Home>>இந்தியா>>சல்லிக்கட்டு நடத்த புதிதாக விதித்துள்ள நிபந்தனைகள் மறைமுகத் தடையா?
இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

சல்லிக்கட்டு நடத்த புதிதாக விதித்துள்ள நிபந்தனைகள் மறைமுகத் தடையா?

சல்லிக்கட்டு நடத்த புதிதாக விதித்துள்ள நிபந்தனைகள் மறைமுகத் தடையா? என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்!


சல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் விழாக்களை வரும் பொங்கல் மற்றும் புத்தாண்டை ஒட்டி நடத்துவதற்குக் கடைபிடிக்க முடியாத பல்வேறு கட்டுப்பாடுகளைத் தஞ்சை மாவட்ட ஆட்சியர் 28.12.2021 அன்று வெளியிட்டிருக்கிறார்.

மாட்டு வேடிக்கையை பார்க்க செல்வோர் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், காளைகளைக் கொண்டுவருவோரும் அவருக்கு உதவியாக வருவோரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், விழாவிற்கு வரும் அனைவரும் கொரோனா சோதனைக்கு உட்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தமது அறிவிப்பில் கூறியுள்ளார்.

ஏறுதழுவுதல் நிகழ்சிக்கு அனுமதிகோரும் கிராமத்தினர் கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட சான்றிதழைக் காட்ட வேண்டும் என்றும் அந்த விழாவில் எதாவது விபத்துக்கள் ஏற்பட்டால் அதற்கு விழா குழுவினரே பொறுப்பேற்க வேண்டும் என்றும், அதற்கான ஒப்புதல் கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் காப்பீடுச் சான்றிதழ் (Insurance Certificate) முன்கூட்டியே விழாக்குழுவினர் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவை போன்ற பல்வேறு நிபந்தனைகளை நிறைவு செய்த பின், கிராமத்தார் விண்ணப்பம் தமிழ்நாடு அரசிற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், தமிழ்நாடு அரசுதான் அனுமதி வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அனுமதித்த பிறகே ஏறுதழுவுதலுக்கான முன்பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டுகளில் மாவட்ட ஆட்சியர்களே ஏறுதழுவுதல் அனுமதியை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டுகளில் ஏறுதழுவுதல் நடைபெறாத கிராமங்களில் புதிதாக நடத்த விரும்பினால் அதற்கு அனுமதி பெற கடினமான பல நிபந்தனைகள் போடப்பட்டுள்ளன.

இந்த நிபந்தனைகளைப் பார்த்தால் ஏறுதழுவுதல் நிகழ்ச்சிக்கான மறைமுகத் தடைபோல் தோன்றுகிறது. முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் பல்லாயிரகணக்கான மக்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்குத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற முன்நிபந்தனையோ, பொதுக்கூட்டக் களத்தில் ஒவ்வொருவருக்கும் கொரோனா சோதனை நடத்தும் நிபந்தனையோ இல்லை. ஆனால் ஏறுதழுவலுக்கு இவ்வளவு நிபந்தனைகள் போடப்படுகின்றன.

சமூக ஆதிக்க சக்திகள் தமிழர்களின் மரபு வழிப்பட்ட வீர விளையாட்டான ஏறுதழுவுதலை அனுமதிக்க கூடாது என்று தொடர்ந்து நீதிமன்ற வழியிலும் ஊடகங்கள் வழியிலும் வலியுறுத்தி வருகிறார்கள். அந்த ஆதிக்க சக்திகளின் தமிழர்பண்பாட்டு எதிர்ப்பு நோக்கங்களைத் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் 2017 சனவரியில் சென்னை கடற்கரையில் இருந்து குமரிமுணை வரை போராடி தகர்த்து சல்லிக்கட்டு உரிமையை மீட்டனர்.

அவ்வாறு மீட்கப்பட்ட தமிழர் பண்பாட்டு சல்லிக்கட்டுக்கு, செயல்படுத்த முடியாத நிபந்தனைகள் போடப்படுவதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசின் நிபந்தனைகளைதான் தஞ்சை மாவட்ட ஆட்சியர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இது பற்றி மறுஆய்வு செய்து கடைபிடிக்க முடியாத கடும் நிபந்தனைகளைக் கைவிடச் செய்யுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


செய்தி உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


செய்தி சேகரிப்பு:
திரு. கலைச்செல்வன்,
திருவாரூர்.

Leave a Reply