Home>>இந்தியா>>கைட்ரோ கார்பன் எடுக்கும் முடிவை கைவிடுக!
திரு. தி.வேல்முருகன்
இந்தியாசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுமீன்பிடிவேளாண்மை

கைட்ரோ கார்பன் எடுக்கும் முடிவை கைவிடுக!

மீனவர்கள், விவசாயிகள், மக்கள் அனைவரையும் பாதிக்கும் திட்டங்களான எண்ணெய், எரிவாயு, மீத்தேன், கைட்ரோ கார்பன் போன்றவை, தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் நடைபெறக் கூடாது என்பது தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு. இதற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விவசாய சங்கங்கள், அரசியல் அமைப்புகள் முன்னெடுத்த போராட்டங்களில் முக்கிய பங்காற்றியுள்ளது.

அதுமட்டுமின்றி, எதிர்வரும் காலத்தில் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் எண்ணெய் – எரிவாயு, கைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கத் தடை செய்யும் வகையில் சூழலில் பாதுகாப்பு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், விழுப்புரம் முதல் கடலூர் வரை ஆழ்கடலில் கைட்ரோ கார்பன் எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஆழ்கடல் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ள ஒன்றிய அரசு, ஆய்வு செய்வதற்கான ஏலத்தை இன்று தொடங்கியுள்ளது.

கைட்ரோ கார்பன் ஆய்வுக்கான ஏலத்தில் பங்கேற்க விரும்பும் பெரும் நிறுவனங்கள், பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் மார்ச் மாத இறுதிக்குள் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கைட்ரோ கார்பனுக்கான 7ஆம் சுற்று சர்வதேச ஏலத்தில், விழுப்புரம் முதல் கடலூர் மாவட்டம் வரை ஆழ்க்கடல் பகுதியில் 8,108.69 ச.கி.மீ ஆய்வு நடத்தவும், படுகையிலிருந்து 2,800 மீட்டர் ஆழம் வரை கைட்ரோ கார்பன் எடுக்கப்படும் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

காவிரி படுகையில் 1,964 மில்லியன் டன் எண்ணெய்க்கு இணையான கைட்ரோ கார்பன் இருப்பதாக கணித்துள்ள ஒன்றிய அரசு, 1,672 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு கைட்ரோ கார்பன் எடுக்க முடியும் என கருதுகிறது.

மீத்தேன், கைட்ரோ கார்பன் என எதுவும் காவிரிப் படுகையில் எடுக்க மாட்டோம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கூறியிருந்த நிலையில், தற்போது அச்சொல்லை மீறி காவிரிப் படுகையில் கைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

காவிரிப் படுகைப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, 2020, பிப்ரவரி 20-ம் நாள் சட்டப்பேரவையில் ஒரு சட்ட முன்வரைவை நிறைவேற்றியது. இந்தப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் கைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுத் திட்டங்களுக்கான ஆய்வு, துரப்பணம், பிரித்தெடுத்தல் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சாலைகள் அமைக்கவும் தடை விதிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், தமிழ்நாடு வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட பிறகும்கூட காவிரிப் படுகைப் பகுதியில் கைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒன்றிய அரசு ஏல அறிவிப்பு வெளியிடுவது என்பது தமிழ்நாட்டையும், தமிழ்நாடு அரசு இயற்றியுள்ள சட்டத்தையும் அவமதிக்கும் செயலாகும்.

நிலப்பகுதியாக இருந்தாலும் சரி, கடல் பகுதியாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டில் எந்த பகுதிகளிலும் இயற்கை எரிவாயுத் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது. ஆழ்கடல் பகுதியில் கைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிட்டிருப்பது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கடல்வாழ் உயிரினங்களையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, கைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தக்கூடாது. தற்போது ஆய்வு மேற்கொள்ள விடுத்துள்ள ஏலம் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். கைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்த உறுதியாக நிலைப்பாட்டை அறிவிப்பதோடு, அத்திட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். இதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாயிலாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.


திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.

Leave a Reply