த இடங்களின் மேல் மண் கொட்டி செப்பணிட்டு, அந்த ஏரியை மீட்டோம். இதற்கு சுமார் 5 மாத காலமும், மொத்தமாக சுமார் 12 லட்சமும் செலவாகியது.

அதை தொடர்ந்து அப்பொழுதே, அந்த ஏரியின் நடுவில் மழைநீர் சேகரிப்பு வழிமுறையின் படி உறைகளை இறக்கி அந்த பணியையும் மழைக்கு முன் செய்தாகிவிட்டது. ஆனால் எதிர்பார்த்தளவு மழையில்லை. மழைகாலம் முடிந்ததும் மீண்டும் கருவை வளர தொடங்கியது. அதனை மீண்டும் அகற்றினோம். அதேபோல் அருகிலுள்ள குளம் நிரம்பினால் அதிலிருந்த ஏரிக்கு நீர் வர ஏதுவாக அந்த குளத்திற்கும் ஏரிக்கும் இடையே ஓர் குழாய் அமைப்பை ஏற்படுத்தி அடுத்த வருட மழையை எதிர்பார்த்து காத்திருந்தோம். அடுத்த வருடமும் மழை வந்து சென்றது ஆனால் ஏரி நிரம்பவில்லை. பிறகு மீண்டும் சுத்தம் செய்தல், கருவை அழித்தல், செப்பனிடுதல் என மூன்றாம் வருடமும் மழைக்கு முன் தொடர் பணிகள்.

அதேபோல் முருகன் கோவிலிருந்நு வரும் வாய்க்காலை சுத்தம் செய்து, அதன் வழியே நீர் வந்து ஏரியின் அருகிலுள்ள குளம் வந்து ஏரிக்கி நீர் வர ஏதுவாக சீர்படுத்தினோம். மூன்றாம் வருட மழையும் வந்தது. அந்த முறை கொஞ்சம் நீர் ஏரியில் நின்றது. ஆனால் நிரம்பவில்லை. மீண்டும் அதே வாய்க்கால் சுத்தப்படுத்துதல், கருவை அழித்தல் என அடுத்தடுத்த வருடமும் தொடர் பணிகள் செய்தும் மழை காலத்தில் ஏரி நிரம்பவில்லை.

நாங்களும் எங்களது முயற்சியை விடாமல் செய்து கொண்டே வந்தோம் இறுதியாக 5ஆம் ஆண்டில் இந்த வருட தற்போதைய மழையில் ஏரி நிரம்பியுள்ளது. ஐந்து வருடமாக அனைவரின் தொடர் பணிக்கும் பங்களிப்பிற்கும், இந்த வருடம் ஏரி முழுவதுமாக நீர் நிரம்பி எங்களுக்குள் மகிழ்வையும் உற்சாகத்தையும் தந்துள்ளது!!! அந்த மகிழ்வையும் உற்சாகத்தையும் தங்களுக்கும் கடத்துகிறோம்!!

நீர் நிம்பிவிட்டது, பணி முடிந்துவிட்டதா என்றால் இல்லை. இன்னும் அதனை ஆழப்படுத்த வேண்டும். கரைகளை உயர்த்த வேண்டும், வாய்க்கால்களை முழுமையாக்க வேண்டும். உடனடி பணியாக இவற்றை செய்ய வேண்டும். அதேபோல் நீண்டகால திட்டமாக அதனை ஓர் குறுங்காட்டு வனமாகவும், சுற்றுலா தளமாகவும், மன்னை மக்கள் தங்கள் நேரத்தை செலவிடகூடிய பயனுள்ள இடமாகவும் மாற்ற திட்டமிட்டு செய்ய வேண்டும். அப்பொழுது தான் முழுமையடையும் இப்பணி.

நம்மால் புதிதாக ஓர் நீர்நிலையை இக்காலத்தில் ஏற்படுத்த இயலுமா என தெரியவில்லை, ஆனால் இருக்கும் நீர்நிலைகளை சீர்படுத்தலாம். அதை தான் நாங்கள் செய்துள்ளோம். நீங்களும் செய்ய முன்வாருங்கள் என அனைவருக்கும் வேண்டுகோள் வைக்கிறோம்!!

இந்த பணிக்காக பல வகைகளில் எங்களுக்கு பங்களித்த, ஒத்துழைப்பு வழங்கிய, செயலாற்றிய, அறிவுரை வழங்கிய என அனைவருக்கும், பணியின் பொழுது குழுவில் இருந்து தற்பொழுது தூரம் நின்று ஆதரவாக இருந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.!!

இறுதியாக குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!!

ஏரி – நம்மாழ்வார் ஏரி (ஜி. ஆர். தோப்பு)
ஊர் – மன்னார்குடி
நாங்கள்- மன்னையின் மைந்தர்கள்


கட்டுரை:
திரு. இராஜராஜன்,
மன்னார்குடி.

Leave a Reply