Home>>செய்திகள்>>உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்.
செய்திகள்தமிழ்நாடுமாற்று திறனாளிகள்

உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்.

தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. நமது அண்டை மாநிலங்களான தெலுங்கானா, பாண்டிச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு 3000 ரூபாய் உதவித்தொகை வழங்குகின்றனர். விண்ணைமுட்டும் விலைவாசி உயர்வுக்கு மத்தியில் உடல் ரீதியாக பல்வேறு அங்க குறைபாடுகளுடன் வெறும் ஆயிரம் ரூபாயை மட்டும் வைத்துக்கொண்டு மாற்றுத்திறனாளிகள் குடும்பம் நடத்துவது என்பது இயலாத காரியம்.

எனவே, தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 3000 ரூபாயும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 5000 ரூபாயும் மாதாந்திர உதவித்தொகையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களை நடத்தியுள்ள நிலையில் தி.மு.க. தலைமையிலான அரசு ஆட்சியமைத்தது. தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்குவோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கடந்த பின்னரும் இன்றுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்குவதற்கான எவ்வித நடவடிக்கையும் மாநில அரசு மேற்கொள்ளவில்லை.

இதனால், மாற்றுத்திறனாளிகள் சொல்ல முடியாத வேதனைகளை, துன்பங்களை தினந்தோறும் சந்திக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக தமிழக அரசு நமது அண்டை மாநிலங்களில் வழங்கப்படுவதுபோல மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 3000 ரூபாயும், அதிகபட்சம் 5000 ரூபாயும் வழங்கிட வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் எட்டு மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் 2265 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். இவர்களில் 1263 மாற்றுத்திறனாளிகள் கைதாகினர்.

மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமையில் செம்பட்டியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 147 மாற்றுத்திறனாளிகளும், மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமையில் பழனியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 342 மாற்றுத்திறனாளிகளும், மாவட்ட பொருளாளர் காளீஸ்வரி தலைமையில் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 130 மாற்றுத்திறனாளிகளும், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமையில் ரெட்டியார்சத்திரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 175 மாற்றுத்திறனாளிகளும், வடமதுரை ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி தலைமையில் வடமதுரையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 160 மாற்றுத்திறனாளிகளும், சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் சின்ராஜ் தலைமையில் சாணார்பட்டியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 140 மாற்றுத்திறனாளிகளும், நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் செல்லத்துரை தலைமையில் நிலக்கோட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 114 மாற்றுத்திறனாளிகளும், திண்டுக்கல் நகர செயலாளர் ஸ்டாலின் தலைமையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 55 மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு கைதாகினர்.


P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர்
S. பகத்சிங் – மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்,
திண்டுக்கல் மாவட்டக்குழு.
தொடர்பு இலக்கங்கள்: 9360804000, 9994873253

Leave a Reply