Home>>இந்தியா>>தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட மறுக்கும் ஒன்றிய பாசக அரசுக்கு கண்டனம்!!
இந்தியாஈழம்உலகம்சிறிலங்காசெய்திகள்தமிழ்நாடுமீன்பிடி

தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட மறுக்கும் ஒன்றிய பாசக அரசுக்கு கண்டனம்!!

தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட மறுக்கும் ஒன்றிய பாசக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 18ஆம் தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் பாக் சலசந்தி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் வந்து மீன்பிடி வலைகளை அறுத்தும், அவற்றை சேதப்படுத்தியும் கடலில் வீசியுள்ளனர். அதுமட்டுமன்றி கடற்படையின் கப்பலை அதிவேகமாக ஓட்டி வந்து தமிழக மீனவர்களை மிரட்டியுள்ளனர்.

மேலும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி மீனவர்களின் ஆறு விசைப் படகுகளையும், அதிலிருந்த 43 மீனவர்களையும் சிறைபிடித்து அவர்களை யாழ்ப்பாணம் சிறையில் தனிமைப்படுத்தி அடைத்து வைத்துள்ளனர். அதேபோல் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடிக்கச் சென்றவர்களையும் இலங்கை கடற்படையினர் அவர்களது விசைப்படகை சுற்றிவளைத்து 12 மீனவர்களையும் படகுகளுடன் சிறைபிடித்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று அங்கு சிறை வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று (20.12.2021) மேலும் 2 படகுகளுடன் 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சிறைபிடித்து யாழ்ப்பாணம் அருகே உள்ள ரண தீவு பகுதியில் அடைத்து வைத்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி தொடர்ந்து அவர்கள் கொண்டு செல்லும் படகுகளை சேதப்படுத்துவது, மீனவர்களை கைது செய்து துன்புறுத்துவது, சுட்டுக் கொல்வது என்பதை இலங்கை கடற்படை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஒன்றிய பாசக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது தமிழக மீனவர்கள் மீது உள்ள அக்கறையற்ற போக்கையே இது வெளிப்படுத்துகிறது. தமிழ்நாடு அரசும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும் கூட அதற்கான நடவடிக்கையை ஒன்றிய பாசக அரசு மேற்கொள்ளாதது வன்மையான கண்டனத்திற்குரியது.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தவும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்கவும் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரும் ஒன்றிய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீனவர்கள் உள்பட 69 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் விடுவிப்பதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு ஒன்றிய அரசை, தமிழக அரசு நிர்ப்பந்திக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.


திரு. கே. பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ(எம்),
தமிழ்நாடு.

Leave a Reply