கொரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
கொரோனாவின் பாதிப்பு தமிழ்நாட்டில் அதிகளவில் இருந்தபோது, தற்காலிகமாக மருத்துவர்களும், செவிலியர்களும் , சுகாதார ஆய்வாளர்களும், மருத்துவப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிறந்த முறையில் சேவையாற்றினர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உறவினர்களே செல்ல தயங்கி நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் தாயுள்ளதோடு செயலாற்றியவர்கள் மருத்துவர்களும், செவிலியர்களுமே.
மேலும், சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், டெங்கு போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்களும், செவிலியர்களும் சிறந்த முறையில் செயலாற்றியுள்ளனர்.
அவர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத இச்சூழலில், இம்மாத இறுதியுடன் பணியில் இருந்து நின்று விடுமாறு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, எழுத்துப் பூர்வமாகவும், வாய்மொழியாகவும் அவர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இத்தகையை நடவடிக்கை பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது.
கொரோனா மூன்றாவது அலைக்கான எச்சரிக்கையை நிபுணர்கள் விடுத்த நிலையில், ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும். பல மாதங்களாக நிலுவையில் உள்ள அவர்களின் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவப் பணியாளர்களை, மருத்துவப் பணியாளர் நியமன வாரியம் மூலம் நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
—
திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.