இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டனை அடித்து கொன்ற காவல்துறையினருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு மணிகண்டன் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பரமக்குடி சாலையில் கடந்த 04.12.2021 சனிக்கிழமை அன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 21 வயதான கல்லூரி மாணவர் மணிகண்டனையும், அவரது நண்பரையும் சந்தேகத்தின்பேரில் விசாரணைக்காக கீழத்தூவல் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
சில மணி நேரங்கள் கழித்து உடல்நலக் குறைவுடன் விடுவிக்கப்பட்ட தம்பி மணிகண்டன் முதுகுளத்தூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காவல்துறை உயர் அதிகாரிகளும் தமிழக அரசும் உடனடியாக மணிகண்டனின் மரணத்தை சந்தேக மரணமாக விசாரணைக்கு எடுத்து தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தம்பி மணிகண்டன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பில் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
—
வ.கௌதமன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
“சோழன் குடில்”