Home>>செய்திகள்>>நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30,000/- நிவாரணம் வழங்கிடுக!
செய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30,000/- நிவாரணம் வழங்கிடுக!

“நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30,000/- நிவாரணம் வழங்கிடுக” என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வலியுறுத்த்தியுள்ளார்கள்.


தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் நெல் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் நீரில் மூழ்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக காவிரிப்படுகை மாவட்டங்களில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பல ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்து முளைத்துவிட்டன. இதனால் விவசாயிகள் கைமுதலை இழந்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமங்கள், சாலைகள், தெருக்கள் தொடர்பின்றி தனித் தீவுகளாக மாறியுள்ளன. ரப்பர், வாழை, நெல் உள்ளிட்ட அனைத்து சாகுபடிகளும் நீரில் மூழ்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்னமும் வயல்களில் தண்ணீர் வடியவில்லை. நட்ட பயிர்கள் முழுவதும் அழுகி இனி இந்த ஆண்டு விவசாயமே செய்ய முடியாது என்ற நிலையில் ஏராளமான விவசாயிகள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதுவரை பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த எந்த அதிகாரியும் வரவில்லை என விவசாயிகள் கூறுவது வேதனை தரக்கூடியதாகும். மேலும் சில நாட்கள் மழை நீடித்தால் இந்த ஆண்டு நெல் உற்பத்தியில் கடுமையான சரிவு ஏற்படும் என்ற நிலை உள்ளது.

வெள்ளச் சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரடியாக சென்று பார்வையிடுவதும், பயிர்சேத விவரங்களை அறிவதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. ஐ. பெரியசாமி அவர்கள் தலைமையில் குழு ஒன்றினை அமைத்து உத்தரவிட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.
மழை வெள்ளச் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

அந்த அடிப்படையில் கண்ணீரில் தவித்து வரும் விவசாயிகளின் துயரை துடைக்க நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000/- நஷ்ட ஈடு வழங்கிட வேண்டுமெனவும், மற்ற வேளாண் பயிர்களுக்கு பாதிப்புக்கேற்ற வகையில் நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும், வீடுகளில் தண்ணீர் புகுந்து உடமைகளை இழந்துள்ள குடும்பங்களுக்கும், அன்றாட பணி செய்து குடும்பத்தை நடத்தும் கூலி தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்கள், விவசாய கூலி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்டு மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5,000/- நிவாரணம் வழங்க வேண்டுமெனவும், சேதமடைந்த வீடுகளை புனரமைக்கவும், உயிரிழந்த கால்நடைகளுக்கு தக்க நிவாரணம் அளிக்க வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

தமிழகத்தில் கடந்த 10 தினங்களாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாகுபடிகளும், கட்டுமானங்களும் மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் ஒன்றிய அரசின் சார்பில் பாரமுகமாக இருந்து வருவதோடு, பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்வதற்கான காலக் கெடுவை நீடித்து தர வேண்டும் என்ற கோரிக்கையினை இப்போது வரை ஒன்றிய அரசு பரிசீலிக்க மறுத்து வருகிறது.

காலக்கெடு நீடிக்கப்படாத சூழ்நிலையில் பாதிக்கப்படும் விவசாயிகள் பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் பலன் பெறும் வாய்ப்பினை இழந்து பெரும் நஷ்டத்திற்கும், நாசத்திற்கும் உள்ளாவார்கள் என்பதை சுட்டிக்காட்டுவதோடு, உடனடியாக தமிழகத்திற்கு உரிய வெள்ள நிவாரண நிதி வழங்குவதுடன், பயிர் காப்பீடு திட்டத்திற்கான காலக் கெடுவினை 15 நாட்களாவது நீட்டித்து தர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.


திரு. கே. பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

Leave a Reply