Home>>இந்தியா>>ஏழ்மை ஒழிப்பில் இந்தியாவில் தமிழகத்துக்கு நான்காம் இடமாம் – திராவிடத்தின் சாதனையா?
தமிழ்நாடு சட்டமன்றம்
இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

ஏழ்மை ஒழிப்பில் இந்தியாவில் தமிழகத்துக்கு நான்காம் இடமாம் – திராவிடத்தின் சாதனையா?

நிதி ஆயோக் – 2021 அறிக்கை வெளிவந்துள்ளது. அந்தப் பட்டியல் இந்திய அளவில் ஏழ்மை ஒழிப்பில் எந்தெந்த மாநிலம் எந்த இடம் வகிக்கின்றன என்ற விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு நான்காம் இடம் வகிக்கிறது. கேரளம் முதலிடம் வகிக்கிறது. உடனே நம் தமிழ்நாட்டில் ஐம்பதாண்டு திராவிடக் கட்சிகளின் சாதனையைப் பார்த்தீர்களா எனக் கொண்டாடத் தொடங்கி விட்டார்கள். இந்தக் கொண்டாட்டங்களில் ஏதும் அர்த்தம் உள்ளதா?

ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையில் எத்தனை விழுக்காட்டினர் ஏழைகளாக இருக்கின்றனர் என நிதி ஆயோக் பட்டியல் கூறுகிறது. கேரளத்தில் 0.71 விழுக்காட்டினர் ஏழைகளாக உள்ளார்கள். அப்படியானால் கேரளம் கிட்டத்தட்ட ஏழ்மையை ஒழித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏழைகளின் விழுக்காடு 4.89%, இதன்படி, கேரளத்தை விடவும் தமிழ்நாட்டில் ஏழைகளின் விழுக்காடு சுமார் 7 மடங்கு அதிகம். தமிழ்நாடு கேரளத்தைப் பார்த்துதான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, பீகார், உபி, மபி, ஜார்கண்டு போன்ற பாவப்பட்ட மாநிலங்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு புளகாங்கிதம் அடைந்து கொள்ளக் கூடாது.

மேலும், தரம் என்பது என்ன? ஒன்றுமில்லாதவர்கள் மத்தியில் போட்டியிட்டு, அதில் நான் நான்காம் இடம் பிடித்து விட்டேன் பார் என்பதா தரத்துக்கான அளவுகோல்? இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டு சமூகநீதிப் பாரம்பரியம் கொண்ட தமிழ்த் தேசத்துக்கு ஒப்பீடாக பீகார் (51.91%) உத்திரபிர பிரதேசம் (37.97%) போன்ற மாநிலங்களையா கணக்கில் எடுத்துக் கொள்வது?

தேர்தல் சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் திராவிடக் கட்சிகளுக்கு வேண்டுமானால் தமிழ்நாடு வகிக்கும் இடம் பெருமைக்குரியதாக இருக்கலாம். ஆனால் தமிழ்த் தேசியர்களுக்குப் போட்டி சனநாயகத்திலும் சமூகநீதியிலும் வீணாய்ப் போன பீகாரோடும் ஜார்கண்டோடும் உத்திர பிரதேசத்தோடும் மத்திய பிரதேசத்தோடும் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.

அப்படியானால் தமிழ்த் தேசத்தின் போட்டி யாருடன்? நம் போட்டி கல்வியைத் தாய்மொழியிலும் இலவசமாகவும் வழங்கும் நாடுகளுடன் அல்லவா இருக்க வேண்டும்?

கல்வித் தரம் குறித்து உலகளவில் 75 நாடுகளில் எடுக்கப்பட்ட பிசா அறிக்கையில் தமிழ்நாடு 74ஆவது இடம் வகித்ததே, இது பற்றி அல்லவா நாம் கவலைப்பட வேண்டும்? அந்த அறிக்கையில் பின்லாந்தும், சீனமும் முதலிடங்கள் வகித்தனவே? அந்த நாடுகளுடன் அல்லவா நமது போட்டி இருக்க வேண்டும்?

கனடா முழுக்க முழுக்க மருத்துவத்தை இலவசமாகத் தருகிறதே, அந்த நாட்டுடன் அல்லவா நாம் மோதிப் பார்க்க வேண்டும்?

அதை எல்லாம் விடுத்து வெறும் சோப்புளாங்கி இந்திய மாநிலங்களுடன் போட்டியிட்டுக் கொண்டு நான் வென்று விட்டேன் பார் எனப் பீற்றிக் கொள்வதில் ஒரு பெருமையும் இல்லை.

நாற்காலி அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளுக்கும் அவர்களின் துதிபாடிகளுக்கும் வேண்டுமானால், இந்த நிதி ஆயோக் பட்டியல், இந்தியா டுடே கணிப்புகள் மகிழ்ச்சி அளிக்கலாம். ஆனால் தமிழ்த் தேசத்தை உலகின் தேசங்களுடன் ஒப்புநோக்கிக் கனவு காணும் என்னைப் போன்றவர்களுக்கு இந்த அறிக்கைகள் எல்லாம் வெற்றுப் பெருமைகளே!

தமிழன்மையின் கனவு நனவாக நாற்காலி அரசியல் ஒருபோதும் உதவாது, தமிழர்களுக்கான இறைமையே அந்தக் கனவை நனவாக்கித் தரும்!


கட்டுரை:
திரு. நலங்கிள்ளி.


கட்டுரை சேகரிப்பு:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply