Home>>செய்திகள்>>கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வது வருத்தமளிக்கிறது.
செய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வது வருத்தமளிக்கிறது.

அவர்களுக்கு மனித நேய அடிப்படையில் பணிப்பாதுகாப்பு வழங்கிட வேண்டும். இது குறித்து இச்சங்கங்களின் சார்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி. கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக தமிழ்நாட்டில் பரவி மிகப் பெரும் பாதிப்புகளை உருவாக்கியக் காலக்கட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக மருத்துவர்களும், செவிலியர்களும், சுகாதார ஆய்வாளர்களும் (Health Inspectors) மருத்துவப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும், கொரொனா நோயாளிகள் பராமரிப்பு மையங்களிலும், சிகிச்சை வழங்களிலும் மிகுந்த ஈடுபாட்டு உணர்வோடு் பணியாற்றியுள்ளனர்.

உயிரையும் துச்சமென கருதி பணி புரிந்து வந்தனர். இப்பொழுதும் அர்ப்பணிப்போடு பணிபுரிகின்றனர்.

இவர்களில் பலருக்கு கடந்த சில மாதங்களாக ஊதியமும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இம்மாத இறுதியுடன் பணியிலிருந்து நின்று விடுமாறு, எழுத்துப் பூர்வமாகவும், வாய்மொழியாகவும் அவர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது மிகுந்த மன வேதனையை தருகிறது.

கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு சேவை செய்தவர்களை பணி நீக்கம் செய்வது சரியல்ல.

தற்பொழுது கொரோனா பரவல் குறைந்துள்ள போதிலும், மூன்றாவது அலை வரும் நிலையும் உருவாகலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா, ரசியா, சிங்கப்பூர் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும், கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. எனவே அவசரப்பட்டு தற்காலிக மருத்துவர்களையும், செவிலியர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் பணி நீக்கம் செய்வது நல்லதல்ல.

கொரோனாவைத் தவிர, டெங்கு, நோரா வயிற்றுப் போக்கு போன்றவையும், மழைக்கால நோய்களும் அச்சுறுத்தும் நிலையிலும், முதுநிலை மருத்துவர்களுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை காலதாமதமாகும் நிலையிலும், மருத்துவ மனிதவள பற்றாக்குறையை சமாளிக்க, அவர்களது சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எனவே, மனித நேய அடிப்படையிலும், பெருந்தொற்று காலத்தை (Pandemic) கணக்கில் கொண்டும், தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும், பணி நீட்டிப்பும், பணிப் பாதுகாப்பும் வழங்கிட வேண்டும்.

மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை பணியாளர்களை, மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கம் (NHM) மற்றும் மாவட்ட ஆட்சியர் மூலம் (மாவட்ட நோயாளிகள் நலச் சங்கம்) மூலம் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும்.

ஊழியர்களின் ஊதியத்திற்காக NHM மூலம் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதியை தமிழ்நாடு அரசு பெற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் கூடுதல் நிதியை தமிழக அரசும் ஒதுக்கீடு செய்து, மருத்துவர்கள் செவிலியர்கள், சுகாதாரா ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவத்துறை பணியாளர்களையும், தமிழ்நாடு அரசே நேரடியாக, மருத்துவப் பணியாளர் நியமன வாரியம் (MRB) மூலம், நிரந்தர அடிப்படையில் நியமிக்க முன்வர வேண்டும்.

மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆஷாக்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் பலருக்கு கடந்த சில மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் மருத்துத்துறை பணியாளர் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.


மருத்துவர் ஜி.ஆர்.
இரவீந்திரநாத்,
பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்.

மருத்துவர் ஏ.ஆர்.சாந்தி,
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு மருத்துவத் துறை பணியாளர் கூட்டமைப்பு.

தொடர்புக்கு: 9940664343 | 9444181955

Leave a Reply