சிறு அரசு பொதுமருத்துவமனை (Mini GH) என்று தான் எப்போதும் அழைப்பேன் எம்ஜிஆர் நகரில் உள்ள CAK மருத்துவமனையை. சென்னை மன்னைக்கு வழங்கிய கொடை.
மன்னார்குடியின் அடையாளமாக விளங்கிய Dr.C. அசோக்குமார் அவர்கள் மறைந்து விட்டார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
1970களில் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக தனது பணியை துவக்கியவர். 50 ஆண்டுகள் மருத்துவ சேவையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை திறம்பட செய்து லட்சக்கணக்கான உயிர்களை காத்தவர்.
ஏழைகளுக்கும்,நரிக்குறவர்களுக்கும் இன்றுவரை இலவசமாக மருத்துவம் பார்த்த மனிதநேய மருத்துவர். தன்னிடம் அறுவை சிகிச்சைக்கு வருபவருக்கு ரத்தம் தேவைப்படும் போது சிறிதும் தயங்காமல் தனது ரத்தத்தையே வழங்கும் இயல்புடைய மிகச்சிறந்த குருதிக் கொடையாளர்.
சி.ஏ.கே. என நாங்கள் அன்போடு அழைக்கும் டாக்டர் சி அசோக்குமார் அவர்களின் இழப்பு நமக்கு பேரிழப்பு. சந்திக்கும் போது நீண்ட நேரம் பேசினால் வெளியில் உள்ள நோயாளிகளுக்கு சிரமம் என்பதால் பல மணி நேர கருத்தை நிமிடங்களில் பகிர்ந்து கொள்ளவேண்டிய நெருக்கடி நிலையிலும் அளவளாவிய நட்பு.
டெங்கு பரவல் தொலைக்காட்சி நேரலையின் போது… “இல்ல.. விஜயகுமார் வைரசுக்கு எல்லாம் பயந்தா மனிதன் வாழ முடியாது… அது வரும்… போகும்…” என்று சிரித்த முகத்துடன் கூறிய வார்த்தைகளின் ஊக்கம்.
எப்போதும் உங்கள் முகம் மனதில் நிற்கும். பணத் தேடலில் உள்ள உலகில், மருத்துவத்தில் பணத்திற்கு இடமில்லை என்று அவர் ஆற்றிய சேவையை இனி எவரும் வழங்க இயலாது. 30 ரூபாயில், சமயத்தில் அதுவும் இல்லை என்றாலும் கூட மருத்துவ தேவையை பூர்த்தி செய்து விட முடியும் எனும் நிலை நாளை இல்லை, ஏனென்றால் Dr. CAK இனி இல்லை.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
இறவாப் புகழுடன் என்றும் வாழ்வார் Dr.CAK!
—
செய்தி உதவி:
ஆர்.விஜயகுமார்,
மன்னார்குடி.