Home>>அரசியல்>>எதேச்சதிகார மனப்போக்குடன் அணைப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றிய ஒன்றிய அரசு!
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

எதேச்சதிகார மனப்போக்குடன் அணைப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றிய ஒன்றிய அரசு!

அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல் – ஒன்றிய ஆட்சி காலில் போட்டு மிதிக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சரின் கண்டன அறிக்கை போன்று மற்ற மாநிலங்களும் மவுனம் சாதிக்காமல் குரல் கொடுக்க வேண்டும்!


தற்போது பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியான, பா.ச.க. ஆட்சி – RSS கொள்கைகளுக்கேற்றவாறு இந்தியாவின் கூட்டாட்சி (Federal) யை படிப்படியாக மாற்றி, ஒற்றை ஆட்சி (Unitary)யாக ஆக்கி, அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள மாநிலங்களின் அத்துணை அதிகாரங்களையும் நாளும் பறிக்கும் ஆக்கிரமிப்பினைச் செய்து வருகிறது!

மாநிலங்களின் அதிகாரங்களை விழுங்கி ஏப்பம் விடும் பணி…

ஒரு பக்கம் ‘அரசமைப்புச் சட்ட நாளை’க் கொண்டாடிக் கொண்டே, மாநிலங்களின் அதிகாரங்களை விழுங்கி ஏப்பம் விடும் பணியை, தனக்குள்ள ‘’ரோட் ரோலர்’’ – பெரும்பான்மையைப் பயன்படுத்தி செய்து வருகிறது ஒன்றிய பா.ச.க. அரசு.

‘மாநிலங்களே இருக்கக் கூடாது; இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்குப் பதில் ஒற்றை அரசுதான் இருக்கவேண்டும்‘ என்று கோல்வால்கர் என்ற ஆர்.எஸ்.எஸ். தத்துவகர்த்தா ‘ஞானகங்கை’ (Bunch of Thoughts) நூலில் குறிப்பிட்ட அசெண்டாவை நாள்தோறும் நிறைவேற்றி வருகிறார்கள்.

மாநில அரசுகளின் கல்வி உரிமைகள், மாநில அரசுகளின் விவசாய உரிமைகளைப் பறித்துத்தான் – தற்போது வேறு வழியின்று, முன்பு நிறைவேற்றப்பட்டு, கட்டுப்பாடான வேளாண் பெருமக்களின் அமைதி வழி அறப்போர் ஓராண்டுக்குமேல் நடந்துவருவதால், வரும் 2022இல் தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் ஆட்சிகளை பா.ச.க. இழக்கும்; படுதோல்வி அடையக் கூடும் என்று அவரது ஆலோசகர்கள் கணித்துக் கூறியதால், அதனைத் திரும்பப் பெற்றார்கள்.

வேளாண்மை மாநில அதிகாரமாயிற்றே; இந்தச் சட்டங்களை நிறைவேற்றுவதற்குமுன் மாநில அரசுகளுடன் விவாதித்தது உண்டா? கருத்துகளைக் கேட்டதுண்டா?

அவசரக் கோலத்தில் – அள்ளித் தெளித்த கதை…

அதேபோன்ற எதேச்சதிகார மனப்போக்குடன், மாநிலங்களுக்கே உரிமையுள்ள அதிகாரத்தைப் பறித்து அணைப் பாதுகாப்பு மசோதாவை – பிடிவாதமாக அவசரக் கோலம் – அள்ளித் தெளித்த கதையாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கோரிக்கை – இந்த மசோதாவை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புங்கள் என்பதைக்கூட முற்றாக நிராகரித்து, மசோதாவை நிறைவேற்றிவிட்டனர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

இதுபற்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 4.12.2021 அன்று விடுத்துள்ள அறிக்கையில்,
‘’மாநிலங்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள அணைகளின் பாதுகாப்பு குறித்த உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்குச் சுதந்திரம் உண்டு!

தமிழ்நாட்டில் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோதே இதனை எதிர்த்துள்ளோம்; இப்போதும் அதனை வலியுறுத்துகிறோம். தி.மு.க. கொடுத்த திருத்தத்தை – தேர்வுக் குழுவுக்கு அனுப்பச் சொன்ன “திருத்தத்தை” – மற்ற எதிர்க்கட்சிளும் ஆதரித்தன!

முன்பு மக்களவையில் சகோதரர் ஆ.இராசா அவர்களும், மாநிலங்களவையில் சகோதரர் திருச்சி சிவா அவர்களும் வலியுறுத்தியுள்ளதையும் முதலமைச்சர் அவர்கள் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதோடு, பா.ச.க. ஒன்றிய அரசு இச்சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம், ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவில் மிகப்பெரும் சறுக்கலாகவே அமைந்திருப்பது கண்டு வேதனைப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
நமது அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பதிவில் (entry) உள்ள இரண்டாவது பட்டியலின்படி தண்ணீர் மாநிலப் பட்டியலில் வரக் கூடியது!

மேலும் 56ஆவது பதிவு ஒன்றாவது பட்டியலின்படியும், தண்ணீர் மாநிலங்களிடையேயான தண்ணீர் தாவாக்கள் குறித்ததாகும். இந்த மசோதாவில் ஒன்றிய அரசு தன் அதிகாரத்தை ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறிப் பயன்படுத்தக் கூடிய விதத்தில் தெளிவற்ற வரையறைகளைக் காண முடிகிறது.

எடுத்துக்காட்டாக, “வழக்கமான வடிவத்தில் இல்லாத அணை” (Dam of unusual design) என்று ஒரு வரையறை காணப்படுகிறது. (இதை மாநிலங்களவையில் சி.பி.எம். உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன் அவர்களும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்). இது முற்றிலும் அர்த்தமற்றது. காரணம், நாட்டிலுள்ள ஒவ்வொரு அணையும் பல்வேறு தர நிர்ணயங்களின்படியும், தொழில்நுட்பங்களின் அடிப்படையிலும் கட்டப்பட்டு இருக்கின்றன.
இந்தியாவில் 5,701 பெரிய அணைகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறான தொழில் நுட்பங்களோடு கட்டப்பட்டவைகளாகும்.

அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல் – ஒன்றிய ஆட்சி காலில் போட்டு மிதிக்கிறது.

மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள அணைகளின் பாதுகாப்பு குறித்து உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்குச் சுதந்திரம் உண்டு.

அத்தகைய சுயாட்சியை இச்சட்டம் அறவே பறித்து, ஒற்றை அதிகார ஆட்சியாக, ஒன்றிய அரசினை ஆக்கிடவே நிறைவேற்றப்பட்டுள்ளது! அரசமைப்புச் சட்டத்தை மதிக்காதது மட்டுமல்லாமல் – ஒன்றிய ஆட்சி காலில் போட்டு மிதிப்பது போன்ற அப்பட்டமான பறிப்பு நடவடிக்கையாகும்.

எனவே, மற்ற மாநிலங்களும் மவுனம் சாதிக்காமல் குரல் கொடுக்கட்டும்!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை.


செய்தி சேகரிப்பு:
திரு. ஸ்ரீதர்,
திருவாரூர்.

Leave a Reply