முல்லைப் பெரியாறு வழக்கில் தமிழ்நாட்டு உரிமையை நிலைநிறுத்த தமிழக உழவர் முன்னணி ஒரு எதிர்வாதியாக இணைந்தது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசும், கேரளாவைச் சேர்ந்த பல்வேறு தனிநபர்களும் அமைப்புகளும் தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணை வலுவாக இருக்கிறது என்று உறுதியாகத் தீர்ப்பளித்தது. இதுகுறித்து ஆய்வு செய்ய, உச்ச நீதிமன்றம் அமர்த்திய வல்லுநர் குழு பல முனைகளில் மிக விரிவாக ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது.
ஆயினும், கேரள அரசும் கேரளாவைச் சேர்ந்த சில அமைப்புகளும், தனிநபர்களும் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அணுகி ஏதோவொரு காரணத்தைச் சொல்லி, அத்தீர்ப்பை முறியடிக்க முயன்று வருகிறார்கள்.
அத்தீர்ப்பை செயல்படுத்த விடாமல் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகளை தடுப்பதும், அங்கு அணை பராமரிப்புப் பணிகளுக்கு தமிழ்நாட்டு அதிகாரிகள் செல்லவிடாமல் தடுப்பதும், அணையினுடைய தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் அணைப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதற்குத் தேவையான மின்சார இணைப்பைத் துண்டிப்பதும் என தொடர்ந்து கேரள அரசு அடாவடி செய்து வருகிறது. கேரள அரசின் அப்பட்டமான இச்சட்ட மீறலை இந்திய அரசும் தட்டிக் கேட்பதில்லை.
இந்தப் பின்னணியில் இப்போது மீண்டும் கேரள அரசு மட்டுமின்றி கேரளாவைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், தனிநபர்களும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி, உச்ச நீதிமன்றத்தில் புதிதாக வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.
முல்லைப் பெரியாறில் இப்போதுள்ள தமிழ்நாட்டுக்கு சொந்தமான அணையை செயல்படுத்தாமல் நிறுத்தி, கேரள அரசின் சார்பில் புதிய அணை கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று கேரள அரசு வழக்குத் தொடுத்திருக்கிறது.
கேரள அரசும், மற்றவர்களும் அளித்திருக்கிற தனித்தனி மனுக்களை ஒன்றிணைத்து ஒரே நேரத்தில், உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து வருகிறது. இவற்றுள் டாக்டர் ஜோ. ஜோசப் மற்றும் பிறர் தொடுத்துள்ள மனுவில், நமது தமிழக உழவர் முன்னணியும் ஒரு எதிர்வாதியாக இணைந்துள்ளது.
இவ்வழக்கு இன்று (15.12.2021) விசாரணைக்கு வந்தபோது, பொது நலன் கருதி தமிழக உழவர் முன்னணி தன்னை இணைத்துக் கொண்டதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்கு தமிழ்நாடு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கேரள அரசு அனுமதிக்க ஆணையிட வேண்டுமென்று கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த இடைக்கால மனுவை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் வாதாடினர்.
இன்றைய விசாரணையில் கேரள அரசும், கேரளத்தின் சார்பில் பிறரும் வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் முல்லைப் பெரியாறு சிக்கலில் வழக்குத் தொடுத்து வருவதை நீதிபதிகள் கண்டித்தனர். ஏற்கெனவே தெளிவான தீர்ப்பு பலமுறை வழங்கப்பட்ட பிறகும், மீண்டும் மீண்டும் அணுகுவது கண்டனத்திற்குரியது என்று கடிந்து கொண்டனர்.
அதேநேரம், தமிழ்நாடு அரசு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடும்போது இது தொடர்பான வல்லுநர் குழுவுக்கு 24 மணி நேர முன்னறிவிப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். வழக்கு விசாரணை வரும் 2022 சனவரி 11ஆம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
தமிழக உழவர் முன்னணியின் சார்பில் தோழர் கி. வெங்கட்ராமன் எதிர் மனுதாரராக இணைந்துள்ளார். நம் சார்பில் வழக்கறிஞர்கள் வே. பாரிவேந்தன் மற்றும் பிரபு ஆகியோர் வழக்காடுகிறார்கள். தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்தப் பொறியாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பொறியாளர் அ. வீரப்பன் அவர்களும் எதிர்மனுதாரராக பொது நலன் கருதி இவ்வழக்கில் இணைந்துள்ளார்.
—
செய்தி உதவி:
செய்தித் தொடர்பகம்,
தமிழக உழவர் முன்னணி.