Home>>செய்திகள்>>தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பான கிடங்குகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து
செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்வேளாண்மை

தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பான கிடங்குகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பான கிடங்குகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பருவகால பணியாளர்களுக்கு ரெக்கவரி போடக்கூடாது எனவும் வேண்டுகோள்.

இன்று (01/12/2021) திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் கோட்டூர் ஒன்றிய பகுதியில உள்ள 64, நெம்மேலி, மீனம்பநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி சேதமடைந்த நெல் மூட்டைகளை நேரில் பார்வையிட்டார்.

இந்த விவகாரம் குறித்து க.மாரிமுத்து எம்எல்ஏ அவர்கள் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள்வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு பின் வருமாறு:

திருத்துறைப்பூண்டி தொகுதியில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் கோட்டூர் ஒன்றிய பகுதிகளில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகள் பாதிக்காத வகையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அரசின் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் கொக்கலாடி, சுந்தரபுரி, விளக்குடி மற்றும் கோவிலூர் பகுதிகளில் இயங்கிவருகிறது. கடந்த 20 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்த வருவதால் கொக்கலாடி, சுந்தரபுரி, விளக்குடி திறந்தவெளி சேமிப்பு கிடங்குளில் நெல் இயக்கம் செய்ய முடியவில்லை. மேலும் கோவிலூர் கிடங்கு மட்டும் இயங்கும் நிலையில் உள்ளது அங்கும் சாலை வசதி சரிவர இல்லாததால் இயக்கத்தில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் 890 வண்டிகளுக்கான இருப்பு வைக்கபடுகிறது. இதில் சன்னரகம் – 340 வண்டி. ஏ.எஸ்.டி.16 – 270 வண்டி, மற்றும் டி.கே.எம்.9 – 280 வண்டி ஆகும். இதில் டி.கே.எம்.9 வகை நெல் கோவிலூருக்கு மட்டும் இயக்கம் செய்யப்படக்குடிய சூழ்நிலை உள்ளது. மற்ற திறந்தவெளி சேமிப்பு நிலையங்களில் இருப்பு வைக்கப்படவில்லை.

அதே நேரத்தில் திருவாரூர், மன்னார்குடி, பேரளம், நீடாமங்கலம் ஆகிய இடங்களில் வெளி மாவட்டத்திற்கு நெல் அரவைக்கு இரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை மற்றும் கோட்டூர் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு இது போன்ற வாய்ப்பு வழங்குவது இல்லை என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

குறுவை சாகுபடியை அடுத்து திருத்துறைப்பூண்டி தொகுதியில் திறக்கபட்ட 50 க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து செல்ல கால தாமதாமதம் காரணமாக இயற்கை ஈடர்பாடுகளினால் சேதமடைகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நெல் மூட்டைகள் முளைத்து நாற்று வெளியே வந்து விட்டது என்பதை வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே போர்கால அடிப்படையில் கொள்முதல் செய்யபட்ட நெல் மூட்டைகளை அங்கிருந்து எடுத்து சென்று பாதுகாக்கவும், வெளிமாவட்டத்திற்கு அரைவைக்காக அனுப்பிடவோ விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறேன்.

“கொள்முதல் செய்யபட்ட நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து செல்ல காலதாமதம் ஏற்பட்டதை அடுத்து கடந்த 20 நாட்களாக பெய்த மழையின் காரணமாக சேதமடைந்த நெல் மூட்டைகள் சாக்குகளுக்கு நெல் கொள்முதல் நிலையங்களில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றிவரும் பருவகால பணியாளர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ரெக்கவரி வசூல் ஏதும் செய்திடாமல் பணியாளர்களை பாதுகாத்திடவும் வேண்டுகிறேன்” என கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply