Home>>கல்வி>>மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் ஞெகிழி விழிப்புணர்வு கூட்டம்
கல்விசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் ஞெகிழி விழிப்புணர்வு கூட்டம்

மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்டம் சார்பாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் ஞெகிழி பொருட்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் பள்ளியின் சாரதி கலை அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பாக அனைத்து பள்ளிகளிலும் ஞெகிழி இல்லா உலகம் படைப்போம் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்கிற உத்தரவின்படி இக் கூட்டம் நடைபெற்றது. பள்ளியின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் எஸ். கமலப்பன் வரவேற்று பேசினார். பள்ளியின் தாளாளர் டி.பி. ராமநாதன் தலைமை வகித்தார்.

தலைமை ஆசிரியர் டி.எல். இராதாகிருஷ்ணன் உதவி தலைமை ஆசிரியர் எம்.திலகர் திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் என். இராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் மருத்துவர் என். விஜயகுமார் கலந்து கொண்டு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அவர் தம் சிறப்பு ரையில் குறிப்பிட்டதாவது ஞெகிழி பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு அண்மையில் மீண்டும் மஞ்சள் பை திட்டத்தினை தொடங்கி உள்ளது. தற்போது பெய்யும் கடும் மழையில் தண்ணீர் ஆங்காங்கே தமிழ்நாடு முழுவதும் தேங்கி நிற்க காரணம் வடிகால்களில் ஞெகிழி பொருட்கள் அடைத்து கொண்டு இருப்பது தான். நிலத்தை நீர் நிலைகளை காற்றை பாதிக்கும் மேலும் உயிரினங்களை பாதிக்கும் ஞெகிழி என்கிற நச்சை நாம் புறந்தள்ளி இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கொரொனா விழிப்புணர்வை ஏற்படுத்திட மாணவர்கள் தொடர்ந்து பணியாற்றிட வேண்டும். உங்கள் உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள Junk Foods என்கிற Readymade உணவுகளை தவிர்த்து கடலை மிட்டாய் வேர்கடலை எள்ளு மிட்டாய் சிறுதானியங்களின் மூலம் தயாரித்த கொழுக்கட்டை கஞ்சி போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு மருத்துவர் விஜயகுமார் பேசினார். கட்டுரை போட்டியில் முதல் பரிசை மாதேஷூம் இரண்டாம் பரிசை ஏ.ஆர்.ஹர்ஷிதாவும் மூன்றாம் பரிசை ஜி. மோகேஷும் பெற்றனர்.

நேசக்கரம் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினார். நாட்டு நலப்பணித் திட்ட உதவி திட்ட அலுவலர் டி. செல்வராஜ் நன்றி கூறினார்.


செய்தி உதவி:
திரு. என். இராஜப்பா,
ஆசிரியர்,
தேசிய மேல்நிலைப் பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply