Home>>கல்வி>>மாணவி பொன்தாரணி மரணத்திற்கு நீதி கேட்டு ஓசூரில் அன்று ஆர்ப்பாட்டம்.
கல்விசெய்திகள்தமிழ்நாடு

மாணவி பொன்தாரணி மரணத்திற்கு நீதி கேட்டு ஓசூரில் அன்று ஆர்ப்பாட்டம்.

தமிழக மாணவர் இயக்கம் ஒருங்கிணைப்பில் ஓசூரில், கோவை மாணவி பொன்தாரணி மரணத்திற்கு நீதி கேட்டு 14.11.2021 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல சமூக இயக்கங்களை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தினார்கள். தமிழ் மைந்தர் மன்றமும் இதில் பங்கேற்றது.

இந்துத்துவ அமைப்புகள், சார்பாளர்கள் நடத்தும் பள்ளிகளில் பாலியல் சீண்டல், வல்லுறவு தொடர்பான குற்றங்கள் அடுத்தடுத்து வெளிவருகின்றன. கோவை சின்மயா பள்ளியில் பயின்ற மாணவியின் மீதான பாலியல் வன்கொடுமைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.

ஆசிரியரின் பாலியல் அத்துமீறலுக்கு பள்ளி தலைமை நிர்வாகியிடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காமல் குற்றத்தை மூடி மறைத்தது பெரும் குற்றம்.முதல் முறை என்றால் கண்டிப்பாக நிர்வாகத்திற்கு கடும் அதிர்ச்சியாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தார்மீகக் கோபமும் வந்திருக்கும். இது ஒரு தொடர் குற்றம் போல் தெரிகிறது. அதனால் தான் குற்றத்தை மூடிமறைக்க நிர்வாக தலைமை முயன்றிருக்கிறது.
இப்பொழுது குற்றம் புரிந்த ஆசிரியரும் பள்ளி தலைமை நிர்வாகியும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு இந்த குற்ற வழக்கில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். அப்பள்ளியில் பயிலும் பிற மாணவிகளிடம் கமுக்கமாக, தனித்தனியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு முன்னர் குற்றங்கள் ஏதும் நடைபெற்றிருந்தால் அச்சமில்லாமல் அவற்றை வெளிப்படுத்த வேண்டும் என்ற உணர்வை மாணவிகளிடம் ஏற்படுத்த வேண்டும். அவர்களைப் பற்றிய தகவல்கள் பொது நிலையில் வெளிப்படுத்தப் போவதில்லை என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

இக்குற்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்து குறுகிய காலத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட வேண்டும். இதற்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். குற்றம் இழைக்கப்பட்டது உறுதியானால் குற்றவாளிகளின் கல்வித் தகுதியை ரத்து செய்துவிட வேண்டும். அவர்களின் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தேவைப்பட்டால் இதற்கான சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் பாலியல் குற்றங்கள் குறித்த புகார் அளிப்பதற்கு பொது எண் வழங்கப்பட வேண்டும். புகார் அளிக்கும் மாணவ, மாணவியர் பெயர்கள் கமுக்கமாக பாதுகாக்கப்பட வேண்டும்.


செய்தி உதவி:
திரு. நடவரசன்.

Leave a Reply