Home>>செய்திகள்>>‘ஊடகவியலாளர் நல வாரியம்’ அமைக்க தமிழ்நாடு அரசு ஆணை.
தமிழ்நாடு சட்டமன்றம்
செய்திகள்தமிழ்நாடு

‘ஊடகவியலாளர் நல வாரியம்’ அமைக்க தமிழ்நாடு அரசு ஆணை.

ஊடகவியலாளர் நலனில் அக்கறைகொண்டு, ‘ஊடகவியலாளர் நல வாரியம்’ அமைக்க அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அரசாணையில் சில முக்கிய திருத்தங்களை உடனடியாகச் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

ஊடகவியலாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் ஊடகவியலாளர் நல வாரியம் உருவாக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார். அது வெறுமனே வாக்குறுதியாக மட்டும் இல்லாமல் அதைச் செயல்படுத்தும் வகையில் அதற்கான ஒரு அரசாணை வெளியிடப்பட்டிருப்பதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் மனமுவந்து வரவேற்கிறது.

நல வாரியம் தொடர்பாக அமைப்பிற்கு மாற்றுக் கருத்து இருந்தபோதும், ஊடகவியலாளர் நலன் கருதி அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். அதே வேளையில், அமைக்கப்பட உள்ள நல வாரியம் தொடர்பாக அமைப்பு சார்பாகச் சிலவற்றை அரசின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.

பொதுவாக ஒரு துறையின் நலனுக்காக உருவாக்கப்படும் எந்த அமைப்பாக இருந்தாலும், அது எவ்வாறு அமைய வேண்டும், அதற்கு எப்படி விதிகள் வகுக்க வேண்டும், அது எவ்வாறு செயல்பட வேண்டும் போன்ற விவரங்களை அந்தத் துறையில் செயல்படும் தொழிற்சங்கங்கள், அமைப்புகள் மற்றும் அத்துறையில் அனுபவம் பெற்றவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில், ஊடகவியலாளர் நல வாரியம் அமைப்பது குறித்து அரசுத் தரப்பில் அனைத்துப் ஊடகவியலாளர் அமைப்புகளையும் அழைத்துப் பேசி, அவர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளின் அடிப்படையில் வாரியத்தின் விதிகள், மற்றும் செயல்பாடுகளை வகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தேவை ஏற்படின், தற்போது வெளியாகியுள்ள அரசாணையை அதற்கு ஏற்ப திருத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

நல வாரியத்தின் தலைவர் என்பவர், அந்த வாரியத்திற்காக மட்டும் முழு நேரமாகச் செயல்படக்கூடியவராக இருந்தால் மட்டுமே வாரியம், செயல்படும் வாரியமாக இருக்கும். தற்போது வெளியாகியுள்ள அரசாணையில், செய்தித்துறை அமைச்சர் வாரியத்தின் தலைவராகச் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அவர்களுக்குப் பல்வேறு அலுவல்கள் இருக்கும் பட்சத்தில், வாரியத்தின் செயல்பாடுகளில் அவர் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆகவே, ஊடகவியலாளர் துறையின் தொழிற்சங்கச் செயல்பாட்டில் அனுபவம் பெற்ற ஒருவரை வாரியத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

வாரியத்தின் உறுப்பினர்களும், அதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஊடகவியலாளர் துறையைச் சேர்ந்தவர்களாகவே நியமிக்கப்பட வேண்டும். வாரியத்திற்குத் தொழிலார் நலச் சட்டம் சார்ந்த ஆலோசனைகள் தேவைப்படும் என்ற வகையில், தொழிலாளர் நலச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒன்று அல்லது இரண்டு வழக்கறிஞர்களை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கலாம் என்று வலியுறுத்துகிறோம். உறுப்பினர்கள் தேர்வு வெளிப்படையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாடு ஊடக மன்றம் (Press Council of Tamil Nadu) உருவாக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், ஊடகவியலாளர் நல வாரியம் அதற்குக் கீழ் செயல்படும் என்பது போல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊடக மன்றம் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், ஊடகவியலாளர் சுதந்திரத்தையும், ஊடகவியலாளர் சங்கம் அமைக்கும் உரிமையையும் பறிக்கும் வகையில் பல வழிகாட்டுதல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு ஊடக மன்றம் அமைக்கப்படுவதற்கு ஏற்கனவே அமைப்பின் சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பல மூத்த ஊடகவியலாளர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கும் ஊடகவியலாளர் அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன. ஆகவே, ஊடகவியலாளர் நல வாரியத்தை தமிழ்நாடு ஊடக மன்றத்தின் கீழ் இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும், நல வாரியம் சுதந்திரமாகச் செயல்படும் அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

நல வாரியத்திற்கு நிதி திரட்டும் வகையில், ஊடகவியல் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரசு விளம்பரக் கட்டணத்தில் 1 சதவீதத்தை வாரியத்திற்கு வழங்க வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டும் தேவையான நிதி திரட்டப் படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆகவே, ஊடகவியலாளர் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த ஒரு சதவீதக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் மற்றும் அதே அளவிற்கு இணையாக அரசுத் தரப்பிலும் வாரியத்திற்குக் கட்டணம் செலுத்தும் வகையில் அரசாணை திருத்தப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம். அத்துடன், ஆண்டு தோறும் நல வாரியத்திற்கென அரசு, தனியாக நிதி ஒதுக்க வேண்டும். மேலும், நல வாரியமும் தனக்குத் தேவையான நிதியை, நன்கொடை உட்பட பல்வேறு திரட்டுதல் மூலம் திரட்டிக் கொள்வதற்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

ஊடகவியலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளுடன் சேர்ந்த, மேலும் பல உதவிகள் வழங்கப்படும் என்றும், அந்த உதவிகள் குறித்த பட்டியலும் அரசாணையில் இடம் பெற்றுள்ளது. நலிவுற்ற ஊடகவியலாளர்களுக்கு மேலும் பல உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற அரசின் இந்த முடிவை வரவேற்கிறோம். இருந்தபோதும், அதில் குறிப்பிட்டுள்ள உதவித்தொகைகள் தற்போதைய பொருளாதாரச் சூழலில் மிகவும் குறைவாக உள்ளது. ஆகவே, அமையவுள்ள நல வாரியம், அனைத்துப் ஊடகவியலாளர் அமைப்புகளின் கருத்தைக் கேட்டறிந்து அதற்கு ஏற்ப உதவித் தொகையை உயர்த்திக் கொள்வதற்கும், புதிய நல உதவித் திட்டங்களை சேர்த்துக் கொள்வதற்கும் ஏற்ப, அரசாணையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

திரைப்படத் துறை நல வாரியத்தில் பணிபுரியும் அலுவலர்களே ஊடகவியலாளர் நல வாரியத்தின் பணிகளையும் பார்த்துக் கொள்வார்கள் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாமல், ஊடகவியலாளர் நல வாரியத்தின் பணிகளை மேற்கொள்ளத் தனியாக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

இறுதியாக, ஊடகவியலாளர் நல வாரியத்தில் யாரெல்லாம் உறுப்பினராகச் சேரலாம் என்பது, எந்த ஒரு தகுதியான ஊடகவியலாளரும் விடுபட்டு விடாமல் இருக்க, பல்வேறு விசயங்களைக் கவனத்தில் கொண்டு எடுக்க வேண்டிய முடிவு. ஆகவே, தொழிற்சங்கங்கள், ஊடகவியலாளர் அமைப்புகள் மற்றும் இத்துறையில் அனுபவம் பெற்ற பலரையும் அழைத்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டு, அதற்கேற்ப விதி வகுப்பது மிக மிக அவசியம் என்பதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.


செய்தி உதவி:
மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம்.


செய்தி சேகரிப்பு:
திரு. ஸ்ரீதர்,
திருவாரூர்.

Leave a Reply