திருவாரூர் மாவட்டம் கோட்டூர் காவல் சரகம் சித்தேரி கிராமத்தில் மறைந்த சந்திரசேகரன் என்பவரது மனைவி சந்திரா வயது 71 என்பவர் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி பக்கத்து கிராமமான சேரங்குளத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் தன் வாகனத்தில் அழைத்துச் செல்வதாகவும் உங்கள் வீட்டில் விட்டு விடுவதாக கூறி அழைத்துள்ளார்.
வரமறுத்த நிலையில் வற்புறுத்தி அழைத்து வந்துள்ளார். அவரை இரவு 7 மணி அளவில் வீட்டில் இறக்கிவிட்ட பின் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். தண்ணீர் கொடுத்து விட்டு திரும்புகையில் பின்புறமாக சென்று கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் விரைந்து சென்றுவிட்டார். அவரது அலரல் சத்தத்தை கேட்டு ஊர்மக்கள் திரண்டு பின்தொடர்ந்து விரட்டிய போது பிடிக்கமுடியவில்லை.
திரைப்படத்தில் நடப்பது போல் நடந்த செயலையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் கோட்டூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து திருத்துறைபூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் பழனியப்பன் செல்வி சர்மிளா ஆகியோர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சங்கரன், பிரான்சிஸ், பாலமுருகன், கோபிநாத், காவலர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து திருடனை தேடி வந்தனர்.
இந்நிலையில் பெருகவாழ்ந்தான் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (42) என்பவனைக் பிடித்து விசாரித்த போது, இத்திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. அவனிடமிருந்து திருடப்பட்ட நகையையும் மீட்டு கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதை அறிந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி ஆர்.பாண்டியன் கோட்டூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட தனிப்படை காவலர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து கூறி பாராட்டினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
சமீபகாலமாக வழிப்பறி கொள்ளை ஈடுபடுவது திருவாரூர் மாவட்டத்தில் ஆங்காங்கு நடந்தது. இதனை காவல்துறை தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு குழுக்களை அமைத்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சந்திராவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்து சென்ற திருடனை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்கிற நிலையில் அதை சவாலாக எடுத்துக்கொண்டு காவல் துறையினர் முழு புலன் விசாரணை செய்து கையும் களவுமாக திருடனைப் பிடித்ததோடு, திருட்டுப்போன நகையையும் கைப்பற்றியுள்ளனர். இச்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது.
மக்கள் மத்தியில் காவல்துறையினர் மீது மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.அந்த வகையில் அவர்களை பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு பாராட்டி உள்ளோம். காவலர்களுக்கு உரிய பணி பாதுகாப்பும் பணி மூப்பு அடிப்படையிலான பணி உயர்வும் உரிய காலத்தில் கொடுத்து காவல் துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களையும் நிரப்பும்போது குற்றங்கள் குறைவதற்க வழிவகுக்கும்.
நம் காவல்துறைக்கு இணை தமிழக காவல்துறையே! என்ற அடிப்படையில் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுத்து உரிய பணி பாதுகாப்புகளை காவல்துறைக்கு வழங்கிட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன், கோட்டூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜீவானந்தம், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அசோகன், எஸ்வி சேகர், ராவணன், கிருஷ்ணமூர்த்தி, பண்ணீர் செல்வம், மோகன் பப்பி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பாதிக்கப்பட்ட சந்திரா பி.ஆர் பாண்டியன் அவர்களின் மாமியார் ஆவார்.
—
செய்தி உதவி:
திரு. என். மணிமாறன்,
செய்தித்தொடர்பாளர்,
கோட்டூர்.
—
செய்தி சேகரிப்பு:
திரு. ஸ்ரீதர்,
திருவாரூர்.