அப்போ நான் பள்ளியில் படிச்சிட்டு இருந்தேன்..
எங்களோட பழைய வீட்டை இடித்துவிட்டு புதுசா வீடு கட்ட ஆரம்பிச்சோம், அதனால பக்கத்துல கொஞ்ச தூரத்துல தற்காலிகமா ஒரு வாடகை வீட்டில் குடியேறினோம். அந்த வீடு இருந்த இடம் ரம்மியமான ஆற்றுப்படுகை,
ஆறுன்னு ஒன்னு இருந்தா அதுக்கு பல சின்ன சின்ன கிளைவாய்க்கால்கள் இருக்கும், அது போல இருக்குற ஒரு சின்ன வாய்க்கால் பக்கத்துல எங்க வீடு.
இந்த வீடு எப்படி இருக்கும்ன்னு சொல்லனும்னா..
எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே பரிச்சயமான பொங்கல் வாழ்த்து அட்டைகளில் இயற்கை எழில் கொஞ்சும் வண்ண ஓவியங்கள் இருக்குமே அதுபோல ஒரு அழகிய கூரைவீடு. அழகுனா ஆபத்து இல்லாமலா? பாம்புகள் இரை தேடி பலமுறை வீட்டிற்குள் நுழைந்துவிடும். ஆரம்பகாலங்களில் மிகவும் பயமாய் தான் இருந்தது, பிறகு பழகிவிட்டது. பாம்புகளை லாவகமாக வீட்டை விட்டு வெளியே துரத்த கற்றுகொண்ட பிறகு பயம் போய்விட்டது.
இப்படியாய் நகர்ந்து கொண்டிருந்த நாட்களுக்கு நடுவே .ஊருக்குள் ஒரு வதந்தி பரவியது. “சாலையோர கூரை வீடுகள் திடீரென தானாக பற்றி எரிகிறது” என்றும். இதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை என்பது தான் அந்த வதந்தி.
டீ கடை முதல் மீன் கடை வரை இது தான் பேச்சு. எங்கள் வீட்டின் சுற்றுப்புறத்திலும் அதிகமாக கூரைவீடு இருந்ததால், எங்கள் தெருவில் உள்ள நண்பர்களெல்லாம் கூடிப்பேசி, இரவில் கண்விழித்து பாதுகாப்பது என்று முடிவெடுத்து அதை செயல்படுத்தவும் தொடங்கினோம்.
ஆஹா! அந்த அனுபவமே தனி. அர்த்த ராத்திரியில் நண்பர்களோடு அரட்டை அடித்துகொண்டு வீதி உலா வருவோம். நாங்கள் சோர்வடையாமல் இருக்க சில வீடுகளில் டீ காபி போட்டு தருவார்கள். அதையும் குடித்து விட்டு விடிய விடிய கதை அடித்துவிட்டு விடியற்காலையில் தூங்க செல்வோம்.
இப்படியே ஐந்து ஆறு நாட்கள் செல்ல எங்கள் பகுதியில் சந்தேகப்படும் படியான எந்த செயல்பாடுகளும் இல்லாததாலும், சரியான தூக்கமில்லாததாலும் எங்களுக்கு சோர்வும் அலுப்பும் ஏற்பட தொடங்கியபோது தான் அவர் வந்தார். இளநிலை வேதியல் படித்துக்கொண்டிருந்த எங்கள் தெருவாசி .அன்று அவரும் எங்களோடு காவல்பணியில் கலந்துகொண்டார்.
நாங்களும் வழக்கம் போல ஒருமுறை எங்கள் பகுதியை சுற்றிவந்து ஒரு இடத்தில் அமர்ந்து அரட்டையை தொடங்க பேச்சு எங்கெங்கோ சென்று இறுதியாக என் நண்பன் ஒருவன்
“அது எப்படிங்க நெருப்பு தானா எரியும் ?” என கேட்க,
அதற்கு அந்த புதியவர், ஏன் எரியாது பாசுபரசுன்னு ஒரு வேதிப்பொருள் இருக்கு அது தீப்பற்றி எரிய இப்போதுள்ள காற்றின் வெப்பநிலையே போதும் தம்பி, அதுனால தான் அதை ஆய்வகத்தில் தண்ணீருக்குள் பாதுகாப்பாய் வைப்பார்கள்.
“இதை விட சுவாரசியம் சொல்லனும்னா, பில்லி சூனியம் எடுக்குறோம்னு சொல்ற பல போலி சாமியார்கள், வரும் பக்தர்கள் கையில் மாட்டு சாணி உருண்டையை கொடுப்பார்கள். நம் வீட்டிலெல்லாம் மார்கழி மாதத்தில் கோலம் போட்டு நடுவுல வைப்போமே, அது போல ஒரு மாட்டு சாணி உருண்டையை கொடுத்து உச்சி வெயிலில் வைக்க சொல்வார்கள். சாணியில் உள்ள ஈரப்பதம் காய்ந்து வரட்டியாக மாறும் போது தானாக பற்றி எரியும். அப்படி எரிந்தால் உன்னை பிடித்த எல்லா பில்லி சூனியமும் விலகும் என்று சொல்வார்கள்.
அதுவும் எரியும் அதற்கு காரணம் போலி சாமியார்கள் அதற்குள் மறைத்து வைத்திருக்கும் பாசுபரசு தான் காரணம், என்று பக்தர்களுக்கு தெரியாதே” என்று அவர் சொல்ல நாங்கள் வியப்பு மாறாமல் அவரை பார்த்துக் கொண்டிருந்தோம், அதற்குள் வேறு ஒரு நண்பன் “அப்படியானால் இப்போது நடக்கும் இந்த குடிசைகள் எரியும் சம்பவங்களுக்கு இதுபோன்ற சாணி உருண்டைகள் தான் காரணமாய் இருக்குமோ, நமது எதிரி நாட்டு தீவிரவாதிகளின் புதிய தாக்குதலாக இருக்குமோ” என்று அவனின் கற்பனை குதிரையை விபரீதமாக தட்டிவிட, நாங்கள் எல்லாம் உரக்கச் சிரித்தோம்..
அன்று எங்களுக்கு பாஸ்பரசு பாடம் எடுத்த அண்ணன் இன்று ஒரு சிறந்த பள்ளியின் முதல்வராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
நினைவுகள் நீளும்..
–
மன்னை ராஜேஷ்.