மன்னார்குடி நகராட்சியில் கடந்த 2 நாள்களாக தனியார் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் வீடுகளில் குப்பைகளை பெறுவது தடைப்பட்டுள்ளது. ஏற்கனவே தெருக்களில் குப்பைகள் பல இடங்களில் தேங்கி கிடக்கிறது. இதில் தொழிலாளர்களின் போராட்டத்தினால் மக்கள் தெருக்களில் குப்பைகளை கொட்டும் அவல நிலை உள்ளது.
ஏற்கனவே நகராட்சி நிர்வாகத்தின் தவறான திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினால் தெருக்களில் இருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு குப்பைகளை டம்பர் பிளேசர் (dumper Placer) வாகனம் மூலம் அகற்றப்பட்டது, நிறுத்தப்பட்டது.
இதனால் குப்பைகள் தெருக்களில் குவிந்து கிடக்கிறது, தற்போது வேலை நிறுத்தத்தால் குப்பைகள் மேலும் குவிந்து வருகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான், நகரத்தில் சுகாதார சீர்கேடு அதிகரித்து விட்டது. நகரத்தில் டெங்கு பரவி வரும் நிலையில், முறையாக கொசு மருந்து அடிப்பதில்லை.
பாதாள சாக்கடைகளை ஏற்படும் அடைப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பதில்லை
பல இடங்களில் கழிவு நீர் வழிந்து ஓடுகிறது. மக்களிடம் வரியை (குப்பை வரி உட்பட) மட்டும் வாங்கி கொள்ளும் நகராட்சி நிர்வாகம் மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. நகரத்தில் நோய்கள் பரவ நகராட்சி நிர்வாகமே காரணமாக உள்ளது.
மேலும் தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கு காரணம் இந்த ஒப்பந்தத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளே ஆகும். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக அவர்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
நகரத்தில் குப்பைகளை தேங்காமல் இருக்க முறையாக திடக்கழிவு மேலாண்மை செய்ய வேண்டும். டம்பர் பிளேசர் வாகனம் மூலம் குப்பைகளை அகற்றும் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும், தினசரி கொசு மருந்து அடிக்க வேண்டும்.
பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவு நீர் செல்லும் பாதைகளை தினசரி தடை ஏற்படாமல் கையாள வேண்டும்.
இவற்றிற்கு தீர்வு ஏற்படுத்தாமல் மெத்தனமாக செயல்பட்டு, இந்த அவல நிலை தொடர்ந்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என அந்த கட்சியின் மன்னார்குடி நகர செயலாளர் திரு. A. ஆனந்தராஜ் அவர்கள் தன்னுடைய சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.