Home>>செய்திகள்>>தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகளை அசிங்கப்படுத்தும் ZEE TAMIL தொலைகாட்சி.
செய்திகள்தமிழ்நாடுமாற்று திறனாளிகள்

தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகளை அசிங்கப்படுத்தும் ZEE TAMIL தொலைகாட்சி.

மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை சங்கிலியால் பிணைத்து வைத்திருப்பது அவர்களது நோயின் தாக்கத்தை மேலும் அதிகப்படுத்துமே தவிர நோயை குணப்படுத்தாது. இதுபோன்று மனநிலை பாதிக்கப்பட்டவர்களை சங்கிலியால் பிணைத்து வைத்திருந்தால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அதற்கு ஓர் உதாரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஏர்வாடியில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சங்கிலியால் பிணைத்து வைக்கப்பட்டிருந்த காரணத்தால் தப்பிக்க முடியாமல் பலரும் தீயில் உடல் கருகி உயிரிழந்தது நமக்கெல்லாம் நினைவில் இருக்கிறது.

இந்நிலையில், ZEE TAMIL தொலைகாட்சியில் செம்பருத்தி என்னும் தொடரில் இடம்பெறும் ஒரு கதாப்பாத்திரம் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதுபோல் சித்தரித்து அந்த கதாப்பாத்திரத்தை சங்கிலியால் பிணைத்து வைத்திருப்பதுபோல் காட்சியமைப்பு செய்திருக்கிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களை சங்கிலியால் பிணைத்து வைக்க கூடாது என்கிற தமிழக அரசின் உத்தரவுக்கு மாறாக இதேபோல் பலமுறை இந்த தொலைகாட்சி நிறுவனம் மாற்றுத்திறனாளிகளை கேவலப்படுத்தி வருகிறது.

மனித உரிமையை காலில் போட்டு மிதிக்கும் வேலையை தொடர்ச்சியாக செய்துவரும் ZEE TAMIL தொலைகாட்சி உடனடியாக இதுபோன்ற காட்சிகளை மேற்கண்ட தொடரில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இதுபோல் மாற்றுத்திறனாளிகளை அசிங்கப்படுத்தும் வேலைகளை இனியும் செய்யக்கூடாது என்றும் இதேநிலை தொடரும் பட்சத்தில் ZEE TAMIL தொலைகாட்சி எதிராக மாற்றுத்திறனாளிகளை திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதையும் எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறோம்.


திரு. S. பகத்சிங்,
மாவட்ட செயலாளர்,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்,
திண்டுக்கல் மாவட்டக்குழு,
தொடர்பு இலக்கம்: 9360804000

Leave a Reply