Home>>இந்தியா>>ஒரே நாடு – ஒரே மதம் என்பதைப் போல “ஒரே தீர்வு தடுப்பூசி” என்பதும் பாசிசம்தான்!
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

ஒரே நாடு – ஒரே மதம் என்பதைப் போல “ஒரே தீர்வு தடுப்பூசி” என்பதும் பாசிசம்தான்!

ஒரே நாடு – ஒரே மதம் என்பதைப் போல “ஒரே தீர்வு தடுப்பூசி” என்பதும் பாசிசம்தான்! என தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. அருணபாரதி அவர்கள் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதை தங்கள் பார்வைக்கு கீழே பகிர்ந்துள்ளோம்.


ஒருவரது உடலில் இயல்பாக இருக்க வேண்டிய நோய் எதிர்ப்பாற்றல் குறைந்து காணப்பட்டால், அவரது உடலை நோய்க் கிருமிகள் தொற்றிக் கொள்வது தவிர்க்க இயலாதது! அதன்படியே, கொரோனா எனும் இப்பெருந்தொற்று, உடலில் எதிர்ப்பாற்றல் குறைந்து காணப்படும் மனிதர்களிடம் எளிதாகத் தொற்றிக் கொண்டு, உயிரிழப்பு வரை ஆபத்தை ஏற்படுத்துகிறது.

உண்மையில், கொரோனா பெருந்தொற்றை வெல்ல வேண்டுமெனில் அனைவரும் தங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப ஒவ்வொரு குடிமக்களுக்கும் சத்தான உணவு, தூய்மையான குடிநீர், மாசற்ற காற்றும் சுற்றுச்சூழலும் கொண்ட வாழ்விடம் ஆகியவை கிடைப்பதற்கு அரசுதான் வழிவகை செய்ய வேண்டும். ஆனால், இதை உறுதிசெய்ய இயலாத அரசு, “கொரோனாவை வெல்ல தடுப்பூசியே தீர்வு” என செயலில் இறங்கியுள்ளது.

இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி, இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலும் உள்ள மக்கள் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். தடுப்பூசிகள் இலவசமாக வழங்குப்பட்டுவருகிறது. அறிவித்து களம் இறங்கியுள்ளார். இந்தியா முழுவதும் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள ஒவ்வொரு மாநில அரசும் இலக்கு வைத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கடந்த 2021 பிப்ரவரியில் இந்திய அரசு, தனது வரவு செலவுத் திட்டத்தில் கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கும், மக்களிடம் அதைக் கொண்டு செல்வதற்கும் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், இச்செலவினம் கடந்த சூன் 2021ஆம் மாதம் – 50,000 கோடியாக உயர்ந்துள்ளது. (காண்க : தி எகனாமிக் டைம்ஸ், 09.06.2021).

இவ்வளவு பெருந்தொகையை அரசிடமிருந்து பெற்றுக் கொண்டு கொரோனா தடுப்பூசிகளை அளிக்கும் தனியார் பெருமுதலாளிய நிறுவனங்கள் தொடக்கத்திலிருந்தே ஊசிகளின் விலையை உயர்த்தி, இலாபம் ஈட்டுவதிலேயே குறியாக இருந்தன. ஒவ்வொரு தடுப்பூசி நிறுவனங்களுக்கிடையிலான போட்டியும் இதற்கு நடுவிலேயே நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை, கொரோனோவை வெல்ல அலோபதி எனும் ஆங்கில மருத்துவ முறையின் தடுப்பூசி தீர்வு மட்டுமின்றி, தமிழர்களின் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஓமியோபதி மருத்துவமுறை, யுனானி மருத்துவமுறை போன்ற பல்வேறு மாற்று மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. இவற்றை இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகமும் அங்கீகரித்து, அவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு, அம்முறைகள் அங்கீகரிக்கப்பட்டும் உள்ளன.

ஆனால், இந்தப் பன்முக மருத்துவ முறைகளையெல்லாம் பொருட்படுத்தாமல், ஒற்றை மருத்துவம் – அலோபதி, ஒற்றைத் தீர்வு – தடுப்பூசி என்று மக்களிடையே திணிப்பது சனநாயக விரோதம் மட்டுமின்றி, பாசிசத்தன்மை கொண்டதுமாகும்!

புதுச்சேரி ஒன்றியப் பகுதியில், கடந்த 04.12.2021 அன்று, ஓரு ஆணையை (ஆணை எண் : No. Misc / Emergency / Order / 12 / 2021) வெளியிட்ட புதுச்சேரி நலவாழ்வுத் துறை இயக்குநர் சிறீராமலு, புதுச்சேரியில் வாழும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். அதற்கு அடுத்த சில நாட்கள் கழித்து, புதுச்சேரிக்கான இந்தியத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராசன் அவர்கள், தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றுகளோடு தான் மக்கள் இனி தெருக்களில் நடமாட வேண்டுமென்று பேசினார்.
சாலைகளில் ஆங்காங்கு நின்று கொண்டு, தலைக்கவசம் – முகக்கவசம் போட்டு வராதவர்களிடம் தண்டத்தொகை வசூலிக்கக் காவலர்கள் நிற்பதைப் போல், இனி புதுச்சேரியின் ஒவ்வொரு வீதியிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களிடம் தண்டத் தொகை வசூலிக்கும் நடைமுறை வரப்போகிறது! இதில், காவலர்களின் மனித உரிமை அத்துமீறல்களுக்கும் குறைவிருக்காது!

புதுச்சேரி அரசு இவ்வாறு தடுப்பூசி கட்டாயம் என சொல்லிக் கொண்டிருந்த இதே நாட்களில்தான், தடுப்பூசி கட்டாயமாக்கப்படவில்லை என இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த விந்தையும் நடந்தது! கடந்த 29.11.2021 அன்று, உச்ச நீதிமன்றத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி குறித்த வழக்கு விசாரணையின்போது இந்திய அரசு இதனை தெளிவுபடுத்தியது.

கடந்த 01.12.2021 அன்று தில்லியில் ஊடகங்களைச் சந்தித் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா, “கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் நோக்கம், வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதுதான். வைரஸ் பரவும் ஆபத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போட முடிந்து, பரவல் சங்கிலியை உடைக்க முடிந்தால் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டியதில்லை” என்றார். இந்திய ஒன்றிய நலவாழ்வுத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், “ஒட்டுமொத்த மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒருபோதும் அரசு பேசவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்றார். (காண்க – தினந்தந்தி, 02.12.2021).

இதற்கு முன்பே, கடந்த 2020 திசம்பர் 21 அன்று, இந்திய நலவாழ்வுத் துறை அமைச்சர் அர்சா வரதன் கொரோனா தடுப்பூசிகள் கட்டாயமாக்கப்படவில்லை என்றும், விருப்பப்படுவோர் மட்டுமே போட்டுக் கொள்ளலாம் என்றும் ஊடகங்களிடம் தெரிவித்தார். இன்றைக்கும் இந்திய அரசின் நலவாழ்வுத் துறை அமைச்சகம் தடுப்பூசி கட்டாயமல்ல என்றே கூறுகிறது. தடுப்பூசி கட்டாயமாகப்பட்டுள்ளதா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி இந்திய நலவாழ்வுத் துறை மட்டுமின்றி, பல்வேறு மாநில அரசுகளிடம் இதுவரை பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கெல்லாம், “கட்டாயமாக்கப்படவில்லை” என்றே பதில் வந்துள்ளது. ஆனால், நடைமுறையில் தடுப்பூசி ஒவ்வொருவர் மீதும் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பல்வேறு விதிமீறல்கள் மற்றும் தனிமனித உரிமைப் பறிப்புச் சிக்கல்கள் இருப்பதால் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் என்றோ அறிவித்துவிட்டது. ஆனால், இன்றைக்கு நடைமுறையில் ஆதார் அட்டை இல்லாமல் எந்த அரசு அலுவலகத்திற்குள்ளும் நுழைய முடியாத அளவுக்கு, ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுபோல், நீதிமன்றத்திற்குள் “தடுப்பூசி கட்டாயமல்ல!” என்று பேசும் இந்திய அரசு, மறுபுறத்தில் தடுப்பூசியைக் கட்டாயமாகத் திணிக்கும் பணியில் இறங்கிவிட்டது.

இந்தியத் துணைக் கண்டத்தின் அனைத்து மக்களிடமும் தடுப்பூசியைத் திணிக்கும் இந்திய அரசு, இத்தடுப்பூசியை செலுத்திக் கொள்வதால் வரும் பின்விளைவுகளுக்கு பொறுப்பேற்க மறுக்கிறது. தடுப்பூசி வழங்கும் தனியார் நிறுவனங்களும் பொறுப்பேற்க இயலாது என அறிவித்துவிட்டன. காப்பீட்டு நிறுவனங்களும் கூட இதற்குப் பொறுப்பேற்க மாட்டார்கள். தடுப்பூசியைப் பரிந்துரைக்கும் மருத்துவர்களும் இதற்குப் பொறுப்பேற்பதில்லை. தடுப்பூசியால் நிகழும் மரணம் முதற்கொண்டு ஏற்படும் பின்விளைவுகளுக்கு நட்ட ஈடு கூட இதுவரை அறிவிக்கப்படவில்லை!

கொரோனோவை எதிர்கொள்ள உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசியை மக்களிடம் தனியார் பெருங்குழும மருந்து நிறுவனங்கள் சோதித்துப் பார்ப்பதே தற்போது நடந்து கொண்டுள்ளது என்பதால், பின்விளைவுகளுக்கு எவரும் பொறுப்பேற்க முன்வர மறுக்கிறார்கள்.

கடந்த 07.12.2021 அன்று, இந்திய நாடாளுமன்றத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு ஏற்பட்டுள்ள பின்விளைவுகள் குறித்து இந்திய நலவாழ்வுத்துறை துணை அமைச்சர் பாரதி பிரவீன் பவாரிடம் வினா எழுப்பப்பட்டது. அதற்கு எழுத்து வடிவில் பதில் அளித்துள்ள அவர், இதுவரை (30.11.2021) தடுப்பூசி செலுத்தியதன் பின்னர் 49,819 பின் விளைவுகள் (Adverse Events Following Immunisation – AEFI) ஏற்பட்டுள்ளன என்றும், 1019 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும், 946 பேர் இறந்தும் போயுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

அரசின் அழைப்பை ஏற்று, தாங்களே சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதிப்பைச் சந்தித்துள்ள இவர்களுக்கெல்லாம் எந்தவகை நட்ட ஈட்டுத் தொகையோ, மறுவாழ்வுக்கான ஏற்பாடோ அரசாலோ, தடுப்பூசி நிறுவனங்களாலோ வழங்கப்படாது! ஏனெனில், இவர்கள் பரிசோதனை எலிகள்!

இவ்வாறான மோசமான நடைமுறையை வைத்துக் கொண்டு, அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என எல்லோரிடமும் இதைத் திணிக்க எவ்வளவு ஆணவம் வேண்டும்? குறைந்தபட்சம், தடுப்பூசி போட்ட பிறகு இறந்தோரின் குடும்பங்களுக்காவது ஞாயமான விடை சொல்ல ஏன் தயங்குகிறார்கள்?
தடுப்பூசியால் அனைவருக்கும் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்பதும், நோய் எதிர்ப்பாற்றல் மிகக் குறைவாக உள்ளவர்களுக்கும், பிற துணை நோய் உள்ளவர்களுக்கும், ஊசியால் ஒவ்வாமை ஏற்படுவோருக்கும்தான் இந்த பாதிப்புகள் என்பதும் உண்மையே! இவ்வாதப்படி, இவ்வாறான பாதிப்பு கொண்டோருக்கு தடுப்பூசியிலிருந்து விலக்கு அளித்தால் மட்டுமே இவர்களை பாதுகாக்க முடியுமல்லவா?

தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதிப்பு எதிர்கொள்ளாமல், இவர்களின் நோய் எதிர்ப்பாற்றலைப் பெருக்கி – கொரோனோவை தன் உடலாலேயே எதிர்கொள்ள வைக்கும் செயல்திட்டம் அலோபதி முறையில் உண்டா? சித்த மருத்துவம் போன்ற மாற்று மருத்துவ முறைகளில்தானே இவையெல்லாம் உண்டு. இதையெல்லாம் உணராமல், “அனைவருக்கும் ஒரே தடுப்பூசி” என்பது பொறுப்பற்றத்தனமல்லவா?

இவை ஒருபுறமிருக்க, தடுப்பூசி போட்டவர்களால் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க முடியும் என்பதற்கு எவ்வித அறிவியல் சான்றும் இல்லை! 95 விழுக்காட்டு மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் சிங்கப்பூரில், நோய்த்தொற்று பரவியது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர் மட்டுமின்றி, தடுப்பூசி செலுத்திக் கொண்டோரும் கொரோனா நோய்க் கிருமியைப் பரப்ப முடியும் என்பதால்தான், முகக்கவசம் இருதரப்பினருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 08.12.2021 அன்று, ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் காணொலிக் கருத்தரங்கில் பேசிய ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வெரோனிகா மிக்கேல் அம்மையார், எந்த சூழலிலும் தடுப்பூசிகள் கட்டாயமாக்கப்படக் கூடாது என்று பேசினார். பணக்கார நாடுகளில் வாழும் வயது வந்தோரில் 65% பேர் தடுப்பூசிகள் பெற்றுள்ள நிலையில், வறியவர்கள் வாழும் நாடுகளில் வெறும் 8% பேரே தடுப்பூசிகள் பெற்றுள்ளனர் என்று கூறிய அவர், தடுப்பூசிகள் சென்று சேர்வதில் உள்ள பாகுபாடான நிலையை சுட்டிக் காட்டினார்.

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், அனைவரும் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென அரசுத் தரப்பில் வலியுறுத்தி வணிகர்களிடமும், பொது மக்களிடம் பெரும் பரப்புரை நடந்தபோது, அம்மாநில உயர் நீதிமன்றம் தானே முன்வந்து அதை வழக்காகப் பதிவு செய்தது. அவ்வழக்கில் (Registrar General, High Court of Meghalaya v. State of Meghalaya, PIL No. 6/2021) கடந்த 23.06.2021 அன்று தீர்ப்பளித்த மேகாலய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பிஸ்வநாத் சோமதர் மற்றும் நீதிபதி எச்.எஸ். தங்கியூ ஆகியோர், தடுப்பூசியைக் கட்டாயப்படுத்துவது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான செயல் என அறிவித்தனர்.

இந்தியக் குடிமக்கள் சுதந்திரமாக எங்கும் வெளியே சென்று தங்களுக்கான விருப்பமுள்ள வேலையை பார்த்துக் கொண்டு உயிர் வாழ்வதை அடிப்படை உரிமையாக இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ளது.

இந்நிலையில், உயிர் வாழும் உரிமை, தனி மனித சுதந்திரம், வாழ்வாதார உரிமை ஆகியவற்றை தடுப்பூசியின் பெயரால் பறிப்பது எவ்வகையிலும் சரியல்ல என இத்தீர்ப்பில் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். (“Therefore, right to and the welfare policy for vaccination can never affect a major fundamental right; i.e., right to life, personal liberty and livelihood, especially when there exists no reasonable nexus between vaccination and prohibition of continuance of occupation and/or profession”, Page 5, Para 1).

இதேபோல், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவருக்கும், செலுத்திக் கொள்ளாதவருக்கும் இடையில் பாகுபாடு காட்டும் அரசாணைகளை கவுகாத்தி உயர் நீதிமன்றம் (வழக்கு எண். PIL 13/2021, தீர்ப்பு நாள் – 19.07.2021) நிறுத்தி வைத்து ஆணையிட்டுள்ளது.

இதற்கு முன்பே, நீதிபதி கே.எஸ். புட்டசாமி எதிர் இந்திய ஒன்றிய அரசு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்திய அரசமைப்பு உறுப்பு 21இல் கூறப்பட்டுள்ள தனியுரிமை (Privacy) என்பதில் ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட விருப்பத் தேர்வு, தனது உடல் மீதான ஆளுமை – ஒருமைப்பாடு ஆகியவையும் அடங்கும் எனக் கூறியுள்ளது. (“This Fundamental Right is violated as individuals are deprived of their Right to Personal Choice and Bodily Autonomy and Integrity guaranteed as a part of the Right to Privacy, under Article 21”, Justice K. S. Puttaswamy (Retd.) Vs. Union of India, WRIT PETITION (CIVIL) NO. 494 OF 2012, தீர்ப்பு நாள் : 26.09.2018).

எனவே, தனது உடல் குறித்து முடிவெடுக்கும் தனியுரிமை ஒவ்வொரு மனிதருக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் உரிமையாகும். அதனை வலுக்கட்டாயமாகப் பறித்து, ஒவ்வொருவர் மீதும் அலோபதி தடுப்பூசியைத் திணிப்பது அரசமைப்புக்கு எதிரானது! மனித உடல்கள் மீது ஆங்கில மருந்து நிறுவனங்கள் மற்றும் பெருங்குழும மருத்துவமனைகள் ஆதிக்கம் செய்வது அதிகரித்துவரும் இச்சூழலில் அத்தாக்குதலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு கம்பெனிகளின் முகவராக செயல்படுகிறது.

கொரோனோவை எதிர்கொள்ள தடுப்பூசிகளை நாடாமல் ஊட்டச்சத்தான உணவின் மூலம் உடலின் இயல்பான எதிர்பாற்றலை வளர்த்துக் கொள்ள முடிவெடுத்துக் கொள்வோரும், சித்த மருத்துவம் – ஓமியோ மருத்துவம் போன்ற மாற்று மருத்துவ முறைகளின் வழியே கொரோனோவை எதிர்கொள்ள முடிவெடுத்தோரும் – இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனியுரிமையின்படியே தங்களுக்கான மருத்துவ முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இதை இந்த அடிப்படை உரிமையை மறுத்துவிட்டு, வெறும் அலோபதி தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு என வாதிடுவது பகுத்தறிவுக்கு எதிரான பாசிசச் செயல்!

ஆங்கில அலோபதி முறையின்படியான தடுப்பூசியே கொரோனோவுக்குத் தீர்வு என வாதிட ஒருவருக்கு உரிமை உண்டெனில், தடுப்பூசி தீர்வல்ல – நிரந்தர எதிர்ப்பாற்றலே தீர்வு என மறுத்து வாதிடவும் ஒருவருக்கு உரிமை வேண்டுமல்லவா?

பன்மைத்துவத்திற்கு பெயர் போன இந்தியத் துணைக் கண்டத்தில், பல்வேறு தேசிய இனங்களின் மரபான மருத்துவ முறைகளின் பன்மைகளையும் அங்கீகரிக்க வேண்டும். தனது மதமே சிறந்தது, தனது சட்டமே சிறந்தது, தனது கருத்தே சிறந்தது, எனவே அதனை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஒருவர் நிர்பந்தித்தால் எப்படி அது பாசிசமோ, அதுபோல் தனது மருத்துவ முறை மட்டுமே சிறந்தது என அனைவரிடமும் ஒற்றை மருத்துவ முறையை வலிந்துத் திணிப்பதும் பாசிசச் செயலே ஆகும்!

மாற்று மருத்துவ முறைகளை ஏற்றுக் கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்போர், கொரோனோ பெருந்தொற்றைப் பரப்ப உதவுகின்றனர் என சிலர் குறைபட்டுக் கொள்கின்றனர்.

இப்போது, புதிதாகப் பேசப்படும் உருமாற்றமடைந்த கொரோனோவான ஓமைக்ரான், இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டோராலேயே உலகெங்கும் பரவி வருகிறது. இந்தியாவில் இதற்கு முன்னர் பரவிய டெல்டா உருமாற்ற கொரோனா, தடுப்பூசி செலுத்திக் கொண்டோரிடையே பரவியதும் குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற அறிவியல் இதழான “லேன்சட்டில்”, ஜெர்மனியின் சூழலியில் மற்றும் சுகாதார பல்கலைக்கழகப் பேராசிரியர் மருத்துவர் கன்டர் கேம்ப், “தடுப்பூசி போட்டவர்கள் தொற்றை பரப்புகிறார்கள் என்பதை அதிகரிக்கும் சான்றுகள் மெய்ப்பித்து வருகின்றன. தடுப்பூசி போடாதவர்களால் தொற்று பரவுகிறது என அவதூறு சொல்வதும் களங்கம் ஏற்படுத்துவதும் அறம் ஆகாது. சமூக நல்லிணக்கத்தை நிலைநிறுத்த – காக்க மருத்துவர்களும் அறிவியலாளர்களும் உடனடியாக, தடுப்பூசி போடாதவர்கள் மீது சொல்லப்படும் களங்கத்தை நிறுத்த வேண்டும்” என்று எழுதினார். (காண்க : https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.thelancet.com%2Fjournals%2Flancet%2Farticle%2FPIIS0140-6736(21)02243-1%2Ffulltext%3Ffbclid%3DIwAR3JPu7QGibyRfON-ULda7wLx_azShhR5sajnDRSyt0QxLyIhiMz1us9Enc&h=AT2J36VDrW40LrbU8xat84AGQRGUDZUH0-Nev-DmPK9dX0zVgUByEmH474gbkGHdhTDAod5isdPGxQtrlHmMkQAPTeLKOG6t7-pUFn5oCov8EkMjVKYU6_iCJAEK8RW57KVOwL-QlJr-urL_-LwC&__tn__=-UK-R&c[0]=AT1FBPL2JSuYYK02jxuwV8VPIYgA29z1biGN7lbUXBLPEQ_Ap0UcYakfZJbT1qXWDIcYjODXqzgbM7SgMHhvnyAum3Czxe0xbrEzQtls5ebuL99JkpijjGpBtcOSXIf62bREnAG_DeOTtWY8KbJ_1fkJyW0u_ohTn9fOAq713UNTG3g).
இவ்வாறு, தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் உலகெங்கும் கொரோனாவின் புதிய உருமாற்ற வைரசை பரப்பி வரும் நிலையில், தடுப்பூசியின் தோல்வி குறித்து விவாதிக்காமல் – கட்டாயத் தடுப்பூசி என்று திணிப்பது அறிவியலுக்கும் எதிரானது.

எனவே, தடுப்பூசியைக் கட்டாயமாக்குவது எவ்வகையிலும் சரியல்ல! தடுப்பூசி வேண்டுமென விரும்புவோர் போட்டுக் கொள்ளட்டும். போட விரும்பாதவர்கள், தங்கள் விருப்பப்படி மாற்று மருத்துவத்தை நாடிக் கொள்ளட்டும். கட்டாயத்தின் பேரில், மக்கள் அனைவரையும் அலோபதி என்ற ஒற்றை மருத்துவத்தின் கீழ் கொண்டு போய் தள்ளுவதற்கான சூழலை அரசே ஏற்படுத்தக் கூடாது. கொரோனோ பெருந்தொற்றுச் சூழலை, தனது இலாபவெறிக்கான முதலீடாக மாற்ற முயலும் மருந்து நிறுவனப் பெருங்குழுமங்களின் சதிச்செயலுக்கு துணைப் போகக்கூடாது.

எனவே புதுச்சேரி அரசு கட்டாய தடுப்பூசி ஆணையை திரும்பப் பெற வேண்டும்! தடுப்பூசியை ஏற்பதும், மறுப்பதும் அவரவர் உரிமை! அரசு பரப்புரை செய்யலாமே அன்றி, கட்டாயப்படுத்தித் திணிக்கும் பணியில் இறங்கக் கூடாது!


செய்தி உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Leave a Reply