மன்னார்குடி தூய வளனார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக மன்னார்குடி தூய வளனார் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி செபமாலை தலைமை வகித்தார். ஆசிரியை இசபெல்லா வரவேற்று பேசினார்.
மன்னார்குடி மின்சார வாரிய செயற்பொறியாளர் இராதிகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் தன் உரையில் குறிப்பிட்டதாவது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்று நாங்களே உங்களுக்கு தகவல்கள் தருகிறோம் ஏனெனில் நீங்களும் பயனடைகிறீர்கள் நாடும் வளர்ச்சி பெறுகிறது என்பதனாலேயே. வீடுகளில் அலுவலகங்களில் பொது இடங்களில் தேவையில்லாமல் ஒளிரும் விளக்குகள் சுழலும் மின் விசிறிகள் ஆகியவற்றை நிறுத்தி மின் விரயத்தை தடுக்க வேண்டும். சி.எப்.எல். விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.
குறைந்த அளவு மின்சாரமே பயன்படுத்தும் நட்சத்திர குறியீடுகள் கொண்ட மின்சார வீட்டு உபயோக பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். நல்ல காற்றோட்டம் பகல் நேர வெளிச்சம் வரக்கூடிய வகையில் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும். சூரிய ஒளி மின்னாற்றலை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் இவை போன்ற பல்வேறு செயல்பாடுகளால் மின்சாரத்தை சேமிப்பதுடன் பாதுகாப்பாக பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு இராதிகா பேசினார்.
மேலும் மின்சார சிக்கன விழிப்புணர்வு வார விழா முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற தென்றல் ( முதலிடம்)ஆர்த்தி( இரண்டாம் இடம்) தமிழ்ச் செல்வி ( மூன்றாம் இடம்) பெற்ற மாணவிகளுக்கு பரிசு கேடயங்கள் வழங்கப்பட்டது. மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தின் முதல் பிரதியை தலைமை ஆசிரியை அருட்சகோதரி ஜெபமாலை வெளியிட திருவாரூர் மாவட்ட என் எஸ் எஸ் ஒருங்கிணைப்பாளர் என் .இராஜப்பா பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் மன்னார்குடி மின்சார வாரிய பொறியாளர்கள் மதியழகன், செங்குட்டுவன், கண்ணன், ரகுபதி மற்றும் ஆசிரியைகள் மாணவிகள் கலந்து கொண்டனர் பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மேரி செல்வராணி நன்றி கூறினார்.
—
செய்தி உதவி:
திரு. என். இராஜப்பா,
ஆசிரியர்,
தேசிய மேல்நிலைப்பள்ளி,
மன்னார்குடி.