Home>>கட்டுரைகள்>>பேரறிஞர் சதாசிவம் பண்டாரத்தார் அவர்களுக்கு புகழ் வணக்கம்.
கட்டுரைகள்செய்திகள்தஞ்சாவூர்தமிழ்நாடுதிருவாரூர்நூல்கள்மாவட்டங்கள்வரலாறு

பேரறிஞர் சதாசிவம் பண்டாரத்தார் அவர்களுக்கு புகழ் வணக்கம்.

பேரறிஞர் சதாசிவம் பண்டாரத்தார் அவர்களுக்கு புகழ் வணக்கம் – தமிழ்ப் பேரரசு கட்சி


இன்று வரலாற்று அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் நினைவு நாள். இந்நாளில் இணையத்தில் வந்தக் குறிப்பை பகிர்கிறேன். இதில் தவறிய செய்தி அவரின் தந்தை உடையார்பாளையம் அருகில் உள்ள தத்தனூர் பகுதியில் பிறந்து மண உறவின் பொருட்டு திருப்புறம்பியம் புலம்பெயர்ந்தார்.

இணையதளக்குறிப்பு: தமிழ் வரலாற்று ஆய்வின் பிதாமகன் சதாசிவ பண்டாரத்தார்.

கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும்
1892ம் வருடம் ஆகஸ்டு மாதம் 15ம் நாள், சதாசிவப் பண்டாரத்தார் பிறந்தார். சிறந்த சிவபக்தி உடையவர்.
இவர் தினமும் பெரிய புராணம் ஓதிய பின்னரே உணவு உன்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1910ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் கற்றுத் தேர்ந்தார்.

பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் தாக்கத்தால், இவருக்கு கல்வெட்டியல் குறித்த ஆர்வம் பிறந்தது. இவர் தமது ஈடுபாட்டிற்குக் காரணமான இந்த ஆசிரியர் நாராயணசாமி ஐயரை தமது இறுதிக் காலம் வரை நன்றியோடு நினைவு கூர்ந்து வந்தார்.

பண்டாரத்தார் அவர்கள் பள்ளியில் பயின்றபோது வரலாற்றறிஞர் து.அ.கோபிநாதராயர் எழுதிய சோழவம்ச சரித்திரச்சுருக்கம் என்ற நூலைக் கண்ணுற்றுப் படிக்கும் வாய்ப்பிணைப் பெற்றார். அந்த நூலைப் பயின்ற போது சோழர் வரலாற்றை விரித்தெழுத வேண்டும் என்ற எண்ணம் இவர் மனத்தில் ஏற்பட்டது.

தமது தொடக்க கால கல்வெட்டு ஆராய்ச்சியில் இவர் தெளிவு பெறுவதற்கு அந்தச் சோழவம்ச சரித்திரச் சுருக்கம் இவருக்குப் பெரிதும் உதவியாய் இருந்தது எனலாம். 1914-ல் பண்டாரத்தார் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள குறுக்கை என்ற ஊரைச் சேர்ந்த ஆத்மலிங்கராயரின் மகள் தையல்முத்து அம்மையாரை மணந்தார். ஊரைச் சுற்றிலும் இருந்த பண்டைய கோயில்களில் காணப்பட்ட கல்வெட்டுகள் இவரது ஆர்வத்தை மேலும் தூண்டின.

பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் பாபநாசம் தாலுகா அலுவலகத்திலும், கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியிலும் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகள் (1917-1942) தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பண்டாரத்தார் அவர்கள் குடந்தையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்பொழுது 1921 – ஆம் ஆண்டில் அவரது மனைவியார் காலமானார்.

1922 – ஆம் ஆண்டில் எலத்தூரில் வாழ்ந்த சைவப்பெரியார் சதாசிவக் குருக்கள் என்பவரது மகளார் சின்னம்மாள் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். பணியில் இருந்த பொது “செந்தமிழ்” என்ற மாத இதழில் இவரது கட்டுரைகள் வெளியாகின.

1930-ல் ‘முதலாம் குலோத்துங்க சோழன்’ என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. ஏராளமான கல்வெட்டுகளை ஆராய்ந்தும் சங்க இலக்கியங்களை ஆராய்ந்தும் விரிவாக எழுதப்பட்ட இந்த நூல் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. தொல்காப்பியம் குறித்த ஆய்வுக் கட்டுரையையும் எழுதினார்.

1942-ல் அண்ணாமலை செட்டியாரின் அழைப்பை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். தனது முதல் நூலுக்கு கிடைத்த வரவேற்பால் ஊக்கம் பெற்ற இவர், தென்னிந்திய வரலாறு குறித்து ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். இவரது எழுத்துகளும் ஆராய்ச்சிகளும் இதே களத்தில் பணியாற்றிவந்த என்.எம்.வெங்கடசாமி நாட்டார், கரந்தை தமிழ்வேள் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களைக் கவர்ந்ததோடு அவர்களது பாராட்டுகளையும் பெற்றன.

‘பிற்கால சோழர் சரித்திரம்’ என்ற பெரிய நூலை எழுதினார்.

இது 1949, 1951 மற்றும் 1961-ம் ஆண்டுகளில் 3 தொகுதிகளாக வெளியானது.

தென்னிந்தியாவை ஏறக்குறைய 250 ஆண்டுகள் ஆண்டுவந்த சோழர் மன்னர்களைக் குறித்த ஆய்வு நூல் இது.
இந்த மன்னர்கள் ஒவ்வொருவரின் பிறப்பு முதல் அரசியல் நிலவரங்கள், ஆட்சி முறை, முக்கிய நிகழ்வுகள், போர்கள் என அனைத்தையும் விரிவாக எழுதியுள்ளார்.

மேலும், 2 தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களையும் படைத்தார். திருப்புறம்பியம் மற்றும் சேரமாதேவி உள்ளிட்ட பல தல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். சோழர் காலத்தை சார்ந்த 8000 கல்வெட்டுகளை ஊர் ஊராகத் தேடி சென்று படித்தார். பண்டாரத்தார் காலத்தில் வரலாற்று நூல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் இருந்தன.
.
தமிழகர்கள் வரலாற்றை தமிழர் தான் முதலில் அறிய வேண்டும் என்று அனைத்து வரலாற்று நூல்களையும் தமிழில் எழுதினார்.

பாண்டியர் வரலாறு,
காவிரி பூம்பட்டினம் வரலாறு,
செம்பியன் மாதேவி தலவரலாறு,
திருப்புறம்பிய தலவரலாறு,
தமிழ் இலக்கிய வரலாறு,

தொல்காப்பிய பாயிரம் திருகழுகுன்ற கல்வெட்டுகள், திருவிசய மங்கை கல்வெட்டுகள், திருப்புறம்பிய கல்வெட்டுகள் போன்ற பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.

இரு தமிழ் இலக்கிய வரலாறு நூல்களும், பல தல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். நம்பகத் தன்மையோடு அறிஞர் பண்டாரத்தார் தமது நூல்களை எழுதிய காரணத்தாலேயே அவரது பிற்காலச் சோழர் சரித்திரம் என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு கல்கி, சாண்டில்யன், போன்றோர் தங்களது வரலாற்று புதினங்களைப் படைத்தனர்.

இத்தகைய அரிய நூலினைப் படைத்த காரணத்திற்காகப் பண்டாரத்தாருக்குத் தாமும் தமிழ் கூறும் நல்லுகமும் பெரிதும் கடமைப்பட்டிருப்பதாகக் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி நன்றியுடன் தமது சோழர் கால சரித்திர ஆதாரங்கள் என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.

தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமையாக்கியுள்ளது. 1928 முதல் தாம் இறக்கும் வரை தமது பிறந்த ஊரான திருபுறம்பிய கோயிலில் சைவ சமய நால்வருக்கும் குருபூசை செய்து வந்தார். 1953 திரும்புறம்பியக் கோவில் குடமுழுக்கின் போது பண்டாரத்தார் தம் சொந்த செலவில் கோயில் முதல் பிரகாரத்தில் சைவ சமய நால்வர்க்கு மண்டபம் கட்டி தந்துள்ளார்.

அவரது 67வது வயதில், பண்டாரத்தார் நோயுற்று இருந்து 2.01.1960 அன்று இறக்கும் தருவாயில் அவருக்கு பால் கொடுக்கும் போது தான் சிவபெருமான் திருவடியை அடைந்து கொண்டு இருக்கிறேன் என்று கூறி உயிரை நீத்தார்.

அந்நேரம் அவர் பிறந்த ஊரான திருப்புறம்பியம் சாட்சிநாதர் கோயிலில் எரித்து கொண்டிருந்த விளக்குகள் அனைத்தும் அணைந்து விட்டன.


திரு. வா. கௌதமன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி.

Leave a Reply