Home>>இந்தியா>>ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை கர்நாடக பாசக கட்சி எதிர்ப்பதா?
இந்தியாகர்நாடகாசெய்திகள்தமிழ்நாடுமாநிலங்கள்வேளாண்மை

ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை கர்நாடக பாசக கட்சி எதிர்ப்பதா?

ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்ப்பதா? என கர்நாடக பாசக அரசுக்கு சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.


ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.4,600 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, காவிரி நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்தத் திட்டத்தை துவக்குவதற்கான சட்டப்பூர்வ மற்றும் தார்மீக உரிமை தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், இந்தத் திட்டத்தை நிறைவேற்றவிட மாட்டோம் என கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ்பொம்மை கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களின் குடிநீர்த் தேவைக்காக உருவாக்கப்படும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பது முற்றிலும் நியாயமற்றதாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் பெருமளவு குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களுக்கு குடிநீர் வசதி கிடைக்கும். நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் காவிரியில் கிடைக்கும் மொத்த தண்ணீரில் அந்தந்த மாநிலங்களுக்கான அளவு பங்கீட்டு நீரினை பகிர்ந்தளித்துள்ளது. இந்த வகையில் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு 177.25 டி.எம்.சி. தண்ணீரை அளிக்க வேண்டுமெனவும் இதற்கான அளவீட்டினை பில்லிக்குண்டு என்ற இடத்தில் மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானித்துள்ளது. மேலும் அந்தந்த மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள தண்ணீரை அந்தந்த மாநிலங்கள் தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையிலேயே தமிழகத்திற்கு கிடைக்கும் தண்ணீரை அதாவது பில்லிக்குண்டுவிலிருந்து கீழே கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை எதிர்ப்பதற்கு கர்நாடக அரசுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது.

காவிரியில் தமிழகத்தின் உரிமையை கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மழை-வெள்ளம் காலத்தில் கர்நாடகத்தின் வடிகால் பகுதியாகவே தமிழகத்தை கர்நாடக அரசு அணுகுகின்றது. இது சட்டத்திற்கும் இயற்கை நீதிக்கும் எதிரானது. எனவே ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக்குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்த கர்நாடக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது என்றும், தமிழக அரசு தனக்குள்ள உரிமையின் படி இந்தத் திட்டத்தை உடனடியாக தொடங்கவேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.


திரு. கே.பாலகிருஷ்ணன்,
மாநிலச் செயலாளர்,
சிபிஐ(எம்),
தமிழ்நாடு.

Leave a Reply