Home>>அரசியல்>>டெல்கி உழவர்கள் போராட்டம் 359வது நாள் செய்தி குறிப்பு
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

டெல்கி உழவர்கள் போராட்டம் 359வது நாள் செய்தி குறிப்பு

ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
செய்தி வெளியீடு
359வது நாள், 20 நவம்பர் 2021.

•• விவசாயிகள் இயக்கம் தனது அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் இந்திய அரசு நிறைவேற்றும்வரை தனது போராட்டத்தைத் தொடரவுள்ளது.

சம்யுக்த் கிசான் மோர்ச்சாவால் அறிவிக்கப்பட்ட போராட்டத் திட்டங்களை, முழு வீச்சுடன் தொடருமாறு அனைத்து விவசாயிகளுக்கும் எஸ்.கே.எம். வேண்டுகோள் – நவம்பர் 22ஆம் தேதி நடைபெறவிருக்கும் லக்னோ விவசாயிகளின் மகாபஞ்சாயத்தை மாபெரும் வெற்றியடைய செய்ய விவசாயிகளுக்கு எஸ்.கே.எம். வேண்டுகோள் விடுத்துள்ளது – நவம்பர் 26ஆம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க விவசாயிகள் போராட்டத்தின் முதலாம் ஆண்டு விழாவில், அனைத்து போராட்டக் களங்களிலும் விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு எஸ்.கே.எம். அழைப்பு விடுத்துள்ளது – சுங்கச் சாவடிகள் தொடர்ந்து கட்டணமின்றி செயல்படும் – நவம்பர் 29ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி நடைபெறும் !

•• 3 கறுப்பு வேளாண் சட்டங்களை இரத்து செய்வதற்கான தனது அரசாங்கத்தின் முடிவை இந்தியப் பிரதமர் அறிவித்தாலும், விவசாயிகளின் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து வாய் திறக்கவில்லை – இதுவரை விவசாயிகள் இயக்கத்தில் 670க்கும் மேற்பட்டோர் தியாகிகளானதை இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை – அரியானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, சண்டிகர், மத்தியப் பிரதேசம் மற்றும் பிற இடங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது நூற்றுக்கணக்கான பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன !

நேற்று ஹன்சியில் விவசாயிகளுக்கு வெற்றி!

சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைமையிலான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றக் கோரி, தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அறிவிக்கப்பட்ட அனைத்து போராட்டத் திட்டங்களுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. முன்னதாக திட்டமிட்டபடி நவம்பர் 22 அன்று லக்னோ விவசாயிகள் மகாபஞ்சாயத்தில் விவசாயிகள் அதிக அளவில் கலந்துகொள்ளுமாறு எஸ்.கே.எம். கேட்டுக் கொண்டுள்ளது.

நவம்பர் 26 அன்று பல்வேறு வட இந்திய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பல்வேறு போராட்டக் களங்களை வந்தடையுமாறும் எஸ்.கே.எம். வேண்டுகோள் விடுத்துள்ளது. அன்றுடன் டெல்லியின் எல்லைகளில் நடைபெற்று வரும் தொடர்ச்சியான அமைதியான போராட்டங்கள் ஓர் ஆண்டை நிறைவு செய்கிறது. இதேபோல், கட்டண வசூலில் இருந்து விடுவிக்கப்பட்ட டோல் பிளாசாக்கள், தொடர்ந்து கட்டணமின்றியே செயல்படும்.

டில்லியில் இருந்து வெகு தொலைவில் உள்ள பல்வேறு மாநிலங்களில், நவ. 26ம் தேதி முதல் ஆண்டு விழா, மாநிலத் தலைநகரங்களில் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டி பேரணி, போன்ற போராட்டங்கள் நடத்தப்படும். நவம்பர் 28ஆம் தேதி, 100க்கும் மேற்பட்ட அமைப்புகளுடன் சம்யுக்தா ஷேத்காரி கம்கர் மோர்ச்சாவின் பதாகையின் கீழ் மும்பை ஆசாத் மைதானத்தில் மகாராஷ்டிர அளவில் மாபெரும் கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 29ஆம் தேதி முதல், ஒரு நாளைக்கு 500 போராடும் விவசாயிகள், டிராக்டர் டிராலிகளில் நாடாளுமன்றத்திற்கு அமைதியான மற்றும் ஒழுங்குடன் திட்டமிட்டபடி பேரணியாகச் செல்லுவார்கள்.
3 கருப்பு வேளாண் சட்டங்களை இரத்து செய்வதற்கான தனது அரசாங்கத்தின் முடிவை பிரதமர் அறிவித்த பிறகு, நேற்று கூறியது போல் அதிக மற்றும் தவிர்த்திருக்கக்கூடிய மனித இழப்புகளுடன், இவ்வளவு நீடித்த போராட்டத்திற்குப் பிறகும் அரசாங்கம் நிலுவையில் உள்ள பல கோரிக்கைகளைப் புறக்கணிக்க இருப்பதை எஸ்.கே.எம். சுட்டிக் காட்டியுள்ளது.

நாட்டின் விவசாயிகள் பல ஆண்டுகளாக அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கக்கூடிய குறைந்தபட்ச ஆதரவு விலைக்காகப் போராடி வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் பல போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். மோடி அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட விவசாயச் சட்டங்கள் எதிர்மறையாக இருந்தன.

எனவே விவசாயிகள் தங்களுக்கும், வருங்கால சந்ததியினருக்கும் வாழ்வுக்கும் சாவுக்குமான போரில் இந்தச் சட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பைக் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நியாயமான, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டரீதியான உத்தரவாதத்திற்கான கோரிக்கை தற்போதைய போராட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இதேபோல் தற்போதைய இயக்கம், மின்சார சட்டத் திருத்த மசோதாவை முழுவதுமாக திரும்பப் பெறவும், டெல்லியில் காற்றின் தர ஒழுங்குமுறை தொடர்பான சட்டங்கள் தொடர்பான தண்டனை விதிகளில் இருந்து விவசாயிகளை விடுவிக்கவும் கோருகிறது. இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் இன்னும் நிலுவையில் உள்ளன.

இந்த இயக்கத்தில் இதுவரை 670க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் தியாகம் செய்துள்ளனர். மோடி அரசாங்கம் தனது பிடிவாதமான மற்றும் அகங்கார நடத்தை காரணமாக போராட்டக்காரர்கள் மீது சுமத்தப்பட்ட அதிக மனித விலையை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டது. இந்த தியாகிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பாராளுமன்ற கூட்டத் தொடரில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், அவர்களின் பெயரில் நினைவிடம் எழுப்புவதற்கும் அவர்கள் தகுதியானவர்கள். அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், சண்டிகர், மத்தியப் பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது நூற்றுக்கணக்கான பொய்அல்லது வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் நிபந்தனையின்றி திரும்பப் பெறப்பட வேண்டும்.

லக்கிம்பூர் கேரி விவசாயிகளின் படுகொலையில், விவசாயிகளின் குளிர் ரத்தக் கொலையின் சூத்திரதாரி, அஜய் மிஸ்ரா டேனி, எந்தவொரு சட்ட நடவடிக்கைக்கும் உள்ளாகாமல் தொடர்ந்து மோடி அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருக்கிறார். உண்மையில், லக்னோவில் நேற்று முதல் நடைபெற்று வரும் டிஜிபி/ஐஜிபிகளின் வருடாந்திர மாநாடு போன்ற அரசு நிகழ்ச்சிகளில் அஜய் மிஸ்ரா தொடர்ந்து மேடையை அலங்கரித்து வருகிறார். ஆத்திரமூட்டும் விதத்தில், சம்பூர்ணாநகர் சர்க்கரை ஆலையில் (கடைசியாக விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 43 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கும் கூப் மில்) நவம்பர் 24 ஆம் தேதி, அரைக்கும் பருவத்தின் தொடக்க நிகழ்வின் முதன்மை விருந்தினராக லக்கிம்பூர் கேரியின் DM ஆல் அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் விவசாயிகளின் கொந்தளிப்பான மனநிலையை மாவட்ட நிர்வாகம் நிச்சயமாக உணர்ந்துள்ளது. மேலும் லக்கிம்பூர் கேரி படுகொலையில் நீதிக்காக பாரபட்சமின்றி உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து அக்கறை செலுத்துகிறது என்பதும் தெரியும். திட்டமிட்ட நிகழ்வை உடனடியாக ரத்து செய்யுமாறு DMக்கு எஸ்.கே.எம். அறிவுறுத்துகிறது. அஜய் மிஸ்ரா தேனியை கைது செய்து மத்திய அரசின் அமைச்சர்கள் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்று எஸ்.கே.எம். மீண்டும் வலியுறுத்துகிறது.

ஹன்சியில், விவசாயிகள் நேற்று வெற்றி பெற்றுள்ளனர். அரியானா விவசாயிகளின் எஸ்பி அலுவலக முற்றுகை தீவிரப்படுத்தப்பட்டதை அடுத்து, நேற்று போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளான, காயமடைந்து சிகிச்சையில் உள்ள போராளி குல்தீப் ராணாவின் மருத்துவ செலவுக்கான இழப்பீடு, அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வேலை, எம்.பி.யின் பி.எஸ்.ஓ. மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தல் போன்றவை குறித்து விவாதிக்க, ஹிசார் மாவட்ட நிர்வாகம், தர்ணாவில் இருந்து ஒரு குழுவை அழைத்தது.

பேச்சு வார்த்தைக்குப் பிறகு, குல்தீப் ராணாவுக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பதை அறிய, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட வேண்டும் என்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றும், அவரது சிகிச்சை செலவுகள் தவிர அவருக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படும் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

கர்நாடகாவில் இருந்து எஸ்.கே.எம்.இன் போராட்ட களங்களுக்குத் தனியாக நடை பயணம் மேற்கொண்டுள்ள கே.நாகராஜ், நேற்று உத்திரபிரதேசத்தில் உள்ள கோசி கலனை அடைந்தார். அங்கு உள்ளூர் விவசாயிகள் அவருக்கு அன்புடன் வரவேற்பு அளித்தனர்.

டெல்லி, ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் உட்பட, ஏராளமான மாநில முதல்வர்கள் இந்திய அரசின் நேற்றைய அறிவிப்பை வரவேற்றுள்ளனர். விவசாயிகளின், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றவும் சில முதல்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நேற்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல விவசாயிகள், தாங்கள் பெற்ற முதல் பெரிய வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோதும், பஞ்சாப் முக்த்சார் மாவட்டத்தின் மாலூட்டைச் சேர்ந்த, பி.கே.யூ. கடியன் தொழிற்சங்கத்துடன் தொடர்புடைய திரு.ஜஸ்விந்தர் சிங், இயக்கத்திற்காக தனது உயிரைத் தியாகம் செய்துள்ளார்.

நவம்பர் 26, 2020 அன்று திக்ரி பார்டரை அடைந்த பிறகு, அவர் வீட்டிற்குச் செல்லவில்லை. தியாகி ஜஸ்விந்தர், பிரதமரின் அறிவிப்பின் நல்ல செய்தியைக் கேள்விப்பட்டு, போராட்டத்தின் முதல் வெற்றியைப் பற்றி மகிழ்ச்சியடைந்தார். இந்த இயக்கம் இதுபோன்ற பல வீரர்களால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.


அறிக்கையை வழங்கியவர்கள்…

பல்பீர் சிங் ராஜேவால், டாக்டர் தர்ஷன் பால், குர்னம் சிங் சாருனி, ஹன்னன் மொல்லா, ஜக்ஜித் சிங் தலேவால், ஜோகிந்தர் சிங் உக்ரஹான், ஷிவ்குமார் சர்மா ‘கக்காஜி’, யுத்வீர் சிங்

சம்யுக்த கிசான் மோர்ச்சா
மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com


வெளியீடு:
ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தமிழ்நாடு.

Leave a Reply