‘மக்கள் கண்காணிப்பகத்தின்’ மீதான அதிகார அடக்குமுறைகளை உடனடியாக ஒன்றிய பாசக அரசு திரும்பப் பெற வேண்டும்!
தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் புகழ்ப்பெற்ற மனித உரிமை அமைப்பான ‘மக்கள் கண்காணிப்பகத்தின்’ மீது மத்திய புலனாய்வுத்துறை (CBI) விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள பாசக அரசின் எதேச்சதிகாரச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளை விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து அச்சுறுத்தி அவற்றின் செயல்பாடுகளை முடக்க நினைப்பது மதச்சார்பற்ற நாட்டின் சனநாயக தன்மையின் ஆணிவேரையே அறுத்தெறிவதற்கு ஒப்பானதாகும்.
இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டு மக்கள் கண்காணிப்பகம் தனது செயல்பாடுகளை மிகவும் வெளிப்படையாக நடத்தும் சமூக அமைப்பாகும். இந்தியா முழுவதும் அரசு அதிகாரத்தின் மூலமாகவோ, குழுக்கள் மூலமாகவோ நடைபெறும் மனித வதைகளையும், மனித உரிமை மீறல்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்று, நீதியைப் பெற்றுத்தரப் போராடும் அமைப்பாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் கண்காணிப்பகம் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக ஆந்திர காடுகளில் அம்மாநில அரசால் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கான நீதியைப்பெறுவதற்கான சட்டப் போராட்டத்தையும் மக்கள் கண்காணிப்பகம் முன்னின்று நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மனித உரிமைகள் குறித்தான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
மேலும் மக்கள் கண்காணிப்பகம் தனது செயல்பாடுகளின் வெளிப்படைத் தன்மையை நிரூபிக்கும் வகையில் தணிக்கை அறிக்கையை இணையத்தளத்திலும் பதிவேற்றி வருகிறது. ஆனால் இந்திய ஒன்றியத்தை ஆளும் அரசுகளால் மக்கள் கண்காணிப்பகம் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு அதன் செயல்பாடுகளை முடக்கும் செயல்கள் தொடர்ந்து வருவது திட்டமிட்ட அதிகார அடக்குமுறையாகும்.
ஏற்கனவே கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை அன்றைய ஒன்றிய காங்கிரசு அரசினால் மக்கள் கண்காணிப்பகத்தின் கணக்குகள் முடக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்று தடைநீக்கம் பெற்றது. ஆனால் 2016ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாசக அரசு மீண்டும் மக்கள் கண்காணிப்பகத்தின் வங்கிக் கணக்கைப் புதுப்பிக்க அனுமதி மறுத்து முடக்கியது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தனக்கெதிராகத் தொடரும் முடக்கத்தை எதிர்த்து மக்கள் கண்காணிப்பகம் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவ்வமைப்பு மீது மத்திய புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது அவ்வமைப்பின் செயல்பாடுகளை முடக்கும் அச்சுறுத்தலன்றி வேறில்லை. குறிப்பாக உலக அளவில் பல்வேறு மனித உரிமை அமைப்புகளோடு இணைந்து மக்கள் கண்காணிப்பகம் முன்னெடுக்கும் மனித உரிமை மீறலுக்கு எதிரான செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இத்தகைய நெருக்கடிகளை ஒன்றிய பாசக அரசு அளிக்கிறது.
இதுவரை மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீது பொய் வழக்குத் தொடுப்பது, கைது செய்து சிறையில் அடைப்பது என தனிப்பட்ட மனிதர்கள் மீது அடக்குமுறைகளை ஏவிய ஒன்றிய பாசக அரசு, தற்போது மனித உரிமை அமைப்புகளையே முடக்கும் அளவுக்குக் கொடுங்கோன்மையை அரங்கேற்றுகிறது. அண்மையில் அன்னை தெரசா அவர்களால் தொடங்கப்பட்ட ‘மிஷனரீஸ் ஆப் சேரிட்டி’ என்ற தொண்டு நிறுவனத்தின் கணக்குகளை முடக்கி, அதற்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியவுடன், உடனடியாகப் பாசக அரசு அதனைத் திரும்பப்பெற்றது மனிதக்குலத்திற்கு எதிரான அதன் அதிகார அத்துமீறல்களை வெளிச்சமிட்டுக் காட்டக்கூடியவை.
ஆகவே, இதன் பிறகாவது ஒன்றிய பாசக அரசு இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைத் தடுக்கும் வகையிலான செயல்பாடுகளை தொடரக்கூடாது எனவும், மக்கள் கண்காணிப்பகத்தின் மீதான மத்திய புலனாய்வுத்துறை விசாரணையை உடனடியாகத் திரும்பப்பெற்று, சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
—
திரு. செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.