Home>>கவிதை>>பாரியன்பன் நாகராஜன்- கவிதைகள்
கவிதை

பாரியன்பன் நாகராஜன்- கவிதைகள்

 

நெஞ்சில் அவள் வந்த 

சுகம்போல் வேறு யார் வந்தும் 

எனக்கில்லை.

/

இதற்கு முன் 

நீ சொன்ன சொல்லின் 

வீரியத்தினால்; 

உன் ஆறுதல் வார்த்தைகள் 

எதுவும் என்னைச் 

சமாதானப் படுத்தவில்லை. 

/

சரிபாதி ஈசனை 

மறைத்துக் கொண்டு

பார்வதியின்

பாதி உடம்போடு

கதவருகே நின்று

எனைப் பார்க்கும்

தருணம்

அர்த்தநாரீஸ்வரியாய்

காட்சியளிக்கிறாய்

பெண்ணே!

/

ஆற்று நிறைய 

தண்ணீர்.

அள்ளிக் குடிக்க

முடியாத

நக்கிக் குடிக்கும்

நாய்வாழ்க்கையில்

நடுத்தர வர்க்கத்தினர்.

/

சிறு பொறியில்

பற்றிக்கொள்ளும் 

அக்னிப் பார்வையை

எந்த பெட்ரோல் பங்கில்

வாங்கினாய் பெண்ணே!

/

வந்தது நானென 

தெரிந்ததும்

உன் பார்வையை

கீழே சரிய விட்டாயே

அப்போது அடித்தது

என் காதலுக்கு

பம்பர் பரிசு.

/

பிஞ்சுக் கரங்கள்

அள்ளியநீரில் தன்தாகத்தை 

தணித்துக்கொண்டது நிலா!

/

தன்னை நாடி வருவோரின் 

பாதங்களின் பாவங்களைக் 

கழுவுகிறாள் கடல்தாய்.

/

நீயெனக்கு 

நண்பனென்றால் 

நானுனக்கு எதிரியல்ல.

/

மகளைத் தம் பாட்டியாகப் 

பாவித்த தகப்பன்; பேத்தியைத் 

தாயாய் நேசிக்கிறான்.

/

உன்னைப் பின்தொடரும் 

தருணங்களில்; மறந்தும் கூட 

மிதித்ததில்லை. 

பிரியத்தின் காரணமாக

உன் நிழலை.

/

உன்னை அடிக்கடி 

பார்க்க இயலாத காரணத்தால் 

எப்பொழுதும் உன் நினைப்பில் 

கிடக்கிறேன்.

/

மழை ஓய்ந்ததும் 

வீசும் குளிர்க் காற்று

சூடாகத் தேநீர்ப் பருகும் 

சுவைக்கு அடிமையாக்குகிறது.

/

வீட்டில் பத்து பேர் இருந்தாலும் 

பொறுப்பானவனுக்கே

குடும்பத் தலைவன் பதவி.

/

மழலைகள் நிறைந்த 

வீட்டில் அசையும் 

அனைத்தும் தலைகீழ்.

/

உன் விழிக் கணைகளை

என்மீது தொடுக்காதே!

போரின் யுக்தியும் களத்தின் 

இன்னபிற கோட்பாடுகள் 

எதையும் முழுமையாய்

அறியாதவன் நான்.

/

உன்னை வெறுப்பதற்கு

என்னிடம் ஒரு காரணம்கூட 

இல்லை. 

நீ வேண்டும் என்பதற்கு 

ஓராயிரம் காரணங்களைச் 

சொல்லி முடியும் என்னால்.

/

உறவுகளுக்காக திருமணம் 

ஊருக்காக கணவன் மனைவி. 

நாம் வாழும் காலம் 

காதலர்களகவே வாழ்ந்து 

விட்டுப் போவோம்.

/

என் காதலை 

அங்கீகரித்த பிற்பாடுதான் 

உன்னோடு சேர்ந்து 

ஆரம்பமாகப் போகிறது 

என் வாழ்க்கை.

/

மறக்கால் 

உன்னிடம் சொல்ல 

நினைத்த கவிதையொன்று

சொல்லாமல் கொள்ளாமல்

தொலைந்து போனது.

/

இருட்டை 

விழுங்கியது போலவே

ஆகாயத்திலிருந்த

விண்மீன் ஓட்டைகளையும், 

விழுங்கியிருந்தது பகல். 

/

நின்றது பெருமழை 

கரைதலை நிறுத்தியது மண்சுவர்.

அந்நேரம் என்னைத் 

தொட்டுப்பார்த்துக் கொள்கிறேன் 

நான்.

/

பொதி சுமந்தபடி 

மேட்டுச்சாலையைக் கடக்கிறது

மாட்டுவண்டி.

பாடிக் கொண்டிருந்த வழிப்போக்கன் 

பாட்டை நிறுத்துகிறான்.

/

இறந்த பின்பும்

இருந்து கொண்டிருக்கிறாய்

என்றென்றும் இதயத்தில் நீ.

/

ஆழ்மனங்களில்

அன்பை விதைத்து

மண்ணுக்குள் விதையாய்

இருக்கின்றாய் நிழல்படத்தில்

மௌனமாய்.

/

வாழ்க்கையை முழுதாய் 

வாழவந்து விட்டு

வானுலகத்தில் அப்படியென்ன

அவசரவேலையோ

அற்ப ஆயுள்மரணம்.

/

காற்று மரத்திடம் சொன்ன 

ரகசியத்தை; சலசலப்பில் 

அம்பலப்படுத்தும் இலைகள்.

/

மரக்கிளையில் 

ஏறி இறங்கும் அணில்

விசிலடிக்கும் குறவன்.

/

வார்த்தைகளின் 

கூடாரத்திற்குள் நுழைந்த 

கற்பனை; அழகிய கவிதையைக் 

கைப்பிடித்து வருகிறது.

/

பாதி பழத்தை 

தின்று முடித்திருந்தது 

பறவை.

பசி மயக்கத்தில் மரத்தை 

நோக்கி அம்பை எய்கிறான் 

வேடன்.

/

பெண்ணுக்கும்

மண்ணுக்கும் இடையில் 

சிலகாலம் இருப்பு.

/

மிதித்ததற்கெல்லாம்

மொத்தமாய்ச் சேர்த்து

விழுங்கி விடுகிறது மண்.

/

செவிமடல்

கருகினாலும் சுகமே

அவசரம் வேண்டாம்.

அன்பே…

அழுத்தமாய்ச் சுடச்சுட

ஒரு முத்தம் கொடு.

/

நீளும் காரணத்தின்

இடைவெளியில்

புரிதலற்ற இருமனங்கள்.

/

கடியாரத்திலும்

மணிக்கட்டிலுமாய்த் துடிக்கிறது

பல ரெட்டைநாடி.

/

 

– கவிதைகள் ஆக்கம்

பாரியன்பன் நாகராஜன்

குடியாத்தம் – 632602

கைப்பேசி; 9443139353

Leave a Reply