Home>>இந்தியா>>சிறந்த பள்ளிக்கான விருதை தட்டிச் சென்ற பரவாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
இந்தியாகட்டுரைகள்கல்விசமூக பணிசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடி

சிறந்த பள்ளிக்கான விருதை தட்டிச் சென்ற பரவாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகில் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் கடந்த 1929 ஆம் ஆண்டு முதல் (92 வருடங்கள்) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்போது தற்போது 116 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

2019 – 20 ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான விருது தமிழ்நாடு அரசால் திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மன்னார்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பரவாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட செருவலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவை அடங்கும்.

இவ்விருதுகளை அப்பள்ளியின் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி கல்வியில் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை கூறினர்.

ஒரு சிறந்த பள்ளி என விருது பெறுவதற்கு இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணாக்கர்கள், கிராமவாசிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து நலத்திட்ட நண்பர்கள் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த குழுவின் மூலமாக சுமார் ரூபாய் 7 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளியில் கழிப்பறை வசதி, நூலக வசதி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதி அனைத்து வகுப்புகளுக்கும் மின் விசிறிகள், தனியார் பள்ளிக்கு இணையாக சீருடைகள், ஆங்கில வழி கல்வி கற்பிக்க 2 ஆசிரியைகள், பள்ளி நுழைவு வாயில் உள்பட பல்வேறு உள்கட்டமைப்பு களையும் அடிப்படை வசதிகளையும் அரசை எதிர்பார்த்து காத்திராமல் நலத்திட்ட நண்பர்கள் குழுவினரே கிராம மக்கள் ஒத்துழைப்போடு செய்து கொடுத்துள்ளனர் என்பது கவனத்திற்குரியது. ரூபாய் 1.7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நுழைவு வாயிலும் கட்டப்பட்டு சிறப்பான முறையில் திறப்பு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சிறந்த உள்கட்டமைப்புகள், அதிக மாணவர் சேர்க்கை, தன்முனைப்பான ஆசிரியர் ஆசிரியர்கள், சிறந்த கல்வி கற்கும் சூழ்நிலை போன்ற தரம் உயர்த்தப்பட்ட செயல்பாடுகளால் இன்று பரவாக்கோட்டை ஊராட்சி தொடக்கப்பள்ளி சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் விருதை வென்றுள்ளது. இத்தகைய பெரிய சாதனையை செய்ய காரணமாய் அமைந்து இதன் பின்னால் நின்று உழைத்த பரவாக்கோட்டை நண்பர்கள் நல்ல திட்ட குழு உறுப்பினர்களுக்கும், அவர்களுக்கு தோள் கொடுத்து இதனை செம்மையாக செய்த முன்னாள் மாணாக்கர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் அங்கே பயிலும் தற்போதைய மாணவ மாணவிகளுக்கும், ஒத்துழைப்பு தந்த பரவாக்கோட்டை கிராம மக்கள் அனைவருக்கும் மேலும் இந்த நல்ல செயலுக்கு மனமுவந்து உதவி செய்த ஒவ்வொருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

என்ற குறளுக்கு ஏற்ப செய்வதற்கு அருமையான செயல்களை செய்த இவர்களே ஊரின் பெரியவர்கள். இப்பள்ளியின் முன்னாள் மாணவி என்ற அடிப்படையில் பெருமிதமும் மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.

ஊர் மக்களும், முன்னாள் மாணவ மாணவிகளும், ஆசிரியர்களும், நலத்திட்ட நண்பர் குழு உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு பள்ளியை சிறந்த பள்ளியாக மாற்ற முடிந்திருக்கிறது. இதை எண்ணி பெருமிதமும் மகிழ்ச்சியும் உவகையும் கொள்ளும் அதே நேரத்தில் நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளும் அவர்கள் கட்டமைத்த அரசாங்கமும் பங்கு வகிக்கும் அரசு எந்திரத்தின் பொறுப்புகளும் வேலைகளும் என்ன? என்ற கேள்வியும் மனதில் எழத்தான் செய்கிறது.

தேர்தல் நேரத்தில் கோடிகளை தேர்தல் களத்தில் கொட்டும் அரசியல்வாதிகள் இதுபோன்ற நல்ல செயல்களை முன்னெடுத்து செய்து மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று அரசு கட்டிலை எப்பொழுதும் தன்வசம் வைத்திருக்கலாம். ஏனோ இது அரசியல்வாதிகளுக்கு விளங்குவதில்லை, வாக்களிக்கும் நேரத்தில் தலைக்கு ரூபாய் வாங்கிக்கொண்டு வாக்களிக்கும் எமது மக்களுக்கும் இது தோன்றுவதில்லை.


செய்தி சேகரிப்பு:
இளவரசி இளங்கோவன்,
கனடா

Leave a Reply