“உழவர்கள் மீதுள்ள வழக்குகள் திரும்பப் பெற வேண்டும்! உயிரிழந்த உழவர் குடும்பங்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும்” என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய அரசு பிறப்பித்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியை முற்றுகையிட்டு உழவர்கள் சுமார் ஓராண்டு காலம் நடத்திய போராட்டத்தின் விளைவாக மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக தலைமையமைச்சர் மோடி அறிவிக்க வேண்டிய நிலை உருவானது. இது உழவர்களின் போராட்ட உணர்வுக்கும், உறுதிக்கும் கிடைத்த வெற்றியாகும்.
எதையும் சிந்தித்துப் பாராமலும், உழவர்களின் உணர்வுகளை உணராமலும் ஒன்றிய அரசு செயல்பட்டதின் விளைவாக வரலாறு கண்டறியாத வகையில் உழவர்களின் போராட்டம் வெடித்தது. உழவர்கள் மீது தொடுக்கப்பட்ட தேசத் துரோக வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்.
இப்போராட்டத்தில் உயிரிழந்த 671 உழவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அளிக்கப்படவேண்டும். உழவர்கள் போராட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஒன்றிய அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
—
செய்தி உதவி:
மருத்துவர் ஐயா. பாரதிச்செல்வன்,
மன்னார்குடி.