இல்லம் தேடிக் கல்வி ஒரு தன்னார்வ தொண்டு. கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இல்லம் தேடிக் கல்வி என்னும் திட்டத்தை அறிவித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனில் எந்தவொரு குறைபாடும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய 12 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் 6 மாதகாலம் தினமும் ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் சொல்லி கொடுப்பார்கள்.
இடைநிற்றல் விளிம்பில் நிற்கும் 1.41 லட்சம் குழந்தைகளை, ஒருவர்கூட விடாமல் பள்ளியில் சேர்த்தல். கற்றல் இடைவெளியைக் குறைக்கப் பாடல்கள், புதிர் விளையாட்டுகள், விடுகதைகள், விளையாட்டு வழிக் கணிதம், எளிய அறிவியல் பரிசோதனைகள் என ஆறு மாதங்கள் குடியிருப்புப் பகுதிகளில் இச்செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
34 லட்சம் அரசுப் பள்ளிக் குழந்தைகள், 20 பேருக்கு ஒரு தன்னார்வலர் என்ற வீதத்தில், 1.70 லட்சம் தன்னார்வலர்களையும் கூடவே தொண்டு நிறுவனங்களையும் கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அரசுப் பள்ளிக் குழந்தைகளை மையப்படுத்தி இத்திட்டம் உருவாக்கப்பட்டாலும், மையங்கள் நடைபெறும் பகுதியில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் பங்குபெற்றுப் பயன் பெறலாம் என்பது இதன் சிறப்பு. இத்திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது.
வகுப்புகள் தினமும் மாலை 5 மணி இரவு 7 மணி வரை ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட வேண்டும்.தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்படும். ஊக்கத்தொகையும் உண்டு. மாநில அளவிலான இந்த திட்டம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை நடைபெறும் என வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் தகல்வல்களுக்கு இங்கே சொடுக்கவும்
முதற்கட்டமாக கல்வி மாவட்ட அளவில் 16 ஒன்றியங்களில் தொடக்கநிலையில் 2237, உயர் தொடக்கநிலையில் 1706 என மொத்தம் 3943 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இருபது மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் வீதம் இதுவரை 3 ஆயிரத்து 377 இடங்களில் இல்லம் தேடி கல்வி மையம் துவங்கப்பட்டுள்ளது. பாடம் கற்பிக்க தன்னார்வலர்களுக்கு கையேடு வழங்கப்பட்டு வருகிறது.
தன்னார்வலர்கள்.
- வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்.
கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும் - தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்)
- யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்.
பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் ‘இல்லம் தேடிக் கல்வி’ மையங்களில் கற்பித்தல் சேவையை மேற்கொள்ள உள்ள தன்னார்வலர்கள் பதிவு செய்ய ஏதுவாக, படிவம் இவ்விணைய தளத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
தன்னார்வலராக பதிவு கீழ்கண்ட அரசு இணைய தளத்தில் உள்ள படிவத்தை நிரப்பவும்
https://illamthedikalvi.tnschools.gov.in/volunteer_registration
தமிழக அரசின் அவசியமான பாராட்டத்தக்க பயன்தரும் இத்திட்டம் வெற்றியடைவது பயன்பட்டார்களான பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் கையில் தான் உள்ளது.அரசு தன் கடமையை செய்துள்ளது. அதனை முறையாக பயன்படுத்தி மக்கள் பயன்பெறவேண்டும். 100 நாள் வேலைத்திட்டம் போல் அல்லாமல் இதில் ஏதும் குறைகளையோ , கண்துடைப்போ நடைபெறாவண்ணம் அரசு கல்வியாளர்களும் , பெற்றோர்களும் ஆசிரியர்களும் பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டும்.
செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன்
பரவாக்கோட்டை