Home>>செய்திகள்>>மாட்டுப் பொங்கல் நாளில் ஊரடங்கு அறிவிப்பு. தமிழ்நாடு அரசு கட்டாயம் திரும்பப் பெற வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றம்
செய்திகள்தமிழ்நாடுவரலாறுவிளையாட்டு

மாட்டுப் பொங்கல் நாளில் ஊரடங்கு அறிவிப்பு. தமிழ்நாடு அரசு கட்டாயம் திரும்பப் பெற வேண்டும்.

“மாட்டுப் பொங்கல் நாளில் ஊரடங்கு அறிவிப்பு. தமிழ்நாடு அரசு கட்டாயம் திரும்பப் பெற வேண்டும்” என தமிழ்நாடு முதல்வருக்கு தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் திரு. வ.கெளதமன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். அதனை தங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம்.


உலகத்தின் மூத்த குடி தமிழ்க்குடி. தமிழ்க் குடியின் பண்பாட்டு பண்டிகையாக மட்டுமல்ல, அதன் முதன்மையான பண்டிகையாகவும் விளங்குவது பொங்கல் திருநாளாகும்.

மனிதகுலம் வாழ்வதற்கான வேளாண்மையின் ஆதார சக்தியாக விளங்கும் சூரியனுக்கும் மாடுகளுக்கும் நன்றி சொல்லி வணங்குபவர்கள் தமிழர்கள். அந்த நன்றியினை வெளிப்படுத்துவதற்காகவே மாட்டுப் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. எனவே அந்நிகழ்வை கொண்டாடுவதற்கு ஏதுவாக வரும் 16.01.2022 ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை திரும்பப் பெற்று அந்த நாளுக்கு பதிலாக வேறு ஒரு நாளை ஊரடங்கு நாளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் கடைபிடித்து வரும் ஒரு தொன்மை மிக்க பண்டிகையினை தள்ளி வைப்பதென்பது வரலாற்றில் இதுவே முதல்முறை. நான் யாரையும் புண்படுத்துவதற்காக சொல்லவில்லை. 15ஆம் தேதி சனிக்கிழமை வராத கொரோனா 16ஆம் தேதி ஞாயிறு என்பதற்காக மட்டும் வந்துவிட்டு அதற்கும் மறுநாள் 17ந்தேதி வராமல் போய்விடும் என்று யாராவது அறிவில் சிறந்தவர்களோ அல்லது மெத்தப் படித்த அறிவியலாளர்களோ சொன்னால் எப்படி ஏற்க முடியாதோ அது போன்றதுதான் மாட்டுப்பொங்கலை மறுநாள் தள்ளி வைக்கும் நிகழ்வும் கூட. ஒருவேளை இவ்வேண்டுகோளுக்கு பிறகும் மாட்டுப் பொங்கல் அன்று ஊரடங்கு பிரகடனப்படுத்தப் பட்டால் தமிழ்நாட்டின் வரலாற்றில் இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கப் போகும் பெரும் வரலாற்றுக் கறையினை எவராலும் துடைத்தெறிய முடியாது என்பதனை வலி மிகுந்த வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று காளைகளையும் காளைகளை அடக்கும் வீரர்களையும் இணையவழி பதிவில் இணைக்கச் சொல்வதை அரசு திரும்பப் பெற வேண்டும். படிக்காத பாமர மக்களை அலைகழிப்பதென்பது ஒருபோதும் அறமாகாது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று மைதானங்களில் ஏதாவது ஓரிடத்தில் மட்டுமே மாடுபிடி வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்பதையும் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். 300 வீரர்கள் விளையாடும் களத்தில் 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் கவலையோடு பார்க்க வேண்டியிருக்கிறது. 16ஆம் தேதி ஞாயிறு என்பதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டினை 17ஆம் தேதி திங்கட்கிழமை மாற்றி வைத்ததையும் அரசு கட்டாயம் திரும்பப்பெற வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஜல்லிக்கட்டுக்கு உள்ள வரையறையை எங்கள் மரபான “மஞ்சு விரட்டு” விளையாட்டிற்குள்ளும் திட்டமிட்டு திணித்திருப்பதை அரசு மறு வரையறை செய்ய வேண்டும். கல்யாணத்தையும் காது குத்தும் சடங்கையும் ஒரே விதிமுறையில் நடத்துவது எவ்வளவு கேலிக்கூத்தானதோ அதேபோன்றதுதான் மஞ்சுவிரட்டினை தற்போது நடத்தும் அரசின் விதிமுறையாகும். மஞ்சுவிரட்டு விளையாட்டினை “வாடிவாசல்” அமைத்து நடத்துவதென்பது தமிழர் மரபுக்கு எதிரான ஒரு மாபெரும் வன்முறை என்பதை இனியாவது அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, 16ஆம் தேதியான மாட்டுப் பொங்கல் அன்று வரும் ஊரடங்கினை உடனடியாக தளர்த்தி தமிழர் திருவிழாவினை நடத்த அனுமதிக்க வேண்டுமென்றும் மாடுகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் ஆன்லைன் பதிவினை கட்டாயப்படுத்தாமலும் வரும் 16 ஆம் தேதி அன்றே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்த வேண்டுமென்றும் மஞ்சுவிரட்டின் விதிமுறையினை எக்காரணத்தைக் கொண்டும் மீறக் கூடாது எனவும் தமிழ்நாடு அரசினை தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.


செய்தி சேகரிப்பு:
திரு. கோபிநாதன்,
மன்னார்குடி.

Leave a Reply