அகில இந்திய ஒதுக்கீடு: நிரப்பப்படாத மருத்துவப் படிப்பு இடங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்!
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, தமிழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நூற்றுக்கணக்கான மருத்துவ இடங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் நலனை பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது.
இந்தியாவில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயனடையும் வகையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதற்காக அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இளநிலை மருத்துவப் படிப்பில் 15% இடங்களையும், அரசு மருத்துவக் கல்லூரிகள் முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு வழங்க வேண்டும். இந்த இடங்களை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகத்தின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு ஆன்லைன் கலந்தாய்வு முறையில் நிரப்பும். இரு கட்ட கலந்தாய்வுகளில் நிரப்பப்பட்டவை தவிர மீதமுள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மீண்டும் சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் ஒப்படைக்கப்படும்.
2021&22ஆம் கல்வியாண்டு முதல் கலந்தாய்வு முறையில் மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு மாற்றம் செய்துள்ளது. அதன்படி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வுகளுக்கு பதிலாக கூடுதலாக இரு கலந்தாய்வுகளைச் சேர்த்து மொத்தம் 4 கட்ட கலந்தாய்வுகள் நடத்தப்படும். அதுமட்டுமின்றி, இரு கட்ட கலந்தாய்வுகளுக்குப் பிறகு மீதமுள்ள இடங்கள் மாநிலங்களுக்கு மீண்டும் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது கட்ட கலந்தாய்வுக்குப் பிறகு மருத்துவ இடங்கள் காலியாக இருந்தாலும் கூட அவை யாருக்கும் பயன்படாது; அவை காலியாகவே இருக்கும்.
இந்தியாவில் அதிக அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலம் என்ற முறையில் தமிழ்நாடு தான் இதனால் பாதிக்கப்படும். தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 5 ஆயிரம் எம்.பி.பி.எஸ் இடங்களில் 754 இடங்களும், 200 பி.டி.எஸ் இடங்களில் 30 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். அதேபோல், மருத்துவ மேற்படிப்பில் 2030 எம்.எஸ்/ எம்.டி இடங்களில் 1015 இடங்களும் 60 எம்.டி.எஸ் இடங்களில் 30 இடங்களும் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படும். இவற்றில் எம்.பி.பி.எஸ் படிப்புகளில் சுமார் 25%, அதாவது 180 & 190 இடங்கள், எம்.டி/எம்.எஸ் படிப்பு இடங்களில் சுமார் 15% இடங்கள், அதாவது 150 & 160 இடங்கள் நிரப்பப்படாமல் தமிழகத்திற்கு மீண்டும் வழங்கப்படும். புதிய விதிமுறைகளால் இவை இனி வழங்கப்படாது. அது தமிழகத்திற்கு பெரும் இழப்பு.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தான் இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், இது நியாயமான வாதம் அல்ல. உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சிலர் தொடர்ந்த வழக்கில் கடந்த 16.12.2021 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 4 கட்ட கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருப்பது உண்மை. ஆனால், இந்த வழக்கின் தீர்ப்பு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடங்களை வழங்கும் மாநில அரசுகளின் கருத்தைக் கேட்காமல் வழங்கப்பட்டது ஆகும். இந்த வழக்கு விசாரணையின் போது இது தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துகளை மத்திய அரசு கேட்டு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்க வேண்டும். இப்போதும் கூட இந்தத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்திருக்க வேண்டுமே தவிர, அதை தன்னிச்சையாக செயல்படுத்தியிருக்கக் கூடாது. இது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயல்.
அதுமட்டுமின்றி, மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக அறிவிக்கையின் போது வெளியிடப்பட்ட விளக்கக் குறிப்பில் (Prospectus) எவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறதோ, அவ்வாறு தான் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். இதை உச்சநீதிமன்றமும் ஒரு தீர்ப்பில் உறுதி செய்துள்ளது. நடப்பாண்டில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான அனைத்து இடங்களுக்கும் இரு கட்ட கலந்தாய்வுகள் மட்டுமே நடத்தப்படும் என்று விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், 4 கட்ட கலந்தாய்வுகளை நடத்துவது நியாயமல்ல.
எனவே, நடப்பாண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வுகள் மட்டுமே நடத்தப்பட்டு, அவற்றில் நிரப்பப்படாத இடங்கள் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிடம் வழக்கம் போல ஒப்படைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதலும் இதே வழக்கம் தொடருவதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
—
மருத்துவர் அன்புமணி ராமதாசு,
மாநிலங்களவை உறுப்பினர்,
பாட்டாளி மக்கள் கட்சி.