Home>>அரசியல்>>நவம்பர் 25 அன்று நிர்பயா சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம்!
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுபாண்டிச்சேரிபெண்கள் பகுதிமாநிலங்கள்

நவம்பர் 25 அன்று நிர்பயா சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம்!

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான நாளான நவம்பர் 25 அன்று நிர்பயா சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மகளிர் ஆயம் – கோரிக்கை ஆர்ப்பாட்டம்!


பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான பன்னாட்டு நாளான நவம்பர் 25 அன்று, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள், நிர்பயா சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி – தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான “மகளிர் ஆயம்” சார்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

தமிழ்நாடு – புதுச்சேரியில் அண்மைகாலமாக பள்ளிக்கூடம் போகும் குழந்தைகள், நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்கள், கூலி தொழிலில் ஈடுபடும் பெண்கள் என அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மறுபுறம் மதுவினால் வரும் குடும்ப சுமைகளையும், வன்முறைகளையும், சின்னத்திரை காட்சி ஊடகங்களால் தூண்டப்படும் குடும்ப வன்முறையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

தில்லியில் 2012 திசம்பர் 16 இரவில், நிர்பயா என்ற பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். அது இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, 03.02.2013 அன்று பாராளுமன்றம் நிர்பயா சட்டம், அதாவது குற்றவியல் திருத்தச் சட்டம் – 2013 கொண்டு வந்தது. குற்றவியல் சட்டங்களில் கீழ் பல திருத்தங்களை மேற்கொண்டு புதிய சட்டப்பிரிவுகளை கொண்டுவந்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், போக்சோ சட்டம் என அனைத்திலும் நிர்பயா சட்டம் 2013இன் கீழ் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்தில் பல சட்டப்பிரிவுகளை புதிதாக சேர்க்கப்பட்டன. அமிலம் வீச்சு, அமிலம் வீச முயலுதல், கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு தொல்லைக் கொடுத்தல், பெண்ணை பின் தொடர்தல் என இன்னும் பல குற்றங்களை இந்த சட்டத்தின் மூலம் சேர்த்து அதற்கு தண்டனைகளும் விதித்துள்ளது. ஆயினும், இச்சட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை.

இதற்கு முதன்மைக் காரணம் – பள்ளி, கல்லூரிகள், பெண்கள் பணியாற்றும் இடங்களில் பொதுவெளிகள் ஆகியவற்றில் பெண்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செயல்படுத்தப்படவே இல்லை! காவல்துறை பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டுகொள்ளாத அளவுக்கே பயிற்சி பெற்றிருக்கிறது. இதனால், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வன்முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பெண்ணுரிமை பற்றி அதிகம் பேசும் தி.மு.க. அரசு, நடைமுறையில் நிர்பயா சட்டத்தை முறையாக செயல்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. புதுச்சேரி பா.ச.க. கூட்டணி அரசும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை!

எனவே, மகளிர் ஆயம் – நிர்பயா சட்டத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள், முறையாக செயல்படுத்த உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வரும் 2021 நவம்பர் 25 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. நவம்பர் 25 என்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்க்கும் பன்னாட்டு நாளாகும்!
டொமினியன் குடியரசு நாட்டின் சர்வாதிகாரியை எதிர்த்து, மக்களைத் திரட்டிப் போராடிய மிராப்பால் சகோதரிகள் மூன்று பேர் சர்வாதிகார ஆட்சியால் 1960 நவம்பர் 25ஆம் நாள் கொல்லப்பட்டனர். அந்த நாளை பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு நாளாக கடைபிடிக்க வேண்டுமென்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மகளிர் அமைப்புகளும், மனித உரிமை இயக்கங்களும் தொடர்ந்து போராடின. அதன் விளைவாக ஐ.நா. பொது மன்றம் நவம்பர் 25ஆம் நாளை – பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு நாள் என 1999ஆம் ஆண்டு அறிவித்தது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, அரசு உள்ளிட்ட நிறுவனங்களின் வன்முறை ஆகியவற்றை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சார்பில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு நாளான நவம்பர் 25 அன்று, “தமிழ்நாடு – புதுச்சேரி அரசுகளே, நிர்பயா சட்டத்தை சரியாக செயல்படுத்து!” என்ற முழக்கத்தோடு மகளிர் ஆயம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது!

தமிழ்நாடு – புதுச்சேரி அரசுகளே, நிர்பயா சட்டத்தின்படி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் உடனே அமை!

காவல்துறையினருக்கு பெண்களின் உரிமை தொடர்பாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவும் தனிச்சிறப்புப் பயிற்சி வழங்குக!

பள்ளி – கல்லூரிகளிலும், பெண்கள் பணியாற்றும் இடங்களிலும் “விசாகா” குழுவை விதிவிலக்கு இல்லாமல் உருவாக்குக!

பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முக்கிய காரணமாக விளங்கும் மதுக்கடைகளை மூடுக!

குடும்ப வன்முறை உள்ளிட்டு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டும் காட்சி ஊடகங்களைக் கண்காணித்து நெறிப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்க!

பெண்களே,
பெண்களுக்கு, குழந்தைகளுக்கு ஆளுமைப் பண்பு தேவை. ஆளுமை என்பது அகங்காரம் அல்ல. எல்லாவற்றையும் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படுவது. நாம் மற்ற மகளிர் தொழிற்சங்கங்கள் போல் அல்லாமல் பன்முகப்பட்ட அமைப்பாக செயல்பட வேண்டும் எல்லாவிதமான திறமையுடனும் செயல்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தட்டிக் கேட்க அமைப்பாகத் திரள வேண்டும்!


செய்தித் தொடர்பகம்,
மகளிர் ஆயம்,
தொடர்புக்கு: 94861 07087.

Leave a Reply