சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி என்பது அவர்களின் சொந்த பணத்தை கொண்டு செலவிடுவதல்ல மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான். இந்த தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படுகிறது.
இது முறையாக கையாளபடுகிறதா? தேவையான பணிகளுக்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யபடுகிறதா? என்றால் பெரும்பாலும் இல்லை. இதற்கு முக்கிய காரணம் சட்டமன்ற உறுப்பினர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ, தங்களின் பெயரை பெரிதாக பொறித்து அந்த பகுதிக்கு போவோர், வருவோர் கண்ணில் பட வேண்டும். அது அவர்களுக்கு பெரும் விளம்பரமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில், அது போன்ற பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்குகின்றனர். இதனால் பல இடங்களில் தேவை இல்லாத பணிகளுக்கு, இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
எங்கேனும் வடிகாலுக்கு, இந்த தொகுதி நிதி ஒதுக்கீடு செய்யபடுகிறதா?
பெரும்பாலும் இருக்காது, நான் எதிர்கட்சி என்பதால் ஆளுங்கட்சி தொகுதி எதுவும் செய்வதில்லை என கூறும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்த நிதியை ஒழுங்காக பயனுள்ள பணிகளுக்கு பயன்படுத்துகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை.
இவற்றை ஒழுங்குபடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பெயரைப் போட்டு தொகுதி மேம்பாட்டு நிதி என்று விளம்பரம் செய்து கொள்வதை முதலில் தடைசெய்ய வேண்டும்.
வேண்டும் என்றால் அந்த ஆண்டை போட்டு அந்த தொகுதியின் பெயரை குறித்து சட்டமன்ற உறுப்பினர் அல்லது
பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்யப்பட்ட பணி என்று பொறித்து கொள்ளலாம்.
யாருடைய தனிபட்ட பெயரையும் அதில் பதிவு செய்ய கூடாது.
இப்படி இருந்தால் விளம்பரம் செய்ய முடியாத தேவையான பணிகளுக்கும், நிதி செல்லும் இல்லை எனில் ஊருக்கு ஊரு பயணிகள் நிழற்குடை, சுடுகாடு இவற்றுக்கு மட்டுமே இந்த நிதி பயன்படும்.
அந்த கட்டிடங்களும் தரமாக இருக்கிறதா என்றால் பல இடங்களில் இல்லை என்பதே உண்மை. பயணிகள் நிழற்குடை, சுடுகாடு போன்றவற்றை அந்தந்த ஊராட்சி மன்றமே செய்து கொள்ளும், இது ஒன்றும் பெரிய பணியல்ல. இவற்றால் தொகுதி என்ன மேம்பாடு அடைந்து விட போகிறது.
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் விளம்பர ஆசையே. இந்த நிதி தேவை இல்லாத பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பயனற்று போகிறது.
ஒன்றிய, மாநில அரசுகள் இதற்கு சரியான விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
—
திரு. A. ஆனந்த ராஜ்,
முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்,
மன்னார்குடி.