Home>>அரசியல்>>திராவிட மாடல் தமிழ்நாட்டை முன்னேற்றிவிட்டதா?
அரசியல்இந்தியாகட்டுரைகள்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

திராவிட மாடல் தமிழ்நாட்டை முன்னேற்றிவிட்டதா?

திராவிட மாடல் தமிழ்நாட்டை முன்னேற்றிவிட்டதா? என்ற தலைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் எழுதிய கட்டுரையை கீழே பகிர்ந்துள்ளோம்.


இந்திய அரசு “தேசிய பலபரிமாண வறுமைக் குறியீடு” (National Multi Dimensional Poverty Index) சில நாட்களுக்கு முன்னால் வெளியிட்டதிலிருந்து, “திராவிட மாடல் – சமூகநீதிப் பொருளியல் கொள்கை வெற்றியடைந்திருப்பதை நாடு ஒத்துக் கொண்டு விட்டது” என தி.மு.க.வின் “முரசொலி” ஏடு மட்டுமின்றி, தி.மு.க. ஆதரவாளர்கள் பலரும் கூரையேறிக் கூச்சலிட்டு வருகிறார்கள்.

இன்னொருபுறம், இது மோடி மாடலின் வெற்றியைக் காட்டுகிறது என ஆங்கில ஊடகங்களில் விவாதங்களும், கட்டுரைகளும் அடுத்தடுத்து வரத் தொடங்கிவிட்டன.

இதன் உண்மைநிலை என்ன என்று பார்த்துவிடுவது நல்லது!

இந்தியாவில் வறுமை நிலையை அளந்து, ஒரு கணக்கீட்டின் அடிப்படையில் முன்வைக்கும் முயற்சி பிரித்தானியக் காலனிய இந்தியாவிலேயே தொடங்கி விட்டது. 1901ஆம் ஆண்டு தாதாபாய் நவ்ரோஜி, உடம்பில் உயிர் ஒட்டிக் கொள்ளும் அளவுக்குக் கூட உணவு கிடைக்காதவர்கள் “வறுமைப்பட்டவர்கள்” என்ற வரையறுப்பை முன்வைத்தார். அதன்பிறகு, பிரித்தானிய அரசாங்கமும் இதுபோன்று வறுமையை அளவீடு செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டது. சுதந்திர இந்தியாவில் இலக்கடவாலா குழு, டெண்டுல்கர் குழு கடைசியாக, இரங்கராசன் குழு போன்றவை வறுமைக்கோடு குறித்து வெவ்வேறு அளவீடுகளை முன்வைத்தன.

கடைசியில், 2015ஆம் ஆண்டு – 1.25 டாலர் (அன்றைய நிலவரப்படி ரூபாய் 60) தனிநபர் வருமானம் உள்ளவர்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என்றும், அதற்குக் குறைவாக வருமானம் உள்ளவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் என்றும் வரையறுக்கப்பட்டது. அதாவது, ஒரு குடும்பத்தில் ஐந்து நபர்கள் என்றால், அந்தக் குடும்பத்தின் மாத வருமானம் 9000 ரூபாயும், அதற்கு மேலும் இருந்தால் அவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என்றும். அந்த வருமானம் கிடைக்காதவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் என்றும் வரையறுக்கப்பட்டார்கள். இதுவே மூன்று நபர்கள் குடும்பமாக இருந்தால், ரூபாய் 5,400 என்பது வரையறை!

பல நாடுகளில் இவ்வாறு பண வருமானத்தை அளவீடாக வைத்து, வறுமை நிலையைத் தீர்மானிக்கும் கொள்கை இருந்தது. இது, சமூகத்தில் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரின் வாழ்க்கைத் தேவைகள் நிறைவு குறித்து தெரிவிக்காது, ஒரு நாட்டிற்குள்ளேயே வெவ்வேறு சமூகத்தின் வறுமையின் அளவு என்ன என்பதையும் வெளிப்படுத்தாது என்ற திறனாய்வு பல்வேறு பொருளியல் அறிஞர்களால் முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக, நோபல் பரிசு பெற்ற மேற்கு வங்காள பொருளியல் அறிஞரான அமெர்த்தியா சென் இந்தச் சிக்கல் குறித்து ஆழமாக ஆய்வு செய்து, வறுமையைக் கணக்கிடுவதற்கு மாற்று முறைகளை முன்வைத்தார். வாய்ப்பு – வாய்ப்பு மறுப்பு (Deprivation) அணுகுமுறை (Capability Approach) என்ற அமெர்த்தியா சென்னின் புதிய அணுகுமுறை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் அக்கறை கொண்ட பலரையும் ஈர்த்தது.
பண வருமான வாய்ப்புக் குறைவு என்பது பல்வேறு வாய்ப்பு மறுப்புகளின் ஒரு கூறு என்று வரையறுத்த அமெர்த்தியா சென், சத்துணவு – உடை – நலவாழ்வு – கல்வி போன்ற வாழ்க்கையின் வெவ்வேறு இன்றியமையா வாய்ப்புகள் ஒருவருக்கு அல்லது ஒரு சமூகத்திற்கு எந்தளவு கிடைக்கிறது, எந்தளவு கிடைக்கவில்லை என்பதையும் கருத்தில் கொண்டு, பன்முக அளவீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

இந்த அணுகுமுறை பல்வேறு நாடுகளில், வெவ்வேறு கட்டங்களில் தங்கள் நாட்டில் கொள்கையாக ஏற்கப்பட்டது.
இந்தக் கொள்கையைத் தழுவி “மனித மேம்பாட்டுக் குறியீடு” (Human Development Index) என்ற பன்நோக்கு அளவீட்டு முறையை மகபூப் உல் அக் (Mahbub ul Haq) என்ற பாக்கித்தானிய பொருளியல் அறிஞர் முன்வைத்தார். அது ஐ.நா. மேம்பாட்டு நிறுவனத்தால் ஏற்கப்பட்டது. அந்த அளவீட்டு முறையை எல்லா நாடுகளும் பின்பற்றின. அதில், பண மதிப்பிலான வறுமையை மட்டுமின்றி, நேரடியான பண மதிப்புக்கு வெளியே இருக்கிற நலவாழ்வு (Health), கல்வி, வாழ்க்கைத் தரம் (Standard of Living) ஆகியவை குறித்த அளவீடுகளும் இடம்பெற்றன. இந்த அளவீடுகளில் ஒவ்வொருவருக்கும் நாட்டின் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் எவ்வாறு வாய்ப்புகள் கிடைக்கின்றன அல்லது மறுக்கப்படுகின்றன என்பதை வைத்து, மனித மேம்பாட்டுக் குறியீடு அணியப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 2015 செப்டம்பர் 25 அன்று நடைபெற்ற ஐ.நா. பொதுப் பேரவையில் “நீடித்த மேம்பாட்டுக்கான இலக்குகள் (Sustainable Development Goals)” என்ற 17 இலக்குகள் தீர்மானிக்கப்பட்டன. இந்தியா உள்ளிட்ட 193 நாடுகள் அந்தத் தீர்மானத்தில் கையெழுத்திட்டன. இவ்வாறு முன்வைக்கப்பட்ட இலக்குகளில் முதல் இலக்காக “வறுமையை அதன் எல்லா வடிவங்களிலும் நீக்குவது” (Ending Poverty in all forms) என்பது அறிவிக்கப்பட்டது. அதற்குள் மிகக் கொடுமையான வறுமை (Extreme Poverty) என்ற வரையறுப்பில் ஒருநாள் வருமானம் 1.25 டாலருக்குக் கீழே பெறுகிற தனிநபர்களை அதற்கு மேல் வருமானம் பெறுமாறு முன்னேற்றுவது என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நிலையில், பல பரிமாண வறுமையை 2030க்குள் ஒழிப்பது என்று இலக்கு வரையறுக்கப்பட்டது.

பல பரிமாண வறுமையை அளவீடு செய்வதற்கு “ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்முயற்சி” (Oxford Poverty and Human Development Initiative – OPHI) என்ற ஆய்வு நிறுவனம், ஒரு அளவீட்டை முன்வைத்தது. அதற்கு, அல்கயர் – பாஸ்டர் முறை (Alkire – Foster Method) என்று பெயர். ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்முயற்சி இயக்குநர் முனைவர் சபீனா அல்கயர் அம்மையார் மற்றும் அந்நிறுவனத்தின் பொருளியல் உறுப்பினர் ஜேம்ஸ் பாஸ்டர் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கியதால் இதற்கு இப்பெயர். (AF Method).

அல்கயர் – பாஸ்டர் ஆய்வு முறையானது, ஏற்கெனவே நடப்பிலிருந்த மனித மேம்பாட்டுக் குறியீட்டை அடிப்படையாக வைத்து, அதிலிருந்து மேம்பட்டக் கூறுகளை இணைத்ததாக அமைந்தது. இதுவும் நலவாழ்வு, கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று பரிமாணங்களை ஆய்வுக்கு உரியதாக முன்வைத்தது. இந்த மூன்றுக்கும் சம மதிப்பளவு (Weightage) வழங்கப்பட்டது. அதாவது, ஒவ்வொன்றுக்கும் 33.3 விழுக்காடு மதிப்பளவு வழங்கப்பட்டது.

அல்கயர் – பாஸ்டர் முறையைப் பின்பற்றி மேற்சொன்ன மூன்று பரிமாணங்களில் 12 குறியீடுகளை எடுத்துக் கொண்டு, வாய்ப்பு மறுப்பை இந்திய அரசின் நிதி ஆயோக் மேற்கொண்டது. நலவாழ்வு என்பதில் 1. சத்தான உணவு (Nutrition), 2. குழந்தைகள் மற்றும் இளையோர் இறப்பு விகிதம், 3. பேறுக்கால மருத்துவ கவனிப்பு ஆகிய குறியீடுகள் எடுத்துச் சொல்லப்பட்டன.

இவற்றுள் சத்தான உணவுக்கு 1/6, மற்ற இரு குறியீடுகளுக்கும் தலா 1/12 என்ற மதிப்பளவுகள் வழங்கப்பட்டன.
கல்வி என்ற பரிமாணத்தின் கீழ், பள்ளியில் படித்த ஆண்டுகள் என்பதும், பள்ளியில் வருகை என்பதும் 1/6 என்ற சம மதிப்பளவில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

வாழ்க்கைத் தரம் என்ற பரிமாணத்தின் கீழ் சமையல் எரிபொருள், சுகாதாரக் கழிப்பறை, குடிநீர், மின்சாரம், குடியிருக்கும் வீட்டின் தன்மை, குடும்பத்தின் சொத்து, வங்கிக் கணக்கு உண்டா இல்லையா ஆகிய 7 குறியீடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஒவ்வொன்றுக்கும் 1/21 என்ற மதிப்பளவு வழங்கப்பட்டது.

மதிப்பளவு வழங்குவதில் ஒரு குறியீடுக்கு ஏன் 1/6, வேறொன்றுக்கு ஏன் 1/21 என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டபோது, இதை முன்வைத்தவரான சபீனா அல்கயர் “இந்த மதிப்பளவு தன்னிச்சையானதுதான் (Orbitrary). ஆயினும், ஒவ்வொரு நாடும் தமக்கேற்ற வகையில் இந்த மதிப்பளவை மாற்றி வைத்துக் கொள்ளலாம்” என்று தான் பதில் அளித்தார். இந்தக் குறைபாடு, இந்த முறையியலில் இருந்தாலும் பலதுறை வாய்ப்பு மறுப்புகளை கணக்கில் கொள்வதால் உலக நாடுகள் இதனை ஏற்றுக் கொண்டன.

சத்துப் பற்றாக்குறை (Nutritional deprivation) என்பதைக் கணக்கிடும் போது, 59 மாதம் வரை உள்ள குழந்தைகள் தங்களது வயதுக்குரிய எடையில் இருக்கிறார்களா, வயதுக்குரிய உயரம் வளர்ந்து விட்டார்களா என்பதும், 15 வயதிலிருந்து 49 வயது வரை உள்ள பெண்களும், 15லிருந்து 54 வயது வரை உள்ள ஆண்களும் அவர்கள் வயதுக்குரிய மற்றும் அவர்களது உயரத்திற்குரிய எடையில் இருக்கிறார்களா என்பதும் வரையறுப்பாக சொல்லப்படுகிறது.

இவ்வாறு 12 குறியீடுகளுக்கும் வாய்ப்பு மறுப்புக்கு அல்லது பற்றாக்குறைக்கு அளவீடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

ஒரு குடும்ப உறுப்பினர் மேற்சொன்ன அளவீடுகளின்படி வாய்ப்பைப் பெற்றிருக்கிறாரா என்பதை வைத்து மதிப்பெண் போடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை அதன் வயதிற்கேற்ற எடையில் இருக்கிறதா என்பதைப் பார்த்து, அவ்வாறு இல்லையென்றால் பற்றாக்குறையைக் குறிப்பதற்கு 1 மதிப்பெண் வழங்கப்படுகிறது. வயதுக்குரிய எடையில் இருந்தால், 0 என்ற மதிப்பெண் கொடுக்கப்படுகிறது. இந்த மதிப்பெண் ஒன்றொன்றுக்கும் வழங்கப்பட்டுள்ள மதிப்பளவால் (Weightage) பெருக்கப்பட்டு பற்றாக்குறைக் குறியீடு (deprivation score) அணியப்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, சத்துணவு பற்றாக்குறை ஒரு குழந்தைக்கு இருக்குமானால் அதற்குரிய மதிப்பெண் 1. சத்தான உணவுக்குள்ள மதிப்பளவு 1/6. இதற்கு பற்றாக்குறைக் குறியீடு 1 x 1/6 = 0.166. இவ்வாறு ஒவ்வொரு பற்றாக்குறைக்கும் மதிப்பீடுகள் போடப்படுகின்றன.

அல்கயர் – பாஸ்டர் முறையியல்படி, ஒரு தனிநபர் மேற்சொன்ன 12 வாய்ப்பு மறுப்பிலும் அல்லது பற்றாக்குறையிலும், கணக்கில் சொல்லப்படும் குறியீடுகளில் 0.33-க்கு மேல் பற்றாக்குறை மதிப்பீடு பெற்றிருந்தால் தான் அவர் பல பரிமாண வறுமைக் குறியீட்டில் எடுத்துக் கொள்ளப்படுவார். அதாவது, எடுத்துக் கொள்ளப்படும் 12 குறியீடுகளிலும் குறைந்தது 4 குறியீடுகளில் அவர் பற்றாக்குறையில் இருந்தால் தான், அவர் பற்றாக்குறையில் அல்லது வாய்ப்பு மறுப்பில் இருக்கிறார் எனக் கருத்தில் கொள்ளப்பட்டு பல பரிமாண வறுமைக் குறியீட்டு எண் 1 வழங்கப்படும். அதற்கு மேல் இருந்தால், 0 என்று கொள்ளப்படும். அவர் பல பரிமாண வறுமைக்கு உள்ளாகவில்லை என்று பொருள்!

அதாவது, ஒருவர் சத்துப் பற்றாக்குறையோடு மட்டும் இருந்தால் அல்லது பள்ளி வயதுடைய ஒரு குழந்தை ஆறாண்டுகள் பள்ளிக்குச் செல்லாமல் இருந்தால் மட்டும் பல பரிமாண வறுமையில் இருப்பதாகக் கொள்ள முடியாது. மாறாக, ஒருவருக்கே நலவாழ்வு, கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகிய பரிமாணங்களில் குறைந்தது நான்கு பற்றாக்குறை இருக்க வேண்டும். அப்போதுதான் பல பரிமாண வறியோராகக் கொள்ளப்படுவார்.
இந்தக் கணக்கீட்டின்படி தான் மொத்த மக்கள் தொகையில், பல பரிமாண வறுமைக்கு உள்ளானோர் இந்தியாவில் சராசரியாக 25.01 விழுக்காட்டினர் எனவும், தமிழ்நாட்டில் அத்தகையோர் 4.89 விழுக்காட்டினர் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் புள்ளி விவரங்களைக் கொண்டுதான், இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலங்களில் முதல் வரிசையில் தமிழ்நாடு வந்துவிட்டது, இது திராவிடச் சாதனை என்று குதிக்கிறார்கள். இன்னொருபக்கம், இந்தக் கணக்கீடு “மோடி மாடல் வென்றுவிட்டது” என்று கூச்சலிடுவதற்கும் பயன்படுகிறது.

அல்கயர் – பாஸ்டர் முறையியல் என்பது, நேரடியாக இதற்கென்று குடும்பங்களை அணுகி கணக்கீடுகள் எடுப்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், நிதி ஆயோக்கின் “தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு” (National Multi Dimensional Poverty Index) என்பது 2015 – 2016 தேசிய குடும்ப நலவாழ்வு ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அணியப்படுத்தப்பட்டது. இதற்கென்று, நேரடியாக எந்தக் கள ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

இப்போது, 2019 – 2021-க்கான தேசிய குடும்ப நலவாழ்வு அறிக்கை வெளி வந்திருக்கிறது. இந்த தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடும், அதற்குத் தகுந்தாற்போல சரி செய்து அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில், இந்திய அரசின் பல பரிமாண வறுமைக் குறியீடு இதற்கான நேரடிக் கள ஆய்விலிருந்து புள்ளி விவரங்களை சேகரித்து மேற்கொள்ளப்படும் முதல்நிலை ஆதாரத்திலிருந்து (Primary Source) வறுமைக் குறியீட்டை அணியம் செய்யவில்லை. மாறாக, இரண்டாம் நிலை ஆதாரங்களிலிருந்து (Secondary Source) பெறப்பட்டுள்ளது என்பது தெளிவாகும்.

தேசிய குடும்ப நலவாழ்வு அறிக்கை என்பது வரம்புக்குட்பட்ட மாதிரிகள் (Limited samples) வைத்து அணியப்படுத்தப்படுவதுதான் என்பதை அந்த ஆய்வு நிறுவனங்களே ஏற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே, இது விரிவான கணக்கெடுப்பு அடிப்படையில் உருவாக்கப்படாததால் அதில் நிறைய குறைபாடுகள் இருக்கின்றன என்பதை பல ஆய்வாளர்களும் வெளிப்படுத்தி வருகிறார்கள். (எடுத்துக்காட்டு, இருதய ராஜன், தி எக்கனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, India’s Progress beyond Demographic Indicators, S. Irudaya Rajan and Udaya S. Mishra, EPW – Vol. 56, Issue No. 49, 04 Dec, 2021).

இந்தப் புள்ளி விவரங்களிலிருந்து “திராவிட மாடல்” என்று குதிப்பதற்கு எதுவுமில்லை! ஏனென்றால், தாதாபாய் நவ்ரோஜி காலக் கணக்கீட்டிலிருந்து ஒவ்வொரு முறை வெவ்வேறு ஆய்வு வழிகளில் வறுமை அளவீடுகள் வெளியான போதும், அண்மைக்காலமாக மனித மேம்பாட்டுக் குறியீடுகள் வெளியான போதும், தமிழ்நாடு முன்வரிசையில்தான் இருந்தது! பிரித்தானிய ஆட்சிக்காலத்திலும் காங்கிரசுக் கட்சி ஆண்ட போதும், தமிழ்நாட்டின் நிலை இதுதான்!

இன்னும் சொல்லப்போனால், வரலாற்றின் எந்தக் காலகட்டத்திலும் ஆரிய வர்த்தமான இன்றைய பீகார், உ.பி., ம.பி. ஆகியவற்றைவிட தமிழ்நாடு பின் தங்கியதே இல்லை! எந்த மன்னரும் சிந்தித்திராத காலத்திலேயே மக்கள் நலனையும், கோயில் பணிகளையும் இணைக்கும் வகையில் “சாவா மூவா ஆடுகள்” வழங்கியப் பெருமை பேரரசன் இராசராசனுக்குரியது!

மேற்குலகத்தினர் உட்பட பல இனத்தவர்கள் கடலை வியந்து பார்த்துக் கொண்டிருந்த காலத்தில், அதை ஒரு ஏரியைப் போல கடந்து சென்று பன்னாட்டு வணிகத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள் தமிழர்கள்! இந்த வரலாற்றுத் தொடர்ச்சியாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவ்வளவுதான்!
ஆயினும், சத்தான உணவுப் பற்றாக்குறை என்ற அளவீட்டின்படி தமிழ்நாட்டு மக்களில் 24.8 விழுக்காட்டினர், அதாவது ஏறத்தாழ 25 விழுக்காட்டினர் வருகிறார்கள். அதேபோல், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனியாகக் கழிப்பறை இல்லாத மக்கள் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 48 விழுக்காட்டினராக 2015 – 2016 கணக்கின்படி இருக்கிறார்கள். 2019 – 2021-இல் வந்துள்ள ஐந்தாவது அறிக்கையின்படி ஏறத்தாழ 28 விழுக்காட்டினர் குடும்பத்திற்குத் தனிக் கழிப்பறை இல்லை என்ற நிலையில் இருக்கிறார்கள் என்று பல பரிமாண வறுமைக் குறியீட்டு ஆய்வறிக்கை கூறுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பீகாரோடும், மத்தியப்பிரதேசத்தோடும், சார்க்கண்டோடும் ஒப்பிட்டு தனக்குத்தானே முதுகில் தட்டிக் கொள்வது உண்மை நிலையை உணர உதவாது! தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கூட கிடைக்காதவர்கள் மிகக் குறைவானவர்களே என்று மகிழ்வதை விட, ஏறத்தாழ 2 கோடி பேர் சத்துப் பற்றாக்குறையில் இருக்கிறார்களே எனக் கவலைப்படுவதே நல்ல ஆட்சியாளர்களின் அடையாளம்!

ஏனென்றால், சத்துப் பற்றாக்குறையிலேயே வளரும் இளையோர் நாளைக்கு உழைக்கும் தகுதியில் இல்லாமல் போவார்கள். தமிழ்நாட்டில் உழைப்பாளர் பற்றாக்குறை அதிகமாகி, இந்திக்காரர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர் படையெடுப்புக்கு விரிவான வாய்ப்புகள் ஏற்படும்.

மேலும், சத்துப் பற்றாக்குறையானது நோய்த் தொற்றுகள் அதிகமாவதற்கும் வழிவகுக்கும். இதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அறிக்கை 2015 – 2016 ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறபோது, மு.க. ஸ்டாலின் ஆட்சி இதில் தனியாக மார்தட்டிக் கொள்வதற்கும் எதுவுமில்லை!

கவனிக்க வேண்டிய இன்னொரு முகாமையான செய்தி, பல பரிமாண வறுமையை அளப்பதற்கான அடிப்படையாகக் கொண்ட தேசியக் குடும்ப நலவாழ்வு அறிக்கை மோடி ஆட்சிக்கு சான்றிதழ் வழங்குவதற்காகவே செயற்கையாகத் தயாரிக்கப்பட்டதோ என ஐயப்படுவதற்கு அடிப்படை உண்டு!
ஏனெனில், “தேசிய குடும்ப நலவாழ்வு அறிக்கை 2015 – 2016-க்கும், 2019 – 2021-க்கும் இடையில் பாய்ச்சல் வேக முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதைப் போல கணக்குகள் கூறப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, 2015 – 2016 கணக்கீட்டின்படி பீகாரில் 40 விழுக்காட்டுக் குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு இல்லை என்று அறிவிக்கப்படுகிறது. ஆனால், 2019 – 2021 அறிக்கையில் அம்மாநிலத்தில் மின்சார இணைப்பு கிடைக்காத குடும்பங்களின் அளவு 3.7 விழுக்காடாக திடீரென்று குறைந்துவிட்டது. அதாவது, 2014இல் மோடி பதவியேற்ற பிறகு ஐந்தாண்டுகளுக்குள் பீகார் மக்களில் 4 கோடி பேருக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது என்று ஒரு ஆய்வறிக்கை சொல்லுமானால், அதை ஆய்வறிக்கை என எந்தத் தகுதியோடு ஏற்றுக் கொள்வது?

அதேபோல், உத்தரப்பிரதேசத்தில் 2015க்கும் 2019க்கும் இடையில் மின்சார இணைப்பு இல்லாதோர் தொகை 28 விழுக்காட்டிலிருந்து 9 விழுக்காடாகக் குறைந்துவிட்டது, பெரும்பாலான மக்கள் மின்சார இணைப்பு பெற்றுவிட்டார்கள் என்று இந்த ஆய்வறிக்கை கூறுவது மோடிக்கான பரப்புரையாகவே தெரிகிறது.
ஏனென்றால், நிதி ஆயோக் உட்பட, புள்ளி விவரத் துறைகள் உட்பட, தேர்தல் ஆணையம் உட்பட பல்வேறு அரசு நிறுவனங்கள் மோடி ஆட்சிக்கு சாதகமாக வளைக்கப்பட்டுவிட்டன என்பதை கண்முன் பார்த்தோம். வேலையின்மை குறித்து, தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் ஒரு ஆண்டுக்கான அறிக்கையே வெளியிடாமல் நிறுத்திய நிலையில், அதைத் தாண்டி உண்மையைச் சொன்ன உயர் அதிகாரி நீக்கப்பட்டதையும் மோடி ஆட்சியில் பார்த்தோம்.

2014இல் மோடி ஆட்சிக்கு வந்தவுடனே “தூய்மை இந்தியா” (சுவட்சு பாரத்) என்று படாடோபமாக அறிவித்தார். அது நடந்துவிட்டது என்று காட்டுவதற்கு 2015இல் இந்தியாவில் தனிக் கழிப்பிட வசதி இல்லாதோர் 52 விழுக்காட்டினராக இருந்தது, இப்போது 29 விழுக்காட்டினராக தடாலடியாகக் குறைந்துவிட்டது எனக் காட்டுகிறார்கள். ஆனால், முன்னேறிய மாநிலங்களின் வரிசையிலுள்ள தமிழ்நாட்டிலேயே 2019 கணக்கீட்டின்படி 28 விழுக்காட்டினர் தனிக் கழிப்பறை வசதி இல்லாமல் இருக்கிறார்கள் என்றால், ஒட்டுமொத்த இந்தியாவில் 52 விழுக்காடாக இருந்தது 29 விழுக்காடாகக் குறைந்துவிட்டது என்பதை எவ்வாறு நம்புவது?

மோடியின் சாதனைப் பட்டியலை செயற்கையாக ஊதிக் காட்டுவதற்கே “தேசிய குடும்ப நலவாழ்வு அறிக்கை 2019 -2021” அணியப்படுத்தப்பட்டிருக்கிறதோ என வலுவாக ஐயப்பட இடமிருக்கிறது!

மோடி ஆட்சியில் பெண் சிசுக் கொலை அல்லது பெண் சிசு கருக்கலைப்பு குறைந்துவிட்டது எனக் காட்டுவதற்கே 2019 – 2021 அறிக்கையில் ஆண்களை விட பெண்கள் தொகை அதிகரித்துவிட்டது எனக் கூறுவதும் இருக்குமோ என ஐயப்பட இடமிருக்கிறது.

இந்தக் கணக்கீட்டை ஆய்வாளர்கள் ஐயத்தோடுதான் அணுகுகிறார்கள். அல்கயர் – பாஸ்டர் முறையில் சிற்சில குறைபாடுகள் இருந்தாலும், அடிப்படையில் பல வகையான வாய்ப்பு மறுப்புக்கு உள்ளானோரை அடையாளம் காணப் பயன்படுகிறது. அதனை மிகவும் குறைபாடுடைய தேசிய குடும்ப நலவாழ்வு ஆய்வின் அடிப்படையில் செய்யும்போதுதான், அதன் நம்பகத்தன்மை குறைகிறது.

அதற்கேற்றாற்போல் கடந்த சில நாட்களாக காட்சி ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் “அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே மோடி மாடல்” என்ற பரப்பரைக் கூச்சல் அதிகரித்து வருகிறது. உத்திரப்பிரதேசம் – பஞ்சாப் தேர்தல் நெருங்குவதால், அதன் ஒலி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சி, தன் பங்கிற்கு தனக்கான பரப்புரையாக இதைப் பயன்படுத்திக் கொள்ள முனைகிறது.

தேசிய குடும்ப நலவாழ்வு அறிக்கையின் அடிப்படையில் அணியமானதால், பல பரிமாண வறுமைக் குறியீடு ஆய்வறிக்கை பல குறையுடைய ஆய்வறிக்கையாக இருக்கிறது. எனினும், இதில் சுட்டிக்காட்டப்படும் பற்றாக்குறைகளை குறிப்பாக சத்துப் பற்றாக்குறையில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே பெறப்படும் படிப்பினையாக இருக்க வேண்டும்.

மாறாக, “திராவிட மாடல் வெற்றி பெற்றுவிட்டது” என்று போட்டிப் போட்டுக் கொண்டு மார்தட்டிக் கொண்டிருந்தால், தமிழ்நாடுதான் பின்னடைந்து போகும்! தமிழ்நாட்டு மக்கள்தான் நோயாளிகளாக மாறுவார்கள்.


கட்டுரை உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Leave a Reply